Saturday, January 14, 2012

யாழ்.வலிவடக்கு பிரதேச மக்கள் மீது கடற்படையினர் மேற்கொண்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்


யாழ்.வலிவடக்கு பிரதேசத்தில் தேவையற்ற பற்றைகளை அழித்து நுளம்புப் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையிலிடுபட்டிருந்த பிரதேச சபை தவிசாளர் மற்றும் பிரதேச மக்கள் மீது கடற்படையினர் மேற்கொண்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலையடுத்து கீரிமலை பிரதேசத்தில் பதற்றமான நிலை ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது. மாலை 6மணியளவில் சேந்தாங்குளம் பகுதியில் உள்ள பற்றைகளை அகற்றி நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையினை பிரதேச சபையின் ஏற்பாட்டில் அப்பகுதி மக்கள் மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் அங்குவந்த கடற்படையினர் பற்றைகளுக்கு தீயிட்டதற்காக அங்கு நின்ற மக்கள் மீது கண்முடித்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதன்பின்னர் மாலை 7.30 மணியளவில் குறித்த பகுதிக்குச் சென்ற பிரதேச சபை தவிசாளர் எஸ்.சுகிர்தன் தாக்குதலுக்குள்ளான மக்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
மேலும் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு கொடுப்பது தொடர்பாகவும் பேசியுள்ளனர். இந்நிலையில் 8மணியளவில் அந்தப் பகுதிக்கு வந்த கடற்படையினரின் 7தொடக்கம் 8பேர் கொண்ட குழுவினர் தவிசாளர் மீது உடனடியாகவே தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இது குறித்து தவிசாளரை இரவு 10மணியளவில் தொடர்பு கொண்டு கேட்டபோது. அங்கு வந்திருந்தவர்கள் கடற்படையினர். அவர்கள் சிவில் உடையில் வந்திருந்தார்கள் என்னை பிரதேச சபையின் தவிசாளர் என அடையாளப்படுத்தியிருந்தேன். எனினும் என் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
ஒரு கட்டத்தில் என் தலை மீது கொட்டனால் தாக்கப்பட்டது எனினும் நான் தலையில் தலைக்கவசம் அணிந்திருந்ததால் தப்பித்துவிட்டேன் என்னையும் எங்களோடு நின்றிருந்தவர்களையும் துரத்தி துரத்தி அடித்தார்கள்.
நாங்கள் இப்போதும் ஒரு வீட்டினுள் மறைந்திருக்கின்றோம் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனுக்கு தொடர்பு கொண்டிருக்கின்றோம் அவர் இங்கு வந்து கொண்டிருக்கின்றார். எம்மால் சுயமாக வெளியே செல்ல இயலாது வீதியில் தொடர்ந்து வாகனங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.
எனது கையில் கொட்டனால் அடித்ததில் வீக்கம் ஏற்பட்டிருக்கின்றது. இதேபோல் இளைஞர்கள் மீது பனை மட்டை கொட்டன் போன்றவற்றினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. பலர் காயமடைந்திருக்கின்றார்கள். என்றார்.
இதேவேளை சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சுமார் 10.45மணியளவில் தகவல் தருகையில் 10.20 மணியளவில் சேந்தாங்குளம் சென்று அப்பகதியிலுள்ள பாவனையற்ற வீடொன்றில் மறைந்திருந்த தவிசாளர் மற்றும் இளைஞர்களை மீட்டு வந்து சம்வம் தொடர்பில் இளவாலை பொலிஸில் முறைப்பாடு கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.
மேலும் தவிசாளரினதும் இளைஞர்கள் சிலரினதும் 4மோட்டார் சைக்கிள்களை தாக்குதலாளிகள் கைப்பற்றிச் சென்றிருக்கின்றனர். எனவே இது முற்றிலும் காட்டுமிராண்டித்தனமானதொரு செயல் என்றார்.

No comments:

Post a Comment