
தற்போது அறுவடை செய்யப்பட்டு வரும் பெரும்போக(2011/2012) நெல்லினை விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்யவென 28.5 பில்லியன் ரூபாவினை அரசு ஒதுக்கியுள்ளது. இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் நேற்று கிடைத்துள்ளதாக அரச ஊடக தகவல்கள்தெரிவிக்கின்றன.
இதன்படி, ஒரு கிலோ சம்பா ரூ.30, ஒரு கிலோ சிவப்பு நாடு ரூ.28 என்ற உத்தரவாத விலைகளில் விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கென தனியார் துறை (ரூ.21.5 பில்), கூட்டுறவு அமைப்புக்கள் (ரூ.2 பில்), நெல் சந்தைப்படுத்தல் சபை (ரூ.1.28 பில்) மற்றும் மாவட்ட செயலகங்கள் (ரூ.1.01 பில்) ஆகியவற்றுக்கு சுமார் 28.5 பில்லியன் ரூபா பெறுமதியான கடன்களை பெற்றுக் கொடுப்பதன் மூலம் விவசாயிகளிடம் இருந்து நெல்லினை கொள்வனவு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த ஆண்டில் மொத்தமாக 4.55 மில்லியன் மெற்றிக் தொன் அரிசி உற்பத்தி செய்யப்படும் என எதிர்
பார்க்கப்படுகின்றது. இதில், உள்நாட்டு நுகர்வு போக (3.54 மி.மெ.தொ), சுமார் 1.01 மில்லியன் மெற்றிக் தொன் அரிசி மிகையாக நிரம்பல் செய்யப்படும் என அரசு மதிப்பிட்டுள்ளது. இந்த மிகை நிரம்பலினை ஏற்றுமதி செய்யவென வெளிநாட்டு ஒப்பந்தக்காரர்களிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தற்போது அரசாங்கம் அறிவித்துள்ள உத்தரவாத விலைகள் தொடர்பாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். "என்ணை விலை உயர்வினால் எமது உற்பத்தி மற்றும் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துள்ளன. அத்துடன் எமது நெல் உற்பத்தியில் ஒரு சிறு பகுதியினையே அரசு கொள்வனவு செய்து வரும் நிலையில், உத்தரவாத விலைகள் குறைந்த மட்டத்தில் இருக்கும் போது தனியாரும் குறைந்த ஒரு மட்ட விலையிலேயே நெல்லினை கொள்வனவு செய்ய முன் வருவார்கள்!" என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
'எனவே, அரசு அறிவித்துள்ள உத்தரவாத விலையினை, குறைந்தபட்ஷம் 40 ரூபாவாக இருக்க அரசு ஆவனை செய்ய வேண்டும்' என விவசாயிகள் அரசாங்கத்தினை கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment