Monday, January 30, 2012

யாழ்ப்பாணத்திலுள்ள மக்கள் சிரித்துக் கொண்டே அழுகிறார்கள்; அவர்களின் முகங்களில் துன்பரேகை இழையோடுவதைக் கண்டேன் என்கிறார் கலாம்


news
 யாழ்ப்பாணத்தில் நான் கண்ட காட்சி மனதை உருக்கும் விதத்தில் இருந்தது. எல்லோர் முகத்திலும் புன்னகை இருந்தாலும், அவர்களது புன்னகைக்குப் பின் சொல்ல முடியாத ஏதோ ஒரு துன்பரேகை இழையோடுவதை கண்டு ணர்ந்தேன். இலங்கையில் நடக்கக் கூடாத சம்பவம் நடந்து முடிந்துவிட்டது.
 
 இவ்வாறு இந்திய முன்னாள் ஜனாதி பதியும் அணு விஞ்ஞானியுமான அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.இலங்கைத் தமிழ் மக்கள் ஒரு ஜனநாயக நாட்டில், மதிப்புடனும், சுயமரியாதையுடனும் வாழ தன்னாலான அனைத்து முயற்சிகளையும் எடுக்க தன்னுடைய இலங்கைப் பயணமானது ஒரு முன்னோடியாக இருக்கும் என்று நம்புகிறார் எனவும் 13 பிளஸ் அரசமைப்புச் சட்டத்திருத்தத்தை விரைவில் நடைமுறைப்படுத்த இலங்கை ஜனாதிபதியை வலியுறுத்தினார் எனவும் அவர் தெரிவித்தார்.
 
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த அவர், தனது அமைதிப்பயணம் குறித்து  தமிழக நாளேடு ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
 
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு :
தோல்வியில்லாமல் வெற்றியில்லை. கண்ணீர் எப்போதும் கரிப்பாகவே இருக்கும். ஆனாலும், ஓரு சில சமயங்களில் அது இன்பமாகவும் இருக்கும். அந்த இன்பம் பெறவேண்டுமானால் பல புயல்களைக் கடக்கும் மன உறுதியைப் பெறவேண்டும்.கடந்த 21 ஆம் திகதி இரவு இலங்கை ஜனாதிபதியைச் சந்தித்தபோது இரண்டு முக்கியமான விடயங்களைப் பற்றி அவரிடம் பேசினேன்.
 
அதாவது, மும்மொழித் திட்டத்தை முழுமையாக இலங்கையின் அனைத்து பகுதிகளுக்கும் செயற்படுத்துவதில் இந்தியாவின் ஆதரவைத் தெரிவித்து விட்டு, இலங்கையின் 13 ஆவது அரசமைப்புத் திருத்த சட்டத்தை மேம்படுத்தி, 13 பிளஸ் என்ற அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை விரைவில் இலங்கையில் நடைமுறைப்படுத்துமாறு இலங்கை ஜனாதிபதியை வலியுறுத்தினேன்.
 
இலங்கையில் உள்ள எல்லா மாகாணங்களையும், அதாவது, வடக்குக் கிழக்கு, தெற்கு, மத்திய, மேல் மாகாணங்களையும் மற்ற மாகாணங்களையும் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட  சுயநிர்ணய அதிகாரம் கொண்ட மாகாணங்களாக மாற்றியமைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும்  வலியுறுத்தினேன்  என்றார்

50வீதமான மாணவர்கள் பரீட்சை முடிவுக்காக காத்திருக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விண்ணப்பம் கோருகிறது

news
50 வீதமான மாணவர்கள் மீள்திருத்தத்திற்கு விண்ணப்பித்துள்ள நிலையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் நேற்றைய தினத்தில் இருந்து கோரப்பட்டுள்ளன.

2011/2012 கல்வி ஆண்டுக்கு மாணவர்களை  பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் காமினி சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க முடியும்.

இவ் விண்ணப்பபடிவத்தை தெளிவாக உரிய முறையில் பூர்த்தி செய்து மூன்று வார காலப்பகுதியினுள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்குக் கிடைக்கக் கூடிய வகையில் அனுப்பி வைக்க வேண்டும். அதற்குப் பின்னர் கிடைக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இம்முறை 23 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தெரிவானவர்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதமளவில் பல்கலைக்கழகங்கங்களுக்கு அனுமதிக்கப்படுவர்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் படி மாவட்ட நிலை அடிப்படையில் பல குளறுபடிகள் காணப்பட்டன. இதனால் மாணவர்கள் மத்தியில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

இதனையடுத்து விடைத்தாள் மீள்திருத்தத்திற்கு என்று சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.  பரீட்சைக்கு தோற்றியவர்களில் 50% மாணவர்கள் மீள்திருத்தத்திற்கு விண்ணப்பித்து விட்டு பெறுபேற்றிற்காக காத்திருக்கின்றனர். ஆனால் இவர்களுக்கான முடிவுகளை பரீட்சைகள் திணைக்களம் இதுவரை அறிவிக்கவில்லை.

இந் நிலையில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுவதும், அனுப்புவதற்கான திகதியை வரையறை செய்வது என்பதும் எவ்வாறு சாத்தியமாகும், லாபம் உழைக்கும் நோக்குடன் பரீட்சைகள் திணைக்களம் செயற்படுகின்றதா என்ற ஐயப்பாடும் பலர் மத்தியிலும் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மின்சார சபையினால் தீர்த்தது அபாயம்

news
 யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில் நீண்டகாலமாக முறிந்து விழும் நிலையில்  காணப்பட்ட மின்கம்பம் தற்போது புதிய மின்கம்பமாக மாறியுள்ளது.

முறிந்து விழும் நிலையில் இருந்த கம்பத்தினூடே மின்சார விநியோகம் அப்பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டிருந்ததோடு பயணிகள் மத்தியில் அச்சத்ததையும் தோற்றுவித்திருந்தது.

யாழ். பருத்தித்துறை வீதியில் இருபாலைச் சந்திக்கு அருகில் உள்ள பேச்சியம்மன் ஆலயத்தை அண்மையில் உடைந்து அபாயம் விளைவிக்கும் நிலையில் மின்கம்பம் ஒன்று காணப்படுவதாக உதயன்ஒன்லைன் கடந்த 8ம் திகதி செய்தி வெளியிட்டிருந்தது.

இதனையடுத்து உடைந்துவிழும் நிலையில் நீண்டகாலமாகக் காணப்பட்ட  மின்கம்பத்தை அகற்றி இலங்கை மின்சார சபை புதிய கம்பமொன்றை  நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் இறக்குமதி தொடர்பில் இலங்கைக்கு இராஜதந்திர பிரச்சினை: ஈரான் இலங்கைக்கு உதவுவதாக அறிவிப்பு

news
எரிபாருள் இறக்குமதி தொடர்பில் இலங்கை இராஜதந்திர பிரச்சினையை எதிர்நோக்கி வருகிறது. இந்நிலையில் தொடர்ந்தும் நாட்டின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய தயாரகவே உள்ளதாக ஈரான் இலங்கைக்கு அறிவித்துள்ளது.

ஆறு மாத காலப்பகுதியில் நடைமுறைக்கு வரும் வகையில் ஈரான் மீது அமெரிக்கா நிதி வழங்கல் சட்டத்தைக் கொண்டு வரும் சட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளார்.

இதேவேளை தொடரந்தும் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வதாக இந்தியாவுக்கும் ஈரான் அறிவித்துள்ளது. எனினும் இந்தியா அமெரிக்காவின் தடையை கருத்தில் கொள்ளாது தெஹ்ரானுக்கு அதன் அதிகாரிகளை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.
இந்நிலையில், ஈரான் மீது அமெரிக்கா கொண்டுவரும் நிதிவழங்கல் தடை இலங்கையை பாதிக்கும் விதம் குறித்து தெளிவற்ற நிலைப்பாட்டடை இலங்கை அரசு கொண்டுள்ளது.

இதனையடுத்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், அமெரிக்க தூதரகத்துடன் இதுகுறித்து தெளிவைப் பெற முயன்றுள்ளார்.

எனினும், இந்தவிடயத்தை எதிர்வரும் 2 ஆம் திகதி அமெரிக்காவின் திறைசேரி உதவிச் செயலாளர் லுகி புரோனினுடன் மாத்திரமே கலந்துரையாட முடியும் அமெரிக்க தூதரக ஊடக பணிப்பாளர் கிறிஸ்டீல் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா ஈரான் மீது விதிக்கும் நிதிவழங்கல் தடை காரணமாக இலங்கைக்கு பாதிப்பு ஏற்படுமா? என்பது குறித்து அவரே கருத்துக் கூறக்கூடியவர் என்று டீல் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ஈரானிடமிருந்து 80 வீதமான மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது. இதற்காக 4 மாத கடன் சலுகையையும் இலங்கை பெற்றுக்கொள்கிறது.   

பாடசாலை மாணவர்கள் ஐவரை ஊர்வலமாக ஏற்றிச் சென்று அவமானப்படுத்திய மூவர் கைது!- மட்டக்களப்பில் சம்பவம்


மட்டக்களப்பு மீராவோடைப் பகுதியில் பாடசாலை செல்லும் சிறுவர்கள் ஜந்து பேர்களை வாகனமொன்றில் ஏற்றி ஊர்வலமாக அழைத்துச் சென்று அவமானப்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டில் முன்று சந்தேக நபர்களை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை  மேற்கொண்டுள்ளனர்.
நேற்று மாலை இடம்பெற்றுள்ள இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
வீடொன்றில் வளர்த்து வந்த புறாக்களை வீட்டு உரிமையாளரின் அனுமதியின்றி எடுத்துச் செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிறுவர்களை, குறித்த வீட்டு உரிமையாளர் அடியாட்களின் உதவியுடன் பொலிஸாரின் அனுமதியின்றி கைது செய்து துன்புறுத்தி, உடலில் காயங்களை ஏற்படுத்தியுள்ளனர். மேலும் அச்சிறுவர்களை வாகனத்தில் ஏற்றி ஊர்வலமாகவும் கொண்டு சென்றுள்ளனர்.
இதனை அறிந்து பொதுமக்கள் பொலிஸாருக்கு  அறிவித்ததையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று சந்தேக நபர்களை கைது செய்து சட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுவர்களை வாழைச்சேனை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் சீனா திருப்பியளித்த காணியை இந்தியா கொள்வனவு


கொழும்பில் மிகவும் ஆடம்பர ஹோட்டலை நிர்மாணிக்கும் முகமாக காணியொன்றுக்கு இந்தியாவின் ஐடிசி குழுமம், இலங்கை அரசாங்கத்துக்கு முற்பணத்தை செலுத்தியுள்ளது.
கொழும்பு காலி முகத்திடலில் அமையவுள்ள இந்த ஹோட்டலுக்காக 50 வீத கொடுப்பனவான 73.5 மில்லியன் டொலர்களை இந்திய நிறுவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் 300 மில்லியன் டொலர்கள் ஒதுக்கீட்டில் இந்த ஹோட்டல் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்தக்காணியை சீனாவின் சி.ஏ.டி.ஐ.சி நிறுவனம் கொள்வனவு செய்தபோதும் காணி விற்பனை தொடர்பான கொள்கையில் மாற்றம் கொண்டு வரப்பட்டமையால், இலங்கை அரசாங்கம் முற்பணக் கொடுப்பனவை சீன நிறுவனத்துக்கு திருப்பியளித்தது.
இந்தக்காணி ஏற்கனவே ஹொங்கொங்கின் சங்க்ரி லா குழுமம் ஹோட்டல் அமைப்புக்காக காலி முகத்திடலில் கொள்வனவு செய்துள்ள காணியை ஒட்டிய வகையில் அமைந்துள்ளது.

நாவலப்பிட்டியில் இளம் மகள்களை தகாத தொழிலில் ஈடுபடுத்திய தாய்


நாவலப்பிட்டி பிரதேசத்தில் இளம் மகள்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தாய் ஒருவர் பற்றி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
15 மற்றும் 17 வயதுடைய மகள்களை ஆண்களுக்கு விற்பனை செய்து அதன் மூலம் குறித்த தாய் வருமானம் ஈட்டி வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
சொந்த வீட்டிலேயே குறித்த இரண்டு பிள்ளைகளும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு வந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நாவலப்பிட்டியைச் சேர்ந்த இரண்டு வர்த்தகர்களினால் இந்தச் சிறுமிகள் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட போது, பொலிஸார் அந்த வீட்டை சுற்றி வளைத்துள்ளனர்.
செல்வந்தர்கள் வீட்டுக்கு வந்து தம்மை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருவதாக இரண்டு சிறுமிகளும் தெரிவித்துள்ளனர். ஒரு சிறுமி பாடசாலைக்கு செல்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வந்தர்களை திருப்தி படுத்துவதற்காக ஒருவருக்கு தலா ஆயிரம் ரூபா என்ற ரீதியில் தாய் பணம் வாங்குவதாக சிறுமிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட சிறுமிகள் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட வர்த்தகர்கள் இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த தீர்மானித்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கடனட்டை மோசடியில் ஈடுபட்ட இலங்கை அகதி உள்ளிட்ட இருவர் திருச்சியில் கைது


இந்திய - திருச்சிராப்பள்ளி பகுதியில் கடனட்டை மோசடியில் ஈடுபட்ட இலங்கை அகதி ஒருவர் உட்பட இருவர் திருச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சிராப்பள்ளி மத்திய பஸ் நிலையம் அருகே ஒரு வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று அதிகாலை 3.30 மணிக்கு இந்த மையத்துக்குள் மர்ம மனிதர்கள் 2 பேர் புகுந்தனர்.
அவர்கள் நீண்டநேரமாக வெளியே வராமல் பணம் எடுத்தனர். அதன்பிறகு சிறிது நேரத்தில் மீண்டும், மீண்டும் பணம் எடுத்துக் கொண்டே இருந்தனர்.
இதனால் சந்தேகம் அடைந்த ஏ.டி.எம். காவலாளி இது பற்றி பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார். உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பொலிஸார், அந்த மர்ம மனிதர்களை மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள், கருமண்டபம் ஐ.ஓ.பி.நகரை சேர்ந்த கணேசன் (வயது 18), கருமண்டபம் வசந்தநகரை சேர்ந்த ராகவன் (வயது 30) என்பது தெரியவந்தது.
அவர்களிடம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் ரொக்கப்பணம், 1 தங்க சங்கிலி, 1 பிரேஸ்லெட், 4 மோதிரங்கள் மற்றும் 14 வெளிநாட்டு போலி ஏ.டி.எம்.கார்டுகளும் இருந்தன, அவற்றை பொலிஸார் கைப்பற்றினார்கள்.
அவர்களிடம் இருந்த ரொக்க பணம் அந்த ஏ.டி.எம்.மையத்தில் இருந்து எடுத்த பணம் ஆகும். இதுபோன்று வேறு ஏ.டி.எம்.களிலும் போலி ஏ.டி.எம் கார்டுகள் மூலம் லட்சக்கணக்கில் இவர்கள் பணம் எடுத்து இருப்பார்கள் என்று தெரிகிறது.
இது தவிர அவர்கள் பயன்படுத்திய ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்ட 2 பேரில் ராகவன் இலங்கை அகதி ஆவார். இவருடைய உறவினர்கள் லண்டன், அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் வசிப்பதாகவும் தெரிகிறது.
பிடிபட்டவர்கள் கூறுகையில், எங்களுடைய உறவினர்கள் வெளிநாட்டில் இருக்கிறார்கள், அவர்களுடைய வங்கி கணக்கில் இருந்து எங்கள் வீட்டு செலவுக்கு பணம் எடுத்தோம் என்றனர்.
இருப்பினும் அவர்களிடம் 14 ஏ.டி.எம். கார்டுகள் எப்படி வந்தன என்று பொலிஸார் துருவி, துருவி விசாரித்தனர். அப்போது கே.கே.நகரில் உறவினர் ஒருவர் தங்கி இருப்பதாக கூறினர்.
இதையடுத்து பொலிஸார் அந்த நபரை தேடி கே.கே.நகர் சென்றனர். ஆனால் அந்த நபர் அதற்குள் வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது.
இதனை தொடர்ந்து இந்த கொள்ளையில் யார்? யாருக்கு தொடர்பு உள்ளது. 14 போலி வெளிநாட்டு ஏ.டி.எம். கார்டுகள் கிடைத்தது எப்படி? என்று பிடிபட்ட 2 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த கொள்ளையில் தொடர்புடைய மேலும் 4 பேரை பொலிஸார் தேடி வருகிறார்கள்.

கிண்ணியாவில் குடும்பஸ்தர் தூக்கிட்டு தற்கொலை



திருகோணமலையின் கிண்ணியா கூபா நகர் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பத் தகராறு காரணமாகவே தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் 2 பிள்ளையின் தந்தையான சஹாப்தீன் முகம்மது ரமீஸ் (வயது - 26) என்பவராவர்.
மரண விசாரணைகள் கிண்ணியா வைத்தியசாலையில் இடம்பெற்ற பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Wednesday, January 25, 2012

மிகத்திறமையான கல்லூரி மாணவியை நான் யாழ்ப்பாணத்தில் சந்தித்தேன்!- அப்துல் கலாம்


நான் யாழ்ப்பாணத்துக்கு சென்று இந்துக் கல்லூரி மாணவர்களை சந்தித்து உரையாடிய போது  மாணவி ஒருவர் பொறுப்புள்ள பிரஜையாக திகழ நான் என்ன செய்யவேண்டும் என என்னிடம்  கேள்வியெழுப்பினார். அவ்வாறு திறமைவாய்ந்த மாணவியை நான் முன்னர் ஒருபோதும் சந்தித்தது கிடையாது என்று இந்திய முன்னாள் ஜனாதிபதி டாக்டர். அப்துல் கலாம் தெரிவித்தார். 
அம்மாணவி தொடுத்த வினாவிற்கு பதிலளித்த நான் அந்த  பதிலைத் திருப்பிக் கூறுமாறு தெரிவித்தேன். உடனடியாக அவர் அதனை திருப்பிக்கூறினார். அவ்வாறு மிகத் திறமையான மாணவியை நான் சந்தித்தது யாழ்ப்பாணத்தில் தான் என்று இந்திய டாக்டர். அப்துல் கலாம் தெரிவித்தார்.
கொழும்பில் ஊடகவியலாளர்களை நேற்று சந்தித்து உரையாடியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசிய அப்துல் கலாம், தான் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், மற்றும் இந்துக் கல்லூரியில் சந்தித்து உரையாடிய மாணவர்களின் திறமை தொடர்பாகவும் புகழாரம் சூட்டினார்.
நேற்று முன்தினம் காலை இந்துக் கல்லூரிக்கு விஜயம் செய்த அப்துல் கலாமிடம் ஆறு மாணவ மாணவிகள் கேள்விகளை எழுப்பினர். அதில் சிறு மாணவன் ஒருவன் ஐயா நீங்கள் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தமையையிட்டு நான் மிகவும் பெருமையடைகின்றேன். உங்களைப் போன்று நானும் வரவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என வினவினான்.
அந்த மாணவனது இந்தத் திடீர் வினா சபையார் அனைவரையும் கவர்ந்ததுடன் பலரது கரகோசத்தையும் பெற்றது. அதற்கு பதிலளித்த அப்துல் கலாம் நீ கடின உழைப்பாளியாகவும் இலட்சிய தாகமுடையவனாகவும் நேர்மையாளனாகவும் விடாமுயற்சி உடையவனாகவும் இருந்தால் உனது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்றார்.
இதேவேளை மாணவி ஒருவர் பொறுப்புள்ள பிரஜையாக திகழ நான் என்ன செய்ய வேண்டும் என எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கலாம்,
உனது இதயத்தில் நேர்மை இருந்தால் உனது செயலில் அழகு இருக்கும். செயலில் அழகு இருந்தால் வீட்டில் அமைதி இருக்கும். வீட்டில் அமைதி இருந்தால் நாட்டில் அமைதி இருக்கும். நாட்டில் அமைதியிருந்தால் உலகில் சமாதானம் இருக்கும் என ஆங்கிலத்தில் அவர் கூறியதை அப்படியே குறித்த மாணவி திருப்பிக் கூறியதை டாக்டர் கலாம் மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்தார்.
(Where there is righteousness in the heart there is beauty in the character
When there is beauty in the character there is harmony in the home
When there is harmony in the home there is an order in the nation
When there is an order in the nation there is peace in the world)

பெற்றெடுத்த குழந்தையை கொன்று புதைத்த தாய் பொலிஸாரால் கைது!- கிளிநொச்சியில் சம்பவம்


பெற்ற குழந்தையை கொன்று வீட்டின் பின்புறமாக புதைத்தார் என்ற குற்றச்சாட்டில் கிளிநொச்சி கண்ணகை புரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து தெரியவருவதாவது:
நேற்று முன்தினம் அதிகாலை குறித்த பெண் தான் பெற்றெடுத்த பெண் குழந்தையை கொலை செய்து வீட்டின் பின்புறமாக குழி தோண்டிப் புதைத்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக கிராம மக்கள் அறிந்து கிராம சேவகருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
சம்பவ இடத்துக்குச் விரைந்து சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் குழி தோண்டிப் குழந்தை புதைக்கப்பட்ட இடத்தையும் அடையாளம் கண்டனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிவான் பெ.சிவகுமார் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.
அதை அடுத்து சிசுவின் சடலத்தைத் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்துமாறு நீதிவான் உத்தரவிட்டார். அத்துடன் குறித்த பெண்ணையும் கைது செய்ய உத்தரவிட்டார்.
சம்பவ இடத்து விசாரணைகளின் போது தனக்கு 41 வயது எனவும் நான்கு பிள்ளைகளுடன் இருப்பதாகவும் கணவருக்கு 61 வயது எனவும் குறிப்பிட்டார்.
தனக்கு போருக்கு முன்னரும் இறந்த நிலையில் குழந்தை பிறந்தபோது வீட்டின் பின் புறத்திலே அடக்கம் செய்ததாகவும் தெரிவித்தார். 

அதிவேக நெடுஞ்சாலை திறந்து மூன்று மாதங்கள்! இதுவரை 86 விபத்துகள் பதிவு


இலங்கையின் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை திறக்கப்பட்டு மூன்று மாதங்களேயான நிலையில்  இதுவரை  86 வாகன விபத்துக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், இம் மாதத்தில் மட்டும் விபத்துகள் சடுதியாக அதிகரித்துள்ளன.
இந்த நெடுங்சாலையில் கடந்த ஆண்டு 50 விபத்துக்களும் இவ் ஆண்டு 36 விபத்துக்களுமாக இதுவரை 86 விபத்துக்கள் பதிவாகியுள்ளன.
அதிவேக நெடுஞ்சாலையில் போக்குவரத்து விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் வாகனம் செலுத்திய காரணத்திற்காக இதுவரை 9070 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அவற்றுள் இவ் ஆண்டு மட்டும் 999 பேருக்கெதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நெடுஞ்சாலை கடந்த நவம்பர் மாதம் 28ம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவினால் திறந்து வைக்கப்பட்டது. திறந்து வைக்கப்பட்டு 24 மணிநேரத்திற்குள்ளாகவே விபத்து ஒன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் வர்த்தகர்களை மிரட்டி லஞ்சம் வாங்கிய வன இலாகா அதிகாரி கைது!


மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட இலுப்படிச்சேனையில் அமைக்கப்பட்டுள்ள வட்டார வன இலாகா காரியாலயத்திறப்பு விழாவுக்கென வர்த்தகர்களிடம் இலஞ்சம் வாங்கிய வன இலாகா அதிகாரி ஒருவரை இலஞ்ச தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
நேற்று கைதுசெய்யப்பட்ட அதிகாரி ஏறாவூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வட்டார வன இலாகா காரியாலயம் திறக்கப்படவுள்ளததாகவும் அதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு உதவுமாறு கோரி வலுக்கட்டாயமாகவும் மிரட்டியும் இவர் இலஞ்சம் பெற்றுள்ளார்.
களுவாஞ்சிகுடி தொடக்கம் வாழைச்சேனை வரையிலான பகுதிகளுக்கு சென்றுள்ள அவர் அங்குள்ள மர ஆலை உரிமையாளர்கள், பலகை விற்பனையாளர்கள், மரம் வெட்டுபவர்கள், விறகு விற்பனை செய்பவர்கள் ஆகியோரை மிரட்டியுள்ளார்.
தங்கள் நிகழ்வுக்கு பணம் வழங்கவில்லையென்றால் தங்களின் வியாபார உரிமங்களை இரத்துச்செய்யப்போவதாகவும் அவர் வர்த்தகர்களை மிரட்டியுள்ளார். 
அத்துடன் மர ஆலை உரிமையாளர்களிடம் 20 ஆயிரம் ரூபாவும், பலகை விற்பனையாளர்களிடம் 7500 ரூபாவும் மரம் வெட்டுபவர்களிடம் 10 ஆயிரம் ரூபாவும் விறகு விற்பவர்களிடம் 3000 ரூபாவும் இவர் கட்டாய இலஞ்சம் பெற்றுள்ளார்.
இது தொடர்பில் ஏறாவூர் பிரதேச வர்த்தகர் ஒருவர் கொழும்பு இலஞ்ச தடுப்பு பிரிவுக்கு தெரியப்படுத்தியதையடுத்து குறித்த வர்த்தகரின் வீட்டில் மறைந்திருந்த இலஞ்ச தடுப்பு பிரிவினர் குறித்த வன இலாகா அதிகாரி இலஞ்சம் பெறும்போது கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

ஒற்றைக் கையுடன் பாடசாலை வாகனம் செலுத்திய நபர் பொலிஸாரினால் கைது


கை ஊனமுற்ற நிலையில் பாடசாலை வாகனம் செலுத்திய சாரதியொருவரை கொழும்பு 07 பகுதியில் வைத்து பொலிஸார் கைதுசெய்துள்ளனர்
கைது செய்யப்பட்ட சாரதி நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, ஒரு இலட்ச ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேசசாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பொலிஸ் அதிகாரிகளால் நேற்று பிற்பகல் குறித்த வாகனம் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் ஒற்றைக் கையுடன் வாகனம் செலுத்தியமை கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த சாரதியும் வாகன அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக ரத்துச்செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான சம்பவங்களை தவிர்த்து கொள்வதற்கும் பாடசாலை மாணவர்களை பாதுகாப்பதற்கும் பெற்றோரின் ஒத்துழைப்பு பொலிஸாருக்கு அவசியம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தபால் மா அதிபர் இராஜினாமா!- மறுக்கிறார் தபால் மா அதிபர் திஸாநாயக்க


தபால் மா அதிபர் எம்.கே.பீ.திஸாநாயக்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால்,  தபால் மா அதிபர் எம்.கே.பீ.திஸாநாயக்க, தான் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக  வெளிவந்த செய்தியை மறுத்துள்ளார்.
தபால்மா அதிபர் பதவி விலகியுள்ளதாக வெளிவந்துள்ள செய்திகளை அடுத்து உதயன் ஒன்லைன் அவருடன் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், இதுவரை தான் பதவியை இராஜினாமா செய்யவில்லை எனவும், ஆனால் தற்போது வகிக்கின்ற பொறுப்புக்கு மாறான வேறு ஒரு பொறுப்புக்கு மாற்றலாகிச் செல்ல  எண்ணியுள்ளதாகவும் தெரிவித்தார்.
தபால்மா அதிபருக்கு எதிராகவும், தபால் திணைக்களத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு எதிராகவும் தபால் ஊழியர் சங்கம் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்திலும், சத்தியாக்கிரகப் போராட்டமொன்றிலும் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 43 பேர் கைது


திருகோணமலைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட இந்தியக் கடற்றொழிலாளர் 43 பேர் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை புல்மோட்டைக் கடற்பரப்பில் வைத்து இன்று காலை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் பயன்படுத்திய ஆறு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இந்தியக் கடற்றொழிலாளர்கள் அவர்களிடம் கைப்பற்றப்பட்ட படகுகள் மற்றும் மீன்களுடன் திருகோணமலை துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டு முதற்கட்ட விசாரணைகளின் பின்னர் திருகோணமலை காவற்றுறையினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
அதேவேளை, இருநாடுகளுக்கும் இடையே மீனவர்கள் பிரச்சினையினால் ஏற்படும் உரசல்கள் மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

இந்திய இலங்கை கடற்பரப்பில் இருநாட்டு மீனவர்களும் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வாக, இருவரும் வாரத்தில் மூன்று நாள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லலாம் என இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர் அப்துல் கலாம் கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்தக் கருத்துக்கு இந்திய மீனவர்கள் ஆதரவு தெரிவித்தாலும், இலங்கை தரப்பினர் அது ஏற்றுக்கொள்ளக்கூடிய யோசனை அல்ல என்று கூறியுள்ளனர்.
திருகோணமலையில் கைது செய்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் யாரையும் சந்திக்க செய்தியாளர்கள் அனுமதிக்கப்படவில்லை என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டாம் இணைப்பு
இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அந்த செய்தி வருமாறு:
நாகை மாவட்டம் அக்கரைப்பபேட்டையை சேர்ந்த 42 மீனவர்கள் 6 படகுகளில் கடந்த 22ம் திகதி மீன்பிடிக்க சென்றனர். கோடியக்கரை பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த போது இலங்கை கடற்படைகைது செய்து திருகோணமலை முகாமிற்கு அழைத்து சென்றனர்.
இதனையறிந்த மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக எச்சரித்திருந்தனர். இந்நிலையில் தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்த தகவலை இலங்கையிலிருந்து கைது செய்யப்பட்ட மீனவர்களின் உறவினர்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இன்று இரவோ அல்லது நாளையோ நாகை வந்து சேர்வார்கள் என தெரிகிறது.
என இந்திய ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இது குறித்து இலங்கையின் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவிக்கையில், மீனவர்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை எனவும் பொலிஸ் நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

வடக்கில் நீர்ப்பாசனத் திட்டங்கள் அபிவிருத்தி செய்யப்படவேண்டும்- ஜே.வி.பி


வடக்கில் உள்ள நீர்ப்பாசனக்குளங்கள் மற்றும் நீர்வடிகால்கள் புனரமைக்கப்பட வேண்டும் என்று ஜே.வி.பி கோரியுள்ளது.
தம்மை நேற்று சந்தித்த யு.எஸ்.எய்ட் நிறுவன அதிகாரிகளிடம் ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.
2014 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் குறித்து யு.எஸ்.எய்ட் அதிகாரிகள் இதன்போது கலந்துரையாடினர்.
இந்தநிலையில் வடபகுதியில் நீர்ப்பாசனத்திட்டங்கள் மற்றும் அபிவிருத்திகள் என்பவற்றில் அரசியல்வாதிகளினால் ஊழல்களும், முறைகேடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. அதற்கு இடம்தராத வகையில் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டும் என்று சோமவன்ச அமரசிங்க வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை வடக்கு மக்களுக்கு உரிய வீடமைப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் சோமவன்ச அமரசிங்க வலியுறுத்தியுள்ளார்.

Friday, January 20, 2012

கணவன்- மனைவி வெட்டிப் படுகொலை: வவுனியாவில் சம்பவம்


வவுனியா மாவட்டத்தில் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட பன்றிக்கெய்தகுளம் பிரதேசத்தில் நேற்று கணவன்- மனைவி வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீள்குடியேற்றம் செய்யபட்ட இப்பகுதியில் கொட்டகை அமைத்து விவசாயம் செய்து வந்த கந்தையா முத்தையா (வயது 67), அவரது மனைவி முத்தையா பரமேஸ்வரி ஆகிய இருவருமே இவ்வாறு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தின்போது பெண்ணின் சடலம் வீட்டிற்கு அருகாமையிலும் அவரது கணவரின் சடலம் வீட்டில் இருந்து சற்று தொலைவில் காணப்பட்டதாகவும் அப்பிரதேசத்தின் கிராமசேவகர் தெரிவித்தார்.
கொலை செய்யப்பட்ட இருவரது கைகளிலும் மோதிர விரல் வெட்டப்பட்டுள்ளதாகவும் இச்சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீள்குடியேற்ற கிராமம் பன்றிக்கெய்தகுளத்தில் இரட்டைக்கொலை
வவுனியா பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட மீள்குடியேற்ற கிராமம் பன்றிக்கெய்தகுளம். இப்பகுதியில் இப்பொழுதுதான் மக்கள் மெதுவாக மீள்குடியேறி வருகின்றனர். இந்நிலையில் மக்களின் அச்சத்தை அதிகரிக்கின்ற வகையில் நேற்று இரவு இரட்டைக்கொலைச் சம்பவம் நடந்தேறியுள்ளது.
இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது:
பன்றிக்கெய்தகுளத்தில் வசித்துவந்த கந்தையா முத்தையா (65) மற்றும் அவரது துணைவியார் முத்தையா பரமேஸ்வரி (58) ஆகியோர் நேற்றிரவு கொடூரமானமுறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
கொலையாளிகள் கந்தையா முத்தையாவை வீட்டிலிருந்து சுமார் 500மீ தூரத்திற்கு அழைத்துச்சென்று கைவிரலைவெட்டி மோதிரத்தைக் கழற்றிக்கொண்டதுடன் அவரை அந்த இடத்திலேயே கொலையும் செய்துள்ளனர். அவரது மனைவியான முத்தையா பரமேஸ்வரியை அவர்களது வீட்டுப்பகுதியில் வைத்தே கொலை செய்துள்ளனர்.
சுமார் 35பவுண் தங்கநகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொல்லப்பட்ட இருவரும் அண்மையில்தான் இலண்டனிலுள்ள தமது மகன்கள் தவபாலன், தவரஞ்சன் மற்றும் மகள் சசிகலா ஆகியோரைப் பார்த்துவிட்டு நாடுதிரும்பி தமது காணியில் தற்காலிகக் கொட்டிலில் குடியிருந்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றிரவு திருமதி பரமேஸ்வரி தனது இரவு உணவுத் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே இச்சம்பவம் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று சம்பவ இடத்திற்கருகில் இருப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏனெனில் சமையலறையில் வேகவைத்து எடுத்துவைக்கப்பட்ட ஒரு ரொட்டியும் ஒரு ரொட்டி அடுப்பிலிடுவதற்குத் தயாராக இருந்ததாகவும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.
கொலைசெய்யப்பட்ட திரு. கந்தையா முத்தையா வவுனியா கோமரசங்குளம் பாடசாலை அதிபர் திரு.தர்மகுலசிங்கம் அவர்களின் மூத்த சகோதரர் ஆவார். அத்துடன் கந்தையா முத்தையா தம்பதிகளின் புதல்விகளில் ஒருவரான திருமதி சந்திரிகா, வவுனியா பண்டாரிகுளத்தில் வசித்து வருகிறார்.
சம்பவத்தைக் கேள்விப்பட்டதுடன், வன்னிபாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வவுனியா நகரசபைத் தலைவர் ஐ.கனகையா, வவுனியா பிரதேசசபை தவிசாளர் சிவலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.
ஏராளமான காவல்துறையினரும், விசேட அதிரடிப்படையினரும், இராணுவத்தினரும் அந்த இடத்தில் பிரசன்னமாகியிருந்தனர். மேற்படிச் சம்பவம் மீள்குடியேறிய மக்கள் மத்தியில் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

வங்கி ஊழியர் போல நடித்து வாடிக்கையாளரின் பணம் கொள்ளை! வாழைச்சேனையில் சம்பவம்


வாழைச்சேனை மக்கள் வங்கி கிளையில் நகை அடவு மீட்பதற்காக வந்த வயோதிப வாடிக்கையாளர் ஒருவரிடமிருந்து வங்கி உத்தியோகஸ்த்தர் போன்று நடித்த நபர் ஒருவர் அவரிடமிருந்த பணத்தினை பெற்று களவாடிச் சென்றுள்ளார்.
இச்சம்பவம் வெள்ளிக்கிழமையன்று நண்பகல் வேளை இடம்பெற்றுள்ளது. பிறைந்துறைச்சேனையைச் சேர்ந்த மீராலெவ்வை ஆதம்பாவா என்வரே தனது இரண்டு இலட்சத்து பத்தாயிரத்து அறு நூறு ரூபா பணத்தினை (210600 ரூபா) இழந்துள்ளார்.
வாழைச்சேனை பொலிஸார் களவு தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
வங்கியில் வீடியோ சாதன வசதி இல்லாத காரணத்தினால் கொள்ளையரை கைது செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ் வங்கியில் ஏற்கனவே கொள்ளையர்கள் இரவு வேளை ஜன்னல் பகுதியினை உடைத்து களவினை மேற்கொள்ள முயற்சி மேற்க்கொண்ட போது அது பயனற்று போனமை குறிப்பிடத்தக்கது.

சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பினர் அடுத்த மாதம் இந்தியா பயணம்!- மன்மோகனுடனும் சந்திப்பு


அரசு - தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பேச்சுக்கள் முடங்கியுள்ள நிலையில், கூட்டமைப்பினர் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ளத் தயராகி வருகின்றனர். அநேகமாக அடுத்த மாத நடுப்பகுதியில் இந்தப் பயணம் இடம்பெறும் என்று அறிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே பல தடவை புதுடில்லிக்குச் சென்ற கூட்டமைப்பினர், அந்நாட்டு பிரதமர் மன்மோகன் சிங்கைக் கூட்டாகச் சந்திக்க நேரகாலம் வாய்ப்பு கிட்டவில்லை. தலைவர் சம்பந்தன் மட்டுமே ஒருதடவை மன்மோகனைச் சந்தித்திருந்தார்.
ஆனால் இம்முறை கூட்டமைப்பினர் மன்மோகன் சிங் மற்றும் அரசியல் தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்துவர் என்று கொழும்பில் இராஜதந்திர வட்டாரங்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.
அதேசமயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர் குழுவொன்றே விரைவில் இந்தியா விரைகின்றது என்று பெயர் குறிப்பிட விரும்பாத இந்திய இராஜதந்திரி ஒருவர் நேற்று கொழும்பில் தெரிவித்தார்.
இதற்கான ஏற்பாடுகளை இந்திய வெளிவிவகார அமைச்சு மேற்கொண்டு வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கடந்த 16ஆம் திகதி சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இதன்போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்திய விஜயம் குறித்து கருத்துப் பரிமாறல்கள் இடம்பெற்றுள்ளன என்றும் தெரியவருகிறது.
ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தொடர் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இந்தியா அழைத்துப் பேசவுள்ளமை கொழும்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பு மாநகராட்சி தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!- மனோ கணேசன் - முஸாமில் கைச்சாத்து


கொழும்பு மாநகரசபையின் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனும், கொழும்பு மாநகரசபை மேயர் முஸாமிலும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்து இட்டுள்ளார்கள்.
நேற்று காலை புதிய ஆண்டுக்கான முதல் மாநகரசபை அமர்வு நடைபெறுவதற்கு சற்று முன்னர் மாநகரசபையில் அமைந்துள்ள மேயர் அலுவலகத்தில் இந்த கையெழுத்து இடும் நிகழ்வு நடைபெற்றது.
ஜனநாயக மக்கள் முன்னணிக்கு வாக்களித்த வாக்காளர்களின் நலன்களை முன்னிறுத்திய ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே ஜனநாயக மக்கள் முன்னணி, ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்குகின்றது.
மேயர் முசாம்மிலுடன், பிரதி மேயர் டைடஸ் பெரேரா மற்றும் கொழும்பு மாநகரசபையின் ஜமமு குழுத்தலைவர் கலாநிதி கங்கை வேணியன் தலைமையில் கட்சியின் அனைத்து மாநகரசபை உறுப்பினர்கள் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.
மாநகரசபையின் முன்பள்ளிகளில் நீண்ட காலமாக தமிழ் சிறார்களுக்கு புறக்கணிக்கப்பட்டுள்ள தமிழ் மொழி மூல கல்வி, மாநகரசபை நூலகங்களில் தமிழ் நூல்கள் மற்றும் அலுவலர்கள், மாநகரத்தில் தமிழ் மொழி பெயர் பலகைகள், கொழும்பு மாநகரசபை அலுவலகங்களில் தமிழ் பேசும் மக்கள் தமது தாய்மொழியில் சேவைகளை பெற்றுக்கொள்ளல், தமிழ் மொழி பாவனை மற்றும் நூலகங்கள் தொடர்பில் விசேட மக்கள் கண்காணிப்பு குழுக்களை அமைத்தல், மாநகரின் பின் தங்கிய பகுதிகளில் ஒவ்வொரு மாதமும் ‘கொழும்பு மக்கள் எழுச்சி இயக்கம்’ என்ற பெயரில் ஜமுமு நடத்த ஆரம்பித்துள்ள மாதாந்த சிரமதான இயக்கத்திற்கு மாநகரசபை இயந்திரத்தின் பூரண அனுசரணை, ஜமமு பிரேரிக்கும் பின் தங்கிய மற்றும் மாநகர் குடியிருப்பு பிரதேசங்களுக்கு கார்பெட் வீதிகள் அமைத்தல் ஆகிய விவகாரங்கள் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளன.
அதேவேளையில், அபிவிருத்தி நோக்கில் கொழும்பு மாநகரின் பின்தங்கிய பகுதிகளில் வாழும் மக்களின் அனுமதியை பெறாமல் வீடுகள் உடைக்கப்படாமை, கொழும்பு மாநகரில் அனைத்து இனத்தவருக்கும், மொழிகளுக்கும் சம அந்தஸ்து வழங்கப்படுவதன் மூலம் முழு நாட்டிற்கும் முன்னுதாரணமான நிர்வாகத்தை நடத்துவது என்பவை தொடர்பில் இணக்கப்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் கூறியதாவது,மாநகரசபை நிதிக்குழு தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பெரும்பான்மை பெற்றுகொண்டுள்ளது. இதற்கு காரணம் ஐக்கிய தேசிய கட்சியில் நிலவும் உட்கட்சி பூசல் மற்றும் கட்டுப்பாடு இன்மை ஆகும். அக்கட்சியை சேர்ந்த சிலர் கட்சிமாறி வாக்குகளை அளித்துள்ளனர்.
இவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுப்பது அக்கட்சி தலைமையின் வேலை. ஆனால் இது எந்த விதத்திலும் மேயரின் அதிகாரத்தை கட்டுப்படுத்தாது. நிதிக்குழு தொடர்பில் மேயர் முடிவு எடுக்கும் அதிகாரத்தை கொண்டுள்ளார்.
அதற்கான இறுதி அதிகாரம் மாநகரசபைக்கு உள்ளது. மாநகரசபையில் பெரும்பான்மையை உறுதிபடுத்த நாம் மேயர் முசாம்மிலுக்கு ஆதரவு வழங்குகிறோம். இந்நிலையில் எமது ஆதரவு கொழும்பு மாநகர சபையின் நிலையான ஆட்சிக்கு பெரும் காரணமாக அமைகிறது.
எமது இந்த ஆதரவு ஜனநாயக வழிமுறைகளுக்கு உட்பட்டுள்ள அதேவேளையில் எமக்கு வாக்களித்த தமிழ் மக்களின் நலன் சார்ந்ததாகும். எமக்கு வாக்களித்த தமிழ் மக்களின் நலன்களை நாம் கையெழுத்து இட்டுள்ள இந்த ஒப்பந்தம் உறுதி செய்கிறது.
நீண்ட காலமாக ஒதுக்கப்பட்டுள்ள கொழும்பு தமிழ் வாக்காளர்கள் மாநகரசபை இயந்திரம் மற்றும் சேவைகளுக்குள் உள்வாங்கப் பட வேண்டும். இது நடைபெறாவிட்டால் நாம் எமது ஆதரவை வாபஸ் வாங்குவோம்.