Saturday, March 24, 2012

தடையைத் தளர்த்தியது அமெ; பாதுகாப்புத் தளபாடங்களை இலங்கை இறக்குமதி செய்யலாம்

       news                      இலங்கைக்குப் பாதுகாப்புத் தளபாடங்களை ஏற்றுமதி செய்வதற்கான தடையைத் தளர்த்தி, வான் வழி மற்றும் கடல் வழி கண்காணிப்புக்கான கருவிகளின் ஏற்றுமதியை அனுமதித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்தது.                 
        சிறிய ரக வானூர்திகள், கமெராக்கள் மற்றும் அவற்றுக்கான பாகங்கள் போன்றவற்றுக்கு தனித்தனியாக தடையிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்களை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் நேற்று முன்தினம் வியாழக்கிழமையிலிருந்து நடைமுறைப்படுத்துவதாக அறிவித்துள்ளது.           இந்தத் தடை தளர்த்தப்பட்டதற்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில்  அமெரிக்காவினால் இலங்கை தொடர்பாகக் கொண்டுவரப்பட்ட பிரேரணை நிறைவேற்றப்பட்டமைக்கும் இடையில் எந்தவித தொடர்பும் இல்லை என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்தது.
       இந்த ஏற்றுமதி தடை 1980ஆம் ஆண்டு உள்நாட்டு யுத்தம் தொடங்கிய காலத்திலிருந்து நடைமுறையில் இருந்து வந்துள்ளது.

Wednesday, March 14, 2012

புதிய நடைமுறைகளை கண்டித்து யாழ். பல்கலையில் வகுப்புப் புறக்கணிப்பு

news
யாழ். பல்கலைக்கழகத்தில் புகுத்தப்பட்டுள்ள புதிய நடைமுறைகளை கண்டித்து இன்று காலை கலைப்பீட மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட 2ம் வருட மாணவர்களுக்கான சிறப்புக்கலை தெரிவில், இவ்வாண்டு புதிதாக புகுத்தப்பட்டுள்ள சில நடைமுறைகளைக் கண்டித்தே இந்த வகுப்புப் புறக்கணிப்பை மேற்கொண்டனர்.

கடந்தவருடம் மட்டுப்பாடுகள் எதுவுமின்றி மாணவர்கள் சிறப்புக்கலை பயில்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இவ்வாண்டு மாணவர்கள் அடைந்திருக்கவேண்டிய GPA அளவு அதிகரிக்கப்பட்டமையும் எவ்வளவு மாணவர் தகுதி பெற்றிருப்பினும், 40 மாணவர்களே சிறப்புக்கலை பயில அனுமதிக்கப்படுவர் எனப் புதிய விதிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் உரிய கவனம் எடுக்கக் கோரி கடந்த வாரம் துணைவேந்தருக்கு கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டபோதும் இதுவரை எதுவிதமான பதிலும் வழங்கப்படவில்லை. என மாணவர்களினால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

எனவே இப் பிரச்சினையில் தலையிட்டு நிரந்தரமான முடிவை உடனடியாக பல்கலை நிர்வாகம் எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்ககப்பட்டுள்ளது.

தெல்லிப்பளை பகுதியில் பாழடைந்த கிணற்றிலிருந்து வெடி குண்டுகள் மீட்பு

news
 வலிகாமம் வடக்கு தெல்லிப்பளை பகுதியில் பாழடைந்த  கிணற்றிலிருந்து இருந்து பெருமளவிலான கைக்குண்டுகள்  மீட்கப்பட்டுள்ளது.
 
தெல்லிப்பளை யூனியன் கல்லூரிக்கு பின்னால் உள்ள,பொதுமக்களுக்கு சொந்தமான காணியொன்றின் கிணற்றினை  துப்பரவு செய்யும் பணியின் போதே இக் கைக்குண்டுகள் மீட்க்கப்பட்டிருந்தன.கடந்தகால யுத்ததத்தின் பின் தற்போதே இப்பகுதியில் மீளக்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளது.
 
பொது மக்களின் பாவனைக்காக விடப்பட்டிருக்கும் குறித்த கிணறு சந்தேகத்திற்கிடமான வகையினில் காணப்பட் டதையடுத்து பொது மக்களினால் துப்பரவு செய்யும் போதே பத்திற்கும் அதிகமான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
 
இன்னும் மேலதிகமான வெடிபொருட்கள் கிணற்றினுள் காணப்படலாமென மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள் ளது. 
 
மேலதிக அகழ்வு பணி தற்போது மிகவும் தாமதமாகவே நடந்து வருகின்றதாகவும்,இராணுவத்தினரின் மேற்பார்வையி னில் தற்போது கண்ணி வெடி அகற்றல் பணிகள் ஆரம்பமாகியுள்ளதெனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.  அண்மையில் மக்கள் மீள்குடியமர அனுமதிக்கப்பட்ட இப்பகுதி கிணறொன்றினுள் மனித எலும்பு கூட்டு தொகுதிகள் 
கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. இதையடுத்தே மூழ்கடிக்கப்பட்ட கிணறுகளை துப்புரவு செய்யும் பணியினில் மக்கள் ஈடுபாடு காட்டி வருகின்றனர்.
 
குறித்த பகுதிகளில் கண்ணி வெடி அகற்றல் பணிகள் பூரணப்படுத்தப்பட்டு விட்டதாக பாதுகாப்பு தரப்பு கூறி வந்ததுடன்  மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனின் செலவில் கொக்குவிலில் தொழிற்பயிற்சி நிலையம் திறந்து வைப்பு

news
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் அனுசரணையில் நிறுவப்பட்ட தொழிற்பயிற்சி நிலையம் கொக்குவிலில் இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

வறுமைக்கோட்டிற்குட்பட்டோருக்கான வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினரின் அனுசரணையில் நிறுவப்பட்ட இத் தொழிற்பயிற்சி நிலையத்தை இன்று காலை நாடாளுமன்ற உறுப்பினரின் பாரியார் திருமதி சரவணபவன் மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார்.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனும் சிறப்பு விருந்தினராக நல்லூர் பிரதேச சபைத் தலைவர் நந்தகுமாரும் கலந்துகொண்டனர். பயிற்சித் திட்ட இணைப்பாளர்களான செ.செல்வராசா, க.ஜோதி முருகேசு மற்றும் அர்ச்சுனா சிறுவர் இதழின் ஆசிரியர் சி.மகேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இத் தொழிற் பயிற்சி நிலையத்தில் முதற்கட்டமாக 35 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தையல் பயிற்சி, ஆடை தயாரித்தல், கணணிக் கற்கை என்பன வழங்கப்படவுள்ளது.

அத்துடன், இத் துறைகளில் டிப்ளோமா முதல் பட்டப்படிப்பு வரை செல்வதற்கான வழிகாட்டல் பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன.

இத் தொழிற்பயிற்சி நலையத்திற்கான தையல் இயந்திரங்கள், கணணி, மற்றும் தளபாடங்கள் என்பன நாடாளுமன்ற உறுப்பினரினால் வழங்கப்பட்டது. அத்துடன் இத் தொழிற்பயிற்சி நிலையத்தில் கற்பதற்கு மாணவர்களிடம் கட்டணங்கள் எதுவும் அறவிடப்பமாட்டாது. என்பது குறிப்பிடத்தக்கது

அரசுக்கு ஆசி வேண்டி மணியோசை புறக்கணித்தனர் யாழ்.மக்கள்; ஒலியெழுப்புமாறு வன்னியில் நிர்ப்பந்தம்

news
 நாட்டுக்கு ஆசிர்வாதம் வேண்டி ஆலய மணிகளை ஒலிக்கச் செய்யுமாறு அரசு விடுத்த வேண்டுகோளை யாழ். மக்கள் புறக்கணித்துள்ளனர். எனினும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் போன்ற மாவட்டங்களில் படையினரின் வற்புறுத்தலின் பேரில் விசேட பூசைகளும், மணி ஓசை எழுப்பும் நிகழ்வும் நடைபெற்றன.
 
இது குறித்து மேலும் தெரியவருவதாவது:
நாட்டுக்கு ஆசிர்வாதம் வேண்டி நேற்று சகல ஆலயங்களிலும் மணி ஒலிக்க வேண்டும் என்று பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு பணித்திருந்தது.  ஆயினும் அரசின் இந்தக் கட்டளையைப் புறக்கணிக்குமாறு கூட்டமைப்பு மக்களை கோரியிருந்தது. மக்களினதும், மாவீரர்களினதும் நினைவாக மணி ஒலி எழுப்பத் தடை போட்ட அரசுக்கு ஆசீர்வாதம் வேண்டி மணி ஒலி எழுப்புமாறு கேட்பது எந்த விதத்தில் நியாயம் என்று கூட்டமைப்பு கேட்டிருந்தது. 
 
இந்த நிலையில் தமிழ் மக்கள் அரசின் கோரிக்கையை உதாசீனம் செய்து ஆலயங்களில் மணி ஒலியை எழுப்பவில்லை.  குறிப்பாக யாழ்.மாவட்டத்தில் எந்தவொரு ஆலயத்திலும் குறித்த நேரத்தில் மணி ஓசை எழுப்பப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. எனினும் படைத்தரப்பின் நிர்ப்பந்தத்தின் பேரில் யாழ். மாவட்டம் தவிர்ந்த வடக்கின் ஏனைய பகுதிகளில் பின்னர் மணி ஓசை எழுப்பப்பட்டது. அத்துடன் விசேட பூஜைகளும் வற்புறுத்தலின் பேரில் இடம்பெற்றன. 
 
கிளிநொச்சி, துணுக்காய், நெடுங்கேணி போன்ற பகுதிகளில் இத்தகைய பலவந்தப்படுத்தப்பட்டு மணி ஒசை எழுப்பப்பட்டதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.வவுனியாவில் அரச அதிபர் திருமதி சாள்ஸ் தலைமையில் பண்டாரிக்குளம் முத்துமாரி அம்மன் ஆலயத்தில் விசேட பூசைகளும் மணி ஓசை எழுப்பும் நிகழ்வும் இடம்பெற்றது. 

ஜெனிவாவில் இந்தியாவின் நிலைப்பாடு; பிரதமர் மன்மோகன் இன்று அறிவிப்பார்

news
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்துள்ள பிரேரணை தொடர்பில் இந்திய அரசின் நிலைப்பாட்டைப் பிரதமர் மன்மோகன்சிங் டில்லி நாடாளுமன்றத்தில் இன்று தெரிவிப்பார் என்று இந்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் நேற்றுத் தெரிவித்துள்ளார்.
 
அமெரிக்கா கொண்டுவந்துள்ள பிரேரணை விவகாரம் நேற்று இரண்டாவது நாளாகவும் இந்திய நாடாளுமன்றின் இரு அவைகளிலும் பெரும் புயலைக் கிளப்பியது.நேற்றுக்காலை அவை கூடியதும், கேள்வி நேரத்தை இரத்துச் செய்துவிட்டு இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பாக அமெரிக்கா கொண்டு வந்த பிரேரணை தொடர்பில் இந்திய அரசின் நிலைப்பாடு என்னவென்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், இலங்கை அரசின் போர்க்குற்றம் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் தி.மு.க., அ.தி.மு.க, பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் கட்சியைச் சேர்ந்த அனைத்து எம்.பிக்களும் ஒருமித்த குரலில் முழக்கமிட்டனர்.
 
இதனைத் தொடர்ந்து பெரும் அமளி ஏற்பட்டதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இதனால் நாடாளுமன்ற இரு அவைகளும் (ராஜ்யசபா, லோக்சபா) மதியம் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டன.
 
பிரணாப் முகர்ஜி பேச்சு
ஒரு குறிப்பிட்ட நாட்டுக்கு எதிராக, எவ்வித தீர்மானம் கொண்டுவரப்பட்டாலும், அதனை நாம்ஆதரிக்கக் கூடாது, என இந்திய மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்றுத் தெரிவித்ததையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கூச்சல்,குழப்பம் ஏற்பட்டது. சபையின் அமர்வும் நண்பகல் வரை இடைநிறுத்தப்பட்டது.இலங்கை அரசுக்கு எதிராக, ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று இந்திய நாடாளுமன்றத்தில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று வலியுறுத்தினர். இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று திமுக, அதிமுக, இடதுசாரி உறுப்பினர்கள் ஒருமித்த குரல் எழுப்பினர்.
 
மக்களவையில் கடும் அமளிக்கிடையே பேசிய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, திமுக தலைவர்கருணாநிதிக்கும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும் பிரதமர் கடிதம் எழுதியுள்ளார். எந்த ஒரு நாட்டுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டாலும், அதை நாம் ஆதரிக்கக் கூடாது.
 
எனினும், மனித உரிமைக் குழுவுடன் ஆலோசித்தப் பிறகு, இதுகுறித்து நாம் விவாதித்து முடிவு எடுக்கலாம், என்றார்.இலங்கை அரசுக்கு எதிராக ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானத்தின் மீதான இந்தியாவின் நிலைப்பாடு குறித்து பிரதமர் மன்மோகன் சிங் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இந்த விவகாரத்தில் பிரதமர் தனது மௌனத்தைக் களைய வேண்டும் என்று அவர்கள் குரல் எழுப்பினர்.
 
மாநிலங்களவை  நேற்றுக் காலை ஆரம்பமாகியவுனேயே இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானம் தொடர்பான பிரச்சினையை திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்தனர். இலங்கை அரசுக்கு எதிராக இந்தியா வாக்களிக்கும் என்று உறுதிமொழியை அரசு அளித்திட வேண்டும். தயவு செய்து உங்கள் மௌனத்தைக் களையுங்கள் என்று திமுக உறுப்பினர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை கேட்டுக்கொண்டனர்.
 
மௌனம் காப்பது சரியல்ல
அப்போது பேசிய இடதுசாரிகளின் மூத்தத் தலைவர் டி.ராஜா, இலங்கையில் நடந்த அனைத்து விட்யங்களும் இந்தியாவுக்குத் தெரியும். இந்த விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு என்ன என்பதை இப்போதே தெளிவுபடுத்த வேண்டும், என்று கேட்டார். இந்த விவகாரத்தில் இரண்டு முறை தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியும், அதற்கு பதிலளிக்காமல் மன்மோகன் மௌனம் காத்து வருவதைக் குறிப்பிட்ட அதிமுகவின் மைத்ரேயன், இனியும் மௌனம் காப்பது சரியல்ல. இந்தியா தனது நிலைப்பாட்டைச் சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
 
எனினும், தமிழக உறுப்பினர்களின் கேள்விகளையும் கருத்துகளையும் நிதானமாகக்கேட்டுக்கொண்டிருந்த பிரதமர் மன்மோகன் சிங், அதுபற்றி பதில் எதுவும் அளிக்காமல் அமரிந்திருந்தார்.இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று திமுக, அதிமுக,இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆவேசமாக தங்கள் கருத்துகளை முன்வைத்துக் கொண்டிருந்தபோது, தமிழக காங்கிரஸ் தலைவரும், நாடாளுமற்ற உறுப்பினருமான ஞானதேசிகன் எழுந்து விளக்கம் ஒன்றை தந்தார்.
 
ஞானதேசிகன் விளக்கம்
நானும் ஒரு தமிழன். உங்களுக்கு இருக்கும் அதே உணர்வு எனக்கும் உண்டு. இந்தப் பிரச்னையை உணர்வுப்பூர்மாக மட்டுமே பார்க்க முடியாது. இது இரு நாடுகளின் உறவு சம்மந்தமானது. இலங்கையில் இப்போது வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழர்களுக்கு இந்தியா தான் பொருளாதார ரீதியிலும் உதவிகள் செய்து வருகிறது. இதை எவராலும் மறுக்க முடியாது. இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்காவோ, ரஷ்யாவோ தீர்மானம் கொண்டுவரலாம். அவர்கள் ஒன்றும் தமிழர்களுக்காக உதவிகளைச் செய்வதில்லை. நாம் தான் செய்துகொண்டிருக்கிறோம். இந்தியா எடுக்கும் முடிவால், இலங்கையுடன் தூதரக உறவில் பாதிப்பு ஏற்பட்டுவிட்டால், அங்கிருக்கும் என் சகோதரர்களுக்கு உதவுவது யார்? எந்த நாடு முன்வரும். இதையெல்லாம் கருத்தில்கொள்ள வேண்டும். இந்த முடிவை பிரதமர்தான் ஆலோசித்து எடுக்க வேண்டும், என்றார் ஞானதேசிகன்.
 
கூச்சலிட்ட எம்.பிக்கள்
ஞானதேசிகன் இப்படிப் பேசிக்கொண்டிருந்தபோது, அதிமுக, திமுக, இடதுசாரி என தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கடும் கோபத்துடன் அவரைச் சாடினர். இதனால், அவையில் கடும் அமளி நிலவியது. இதைத் தொடர்ந்து, ஞானதேசிகன் தனது பேச்சை பாதியிலேயே முடித்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டார்.பின்னர் விளக்கம் அளித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பவன் குமார் பன்சால், 'அது என்ன தீர்மானம் என்பது தெரியாது. அதுபற்றி, வெளியுறவுத் துறை அமைச்சகத்துடன் பேசிவிட்டு, ஓர் அறிக்கை வெளியிடப்படும், என்றார். இதையடுத்து, தமிழக நாடாளுமற்ற உறுப்பினர்கள் தொடர்ந்து இப்பிரச்னையை எழுப்ப, கடும் அமளி காரணமாக, அவையை பிற்பகல் வரை ஒத்திவைப்பதாக, மாநிலங்களவைத் தலைவர் அன்சாரி அறிவித்தார்.
 
பின்னர் அவை ஆரம்பமானபோது தமிழகக் கட்சிகளின் கேள்விக்குப் பதிலளித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சால், இலங்கைக்கு எதிரான பிரேரணை குறித்து பிரதமர் மன்மோகன் சிங் இன்ற நாடாளுமன்றத்தில் பதில் அளிப்பார் என்று கூறினார்.
 
இதேவேளை, இலங்கைக்கு ஆதரவு அளிக்கக் கூடாது என்ற ஒருமித்த கருத்து தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் கருத்தை முற்றிலுமாகப் புறக்கணிக்க முடியாத நிலை மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன், ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான பிரேரணை தொடர்பாக முடிவு எடுக்கும் விடயத்தில் இந்திய மத்திய அரசு திக்குமுக்காடுகிறது. 
 
நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பலத்த அடி வாங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் கருத்தைப் புறக்கணிப்பதன் விளைவுகள் குறித்து மன்மோகன்சிங் அரசு தீவிரமாக ஆலோசித்தே முடிவுகளை எடுக்கும் என்று கருதப்படுகிறது.இதனால் ஜெனிவா பிரேரணை விடயத்தில் இந்தியா எடுக்கும் முடிவு இலங்கைக்கு அதிர்ச்சியானதொன்றாக அமைவதற்கு வாய்ப்புகள் உள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது. 

தருஸ்மனும் ஜெனிவாக் களத்தில்!; பிரேரணையை நிறைவேற்ற ஆசிய நாடுகளுடன் முக்கிய பேச்சு

news
 ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு எதிரான அமெரிக் காவின் பிரேரணைக்கு ஆதரவலைகளைத் திரட்டி, அதற்கு மேலும் வலுச் சேர்ப்பதற்கு ஜெனிவா இராஜதந்திரக் களத்தில் அதிரடியாகக் குதித்து சூறாவளிப் பிரசாரத்தை முன்னெடுத்துள்ள ஐ.நா. நிபுணர்கள் குழுவின் தலை வர் தருஸ்மன் முதற்கட்டமாக ஆசிய நாடுகளுடன் முக்கிய பேச்சுகளில் ஈடுபட்டு வருகின்றார் என நம்பகரமாகத் தெரியவருகின்றது.
 
மார்சுகி தருஸ்மனின் இந்த அதிரடியான நடவடிக்கையால் இலங்கைக்கு ஏற்கனவே ஆதரவைத் தெரிவித்துள்ள ஆசிய நாடுகள், தமது முடிவை மீள்பரிசீலனை செய்யக்கூடிய நிலை ஏற்படலாம் என இராஜதந்திர மட்டத்திலான தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை விவகாரம் தொடர்பிலான பிரேரணை எதிர்வரும் 22ஆம் அல்லது 23ஆம் திகதிகளில் வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது. இந்த நிலையில், தருஸ்மன் முன்னெடுத்துள்ள இந்த இராஜதந்திர நடவடிக்கையானது ஜெனிவாவிலுள்ள இலங்கை இராஜதந்திரிகளை ஆத்திரமடையச் செய்துள்ளது என்றும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
ஜெனிவா விரைந்த கையோடு பிலிப்பைன்ஸ், மலேசியா, தாய்லாந்து ஆகிய ஆசிய நாடுகளின் முக்கியஸ்தர் களுடன் பேச்சுகளை முன்னெடுத்த தருஸ்மன், இலங்கைக்கு எதிரான பிரேரணை, இலங்கை இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற சம்பவங்கள் உட்பட முக்கியமான சில விடயங்கள் தொடர்பில் கலந்துரை யாடியுள்ளார்.
 
அத்துடன், இலங்கைக்கு எதிரான பிரேரணையை ஆதரிக்குமாறு அந்நாடுகளின் பிரதிநிதிகளிடம் கோரியுள்ள தருஸ்மன், அதற்கான காரணங்களையும் உரிய முறையில் தெளிவுபடுத்தியுள்ளார் என அறிய முடியகின்றது.
 
இந்த நாடுகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பையடுத்து மனித உரிமைகள் சபையில் அங்கம் வகிக்கும் ஏனைய நாட்டு பிரமுகர்களுடன் பேச்சுகளை ஆரம்பித்துள்ளார் என ஜெனிவாவிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்ற அனைத்துவிதமான சம்பவங்களின் உண்மைத்தன்மை, ஐ.நா. அறிக்கைக்கும், இலங்கை அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைக்குமிடையிலான வேறுபாடு, நம்பகத்தன்மை உட்பட முக்கியமான சில விடயங்களை எடுத்துக் கூறி அமெரிக்காவின் பிரேரணைக்கு அவர் ஆதரவைத் திரட்டி வருகின்றார் எனக் கூறப்படுகின்றது.
 
அதேவேளை, ஐ.நா.  மனித உரிமைகள் பேரவையில் கடந்த புதன்கிழமை அமெரிக்கா சமர்ப்பித்த அறிக்கை முழுமையானதொன்றல்ல எனச் சுட்டிக்கட்டிய தருஸ்மன் குழுவினர், இலங்கையில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணையை வலியுறுத்த வேண்டும் எனக் கோரி கடிதம் எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றவை எனக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆய்வுசெய்து தமக்கு ஆலோசனை வழங்குவதற்கு ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ  மூன், தருஸ்மன் தலைமையிலான மூவரடங்கிய நிபுணர் குழுவொன்றை நியமித்து அறிக்கை பெற்றமை தெரிந்ததே

Saturday, March 10, 2012

நுணாவிலில் 3 படையினர் சூடு வாங்கிச் சாவு; அதிகாலைவேளை சம்பவம்; மூன்றாம் தரப்பு காரணமல்ல என்கிறது படைத்தரப்பு

news
 சாவகச்சேரி நுணாவில் மேற்குப் பகுதியில் நேற்று அதிகாலை துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மூன்று படையினரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
 
நுணாவில் மேற்கு கண்ணகை ஆலயம் மற்றும் முருகமூர்த்தி ஆலயம் ஆகிய இடங்களில் இருந்தே இந்த மூன்று சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. சிலாபம் தலாவத்தவைச் சேர்ந்த எம்.எஸ்.சி.பெர்னாண்டோ (வயது29), உசாப்பிட்டிய, தங்காலையைச் சேர்ந்த கே.ஐ.டீ.ஹப்புக்ஹொட்டுவா (வயது20), தியகண்ணவ, ஹல்ஹெற்றிபெலவைச் சேர்ந்த ஆர்.எம்.ஆர்.ரட்ணநாயக்க (வயது24) ஆகியோரது சடலங்களே சூட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டன.
 
கைதடிப் பாலத்திலிருந்து ரோந்து சென்ற சிப்பாய்களின் சடலங்களே இவை எனத் தெரிவிக்கப்பட்டன. முருகன் கோயிலடியில் இரண்டு சடலங்களும், அதிலிருந்து 200 மீற்றருக்கு அப்பால் உள்ள கண்ணகை அம்மன் கோயிலுக்கு அருகில் மற்றொரு சடலமும் காணப்பட்டன. லான்ஸ் கோப்ரல் ஆர்.எம்.ஆர்.ரட்ணநாயக்காவின் சடலம் அம்மன் கோயிலடியிலும், எம்.ஐ.டி.ஹப்புக்ஹொட்டுவ, எம்.எஸ்.ரி.பெர்னாண்டோ ஆகியோரின் சடலங்கள் முருகன் கோயிலடியிலும் காணப்பட்டன.
 
இந்தச் சம்பவம் தொடர்பாகச் சாவகச்சேரி பொலிஸார், சாவகச்சேரி நீதிமன்ற பதில் நீதிவான் சு.கந்தசாமி முன்னிலையில் அறிக்கை தாக்கல் செய்தனர். சம்பவ இடத்துக்குச் சென்ற பதில் நீதிவான் சடலங்களைப் பார்வையிட்ட பின்னர் யாழ். போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரிமூலம் உடற்கூற்றுப் பரிசோதனை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார். முருகன் ஆலயத்துக்கு அருகில் கடமையில் ஈடுபட்டிருந்த சிப்பாய் ஒருவர் சக படைச் சிப்பாய்கள் இருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார் என இராணுவப் பேச்சாளர் நிஹால் ஹப்பு ஆராய்ச்சி தெரிவித்தார்.
 
உயிரிழந்த படையினர் ஒருவரின் சடலத்துக்கு மரண விசாரணை, உடற்கூற்றுப் பரிசோதனை என்பன நேற்று இடம்பெற்றன. ஏனைய இரு சடலங்களினதும் மரண விசாரணை, உடற்கூற்றுப் பரிசோதனை என்பன இன்று இடம்பெறும் எனக் கூறப்பட்டது.
இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளவென அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தினர் இன்று யாழ்ப்பாணம் வருவர் எனத் தெரிவிக்கப்பட்டது. மூவரின் சடலங்களும் இன்று உறவினர்களிடம் கையளிக்கப்படும்.

மஹிந்தவைக் காப்பாற்ற நல்லைக் கந்தனிடம் கையேந்திய இளைஞர்களுக்கான நாளைய அமைப்பு

news
ஐ.நா மனிதவுரிமைப் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா சமர்ப்பித்துள்ள நிலையில்
மஹிந்த ராஜபக்‌ஷவிற்கு நல்லாசி வேண்டி தமிழ்க் கிழவனாம் நல்லூர் முருகனிடம், இளைஞர்களுக்கான நாளைய அமைப்பினர் நேற்றையதினம் வழிபாடு செய்துள்ளனர்.

யுத்தம் என்ற பெயரில் பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்களை கொன்றொழித்த பழி பாவங்களைச் சுமந்து கொண்டிருக்கும் மஹிந்தவின் நலனுக்காக தமிழ்க் கிழவன், தமிழர்களுக்கேயுரித்தான தனிப்பெருங்கடவுள் என்றெல்லாம் புகழப்படுகின்ற நல்லூர் முருகனிடம் அடிக்கடி சிங்களம் வழிபட்டு வருகிறது.

முள்ளிவாய்க்காலில் குண்டுமாரி பொழிந்து மக்களின் உயிர்களைப் பறித்த உலங்கு வானூர்திகளைக் கொண்டு நல்லூர்த் தேர்த்திருவிழாவின் போது பூ மாரி பொழிந்தது சிறிலங்கா வான்படை. மஹிந்தவின் பிறந்தநாள் முதற்கொண்டு அனைத்துக்கும் நல்லூர்க் கந்தனையே கதி என்று சரண்புகுவது வழக்காகிவிட்டது.

இளம் குடும்பஸ்தர் வெட்டிப் படுகொலை; முல்லைத்தீவில் பயங்கரம்

news
முல்லைத்தீவு சுதந்திரபுரம் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மிகக் கோரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அதே இடத்தைச் சேர்ந்த கந்தசாமி மகேந்திரன் (வயது 32) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார் நேற்றுமுன்தினம் இரவு இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:
 
சுதந்திரபுரம் காளி கோயிலடியில் இந்தக் குடும்பஸ்தர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் ஓட்டோ ஒன்றில் வந்த உயிரிழந்தவரின் மனைவியின் சகோதரரான ஒருவரே இந்தக் குடும்பஸ்தரை வாளால் வெட்டியதாகப் பொலிஸ் வாக்கு மூலத்தில் தெரிவிக்கப்பட்டது.
 
வாளால் வெட்டியவர் ஒரு பூசாரி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாள் வெட்டில் படுகாயமடைந்த இவர் தர்மபுரம் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும்போது இடைவெளியில் உயிரிளந்துள்ளதாகக் கூறப்பட்டது. அவரது சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.
 
முல்லைத்தீவுப் பொலிஸாரின் தகவலை அடுத்து கிளிநொச்சி மாவட்டப் பதில் நீதிவான் எஸ்.விஜயராணி சடலத்தைப் பார்வையிட்டார். மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் சடலத்தை உறவினர்களிடம் கையளிக்குமாறு அவர் உத்தரவிட்டார்.
 
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவுப் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் உயிரிழந்தவரின் மைத்துனராக ஆலயப் பூசகர் ஒருவரைக் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குடிசன மதிப்பீடு தொடர்பில் தகவல்கள் பெற விஷேட தொலைபேசி இலக்கங்கள் வெளியீடு நாடளாவிய ரீதியில் தற்போது நடைபெற்றுவரும் குடிசன மதிப்பீடு தொடர்பாக மேலதிக தகவல்களை அறிந்து கொள்வதற்காக விசேட தொலைபேசி இலக்கங்களை குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது. குடிசன மதிப்பீடு தொடர்பில் மக்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் தொடர்பில் சரியான தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் இத் தொலைபேசி இலக்கங்களை அறிவித்துள்ளது. குடிசன மதிப்பீடு தொடர்பில் தகவல் அறிய விரும்புபவர்கள் 0112689595, 0112688383 மற்றும் 0112683737 ஆகிய இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலம் தகவல்களினைப் பெற்றுக் கொள்ள முடியும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த பெப்ரவரி 27ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட குடிசன மதிப்பீடு எதிர்வரும் 19ம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

news
நாடளாவிய ரீதியில் தற்போது நடைபெற்றுவரும் குடிசன மதிப்பீடு தொடர்பாக மேலதிக தகவல்களை அறிந்து கொள்வதற்காக விசேட தொலைபேசி இலக்கங்களை குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.

குடிசன மதிப்பீடு தொடர்பில் மக்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் தொடர்பில் சரியான தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் இத் தொலைபேசி இலக்கங்களை அறிவித்துள்ளது.

குடிசன மதிப்பீடு தொடர்பில் தகவல் அறிய விரும்புபவர்கள் 0112689595, 0112688383 மற்றும் 0112683737 ஆகிய இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலம் தகவல்களினைப் பெற்றுக் கொள்ள முடியும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த பெப்ரவரி 27ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட குடிசன மதிப்பீடு எதிர்வரும் 19ம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Friday, March 9, 2012

வன்னியில் பறக்கும் படை; சட்டவிரோத மின் பாவனையாளர்களைப் பிடிப்பதற்கு

news
 வவுனியா மாவட்டத்தில் சட்டவிரோத மின்பாவனையாளர்களைக் கைது செய்யும் நடவடிக்கை தீவிரமாக இடம்பெற்று வருகின்றது.
 
 
கொழும்பிலிருந்து வருகை தந்துள்ள விசேட குழுவினரும் வவுனியா மின்சார சபையினரும் இணைந்தே இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
செட்டிகுளம், பூந்தோட்டம், கூமாங்குளம், உக்குளாங்குளம், நெளுக்குளம், பண்டாரிகாடு ஆகிய பகுதிகளில் இந்த அதிரடி நடவடிக்கையின் மூலம் சட்டவிரோதமான மின் பாவனையில் ஈடுபட்ட பலர் கையும் மெய்யுமாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் நீதிமன்றத்துக்கு முன்னால் மக்கள் குழுமி நின்றதை அவதானிக்க முடிந்தது.
 
சட்டவிரோத மின்பாவனையாளரிடம் தண்டமாகப் பெரும் தொகை அறவிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதிகாலை, இரவு, மதியம் என்ற காலவேறுபாடு இல்லாது, தீவிர சோதனையில் ஈடுபடும் இந்தக் குழுவினர் வாயிற் கதவு பூட்டியிருந்தாலும், வேலியூடாகப் புகுந்து பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இதேவேளை இந்தக் குழுவினர் தற்போது மீள்குடியமர்வு இடம்பெற்ற மின் இணைப்பு வழங்கப்படாத பகுதிகளான ஓமந்தை, வேலங்குளம் ஆகிய பகுதிகளிலும் நடவடிக்கை மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.  
 
மின்சார சபை தொடர்ந்து நட்டத்தில் இயங்குவதற்கு பல பகுதிகளில் வலுக் குறைந்த மின் சாரமே விநியோகிக்கப்படுவதற்கும் சட்டவிரோத மின் பாவனையாளர்களே காரணம் என்று கூறப்படுகின்றது. எனவே இத்தகைய மோசடி வேலைகளில் ஈடுபடுவோரை கையும் களவுமாகப் பிடிப்பதற்காக நாடெங்கும் விசேட பறக்கும் படைகள் நடவடிக்கையில் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முல்லையில் 51 வீதமான வாக்காளர்களுக்கு அடையாள அட்டை இல்லை; தேர்தல் திணைக்களம்

news
புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துரைப்பற்று ஆகிய பிரதேச சபைத் தேர்தல் 24ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் 51 வீதமான வாக்காளர்கள் அடையாள அட்டைகள் இல்லாமல் இருப்பதாக தேர்தல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்தக் கூடிய ஆவணங்களை கொண்டு செல்வது கட்டாயம் என தேர்தல் திணைக்களம் ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

தேசிய அடயாள அட்டை இல்லாதவர்களுக்கு தற்காலிக அடையாள அட்டை பெற்றுக் கொள்வதற்கான கால எல்லை மார்ச் 17ம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் வாக்களிக்க தேசிய அடையாள அட்டை இல்லாவிடின் தங்களது கிராம சேவகரை சந்தித்து தற்காலிக அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள முயற்சிக்குமாறு  பெப்ரல் அமைப்பு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஒரு வருடத்துக்கு பேருந்துக் கட்டணம் அதிகரிக்காது; அரசு அறிவிப்பு

அடுத்து வரும் ஒரு வருட காலப் பகுதிக்குள் பேருந்துக் கட்டண உயர்வுகள் எதுவும் மேற்கொள்ளப்படாது என போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

நேற்று பாரளுமன்றத்தில் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகளைச் சபையில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்

தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
பேருந்துக் கட்டணங்கள் இருபது சதவீதத்தினால் உயர்த்தப்பட்டுள்ளது ஆனால் அது பொது மக்களைப் பாதிக்கவில்லை. பொது மக்கள் இரு மடங்கு கட்டணத்தை கொண்டிருக்கும் சொகுசு பேருந்து வண்டிகளில் பயணிப்பதற்கு முண்டியடிப்பது இதற்குச் சிறந்த உதாரணமாக காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர்,

எரிபொருள் விலை உயர்வைத் தொடர்ந்து பஸ் கட்டணமும் இருபது சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும் அடுத்து வரும் ஒரு வருட காலத்திற்கு எதுவித கட்டண உயர்வையும் மேற்கொள்ள கோரமாட்டோம் என பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் எமக்கு உறுதியளித்துள்ளனர்.

அந்த இணக்கப்பாட்டுக்கு ஏற்பவே இக்கட்டண உயர்வுக்கு இடமளிக்கப்பட்டது. ஆனால் எதிர்வரும் ஜுலை மாதம் வருடாந்த பேருந்துக் கட்டண உயர்வு அதிகரிக்கப்படமாட்டாது. அதற்கும் சேர்த்தே தற்போது கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

யாழில் 14 வயதுடைய பாடசாலை மாணவியைக் காணவில்லை: பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு


யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மகளிர் பாடசாலை மாணவி ஒருவர் நேற்று காணாமல் போயுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழில் அமைந்துள்ள மகளிர் கல்லூரியொன்றில் தரம் 8இல் கல்வி பயிலும் மாணவியான சுதன் திஸ்ஷா (வயது 14) என்ற மாணவியே காணாமல் போயுள்ளதாக, இன்று வெள்ளிக்கிழமை குறித்த மாணவியின் பெற்றோர் கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
குறித்த மாணவி வழமை போல நேற்றுக் காலை பாடசாலைக்கு சென்றார் எனவும் இன்று வரை அவர் வீட்டுக்கு திரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாணத்தில்
பல இடங்களில் தேடியும் மாணவி கிடைக்கவில்லை எனவும் குறித்த மாணவியின் பெற்றோர் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பாடசாலை மாணவி காணாமல் போனமை தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய நிலையத்திலும் இன்று முறையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ். - கொழும்பு பழைய இரும்பு வியாபாரம் படையினரால் தடுத்து நிறுத்தம்


யாழ்.மாவட்டத்திலிருந்து பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் தென்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்த பழைய இரும்பு வியாபாரம் எந்தவிதமான முன்னறிவித்தலுமின்றி படையினரால் நிறுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில் இரும்பு வியாபாரிகள் இன்று பலாலியில் இராணுவத்தினருடன் சந்திப்பொன்றை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாவட்டத்திலிருந்து இராணுவத்தினரின் கண்காணிப்புடன், பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்று முன்னர் தென்பகுதிக்கு பழைய இரும்பு கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்தது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் முக்கிய இரும்பு விற்பனை நிலையங்களுக்குச் சென்ற படையினர் இனிமேல் இரும்பு கொண்டு செல்ல முடியாதென கூறியிருக்கின்றனர்.
இதையும் மீறி லொறிகளில் கொண்டு செல்லப்பட்ட இரும்புகள் ஆனையிறவு சோதனைச் சாவடியில் வைத்து நிறுத்தப்பட்டு பாதுகாப்பு அமைச்சின் புதிய அனுமதிக் கடிதத்தை தருமாறு படையினர் கேட்டுள்ளனர். ஆனால் அது இல்லாமையினால் லொறிகள் திருப்பி அனுப்பப்பட்டிருக்கின்றது.
இந்த நிலையில், முன்னர் வழங்கப்பட்ட பாதுகாப்பு அமைச்சின் அனுமதிக் கடிதத்திற்கு மேலாக புதிய அனுமதிக் கடிதம் பெறப்படவேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது,
இது குறித்து இராணுவத்தினரிடம் சந்தித்தபோதும் எந்தவித நிவாரணமும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் பழைய இரும்பு சேகரிக்கும் இடங்கள் மற்றும், விற்பனை செய்யும் இடங்களில் இரும்புகள் தேங்கிக் கிடப்பதை காணமுடிகின்றது.

கிளிநொச்சியில் வீதி விபத்து! இளைஞனொருவன் சம்பவ இடத்திலேயே பலி


கிளிநொச்சி கந்தசுவாமில் ஆலயத்திற்கருகில் இன்று மாலை இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் முரசுமோட்டையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
இன்று மாலை 1.30மணியளவில் கிளிநொச்சி நகரிலிருந்து லொறியும், குறித்த இளைஞர் மோட்டார் சைக்கிளிலும் பயணித்துள்ளனர்.
இந்த நிலையில் வீதி புனரமைப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால், லொறியை முன்னால் விட்டு தான் பின்னால் வருவதற்கு குறித்த இளைஞர் முற்பட்டுள்ளார். இதன்போது மோட்டார் சைக்கிளின் ஒரு பக்க கைபிடி லொறியுடன் மோதியுள்ளது.
இதனையடுத்து, குறித்த இளைஞர் நிலைதடுமாறி லொறியின் பின்புறச் சக்கரத்திற்குள் வீழ்ந்துள்ளார். இதனால் சக்கரம் இளைஞர் மீதேறி சம்பவ இடத்திலேயே, முரசுமோட்டையை சேர்ந்த பத்மசிங்கம் லதீபன் (வயது22) என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். வீதி புனரமைப்புச் செய்யப்படும் இடங்களில் முறையான போக்குவரத்து ஓழுங்குகள் இன்மையே விபத்திற்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ். குறிகட்டுவானில் தமிழ் இளைஞன் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன்: பா.உ ஜயலத் ஜயவர்தன


யாழ்ப்பாணம், குறிகட்டுவான் - நெடுந்தீவுக்கு இடையிலான படகுச் சேவை மிகவும் முக்கியமானதொன்றாகும். இந்த சேவையில் சாதாரண மக்களே அதிகமாக நன்மையடைகின்றனர்.
யாழ் குடா நாட்டிலிருந்து ஏனைய தீவுகளுக்குச் செல்லவும் இந்த படகுச் சேவை பெரிதும் பயனளிக்கின்றது. யுத்தத்தை எதிர்கொண்டு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்த காலத்தில் விசேடமாக வட பகுதி மக்களுக்கு பயன்மிக்கதொரு சேவையை இந்த படகுச் சேவை வழங்கியிருந்தது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை இந்த பயணிகள் படகுச் சேவையை இயக்குகின்ற படகு செயற்பாட்டாளரான தமிழ் இளைஞன் மீது பௌத்த பிக்கு மேற்கொண்ட தாக்குதல் தொடர்பான தகவல்களை ஊடகங்கள் வாயிலாக நான் தெரிந்துகொண்டேன்.
இந்த தாக்குதலை நான் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன். மக்களின் பிரயாணங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த படகு ஊழியர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.
எந்த தனிப்பட்ட கோபம் இருப்பினும் அதற்காக சட்டத்தைக் கையில் எடுப்பது பிழை. இந்த அதிர்ச்சியான சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு யாழ் மாவட்டத்துக்குப் பொறுப்பான பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் நான் கேட்டுக் கொள்கின்றேன்.
இந்தத் தாக்குதலை நடத்திய நபரை சட்டத்துக்கு முன்னால் நிறுத்துவது பொலிஸாரது கடமையாகும். இவ்வாறான சம்பவங்களால் நெருக்கடிகளை எதிர்கொள்வது தமிழ் மக்களே என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டொக்டர் ஜயலத் ஜயவர்தன வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.