Saturday, January 14, 2012

காடுகளுக்குள் விஷ ஜந்துக்களுடன் போராடி வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் - முள்ளிவாய்க்கால் மக்கள்


“சொந்த மண்ணில் சென்று வாழ அனுமதியில்லை காடுகளுக்குள் விஷ ஜந்துக்களுடன் போராடி வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் அப்போது கூட்டிச் செல்கின்றோம் இப்போது கூட்டிச் செல்கின்றோம் என்கிறார்கள் ...
... அதேபோல் தற்காலிகமாக இருக்கச் சொன்ன இடத்தில் காணிகள் தருகிறோம் என்றும் கூறுகிறார்கள். இதில் எது உன்மை எது பொய்? என்பது கூட தெரியாத நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.” இவ்வாறு திம்பிலி பகுதியில் குடியேற்றப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் மக்கள் தெரிவிக்கின்றனர்.
முள்ளிவாய்க்கால் கிழக்கு மேற்கு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 72குடும்பங்கள் கோம்பாவில் திம்பிலி பகுதியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவர்களுக்கான அரைநிரந்தர வீடுகளும் மலசல கூட வசதிகளும் பெற்றுக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. எனினும் முள்ளிவாய்க்கால் பகுதியில் கண்ணிவெடியகற்றும் செயற்பாடுகள் முடிவுறும் வரை தற்காலிகமாக தங்குவதற்கான இடமே இதுவென மக்களுக்கு தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
ஆனால் தற்போது மக்கள் குடியேற்றப்பட்டுள்ள காணிகளுக்கான உறுதிகளையும் வீட்டுத்திட்டங்களையும் விரைவில் பெற்றுத் தருவதாக பிரதேச செயலகத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் எதிர்வரும் 8ம் மாதமளவில் உங்கள் சொந்த இடங்களில் குடியேற்றப்படுவீர்கள் எனவும் பிரதேச செயலகம் தெரிவித்திருக்கின்றது. இNதுபோல் தற்போதுள்ள இடத்திலேயே தொடர்ந்தும் இருக்க விரும்புகிறவர்களிடம் கையெழுத்தையும் பிரதேச செயலகம் பெற்றுள்ளது.
எனவே சொந்த ஊரில் குடியேற்றப்படுவோமா? படமாட்டோமா? ஏன்ற குழப்பகரமான நிலையில் மக்கள் இருந்து கொண்டிருக்கின்றனர். இந்த விடயம் தொடர்பில் குடியேற்றப்பட்டுள்ள பொதுமகன் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில். “முள்ளிவாய்க்கால் மக்களுக்கு கடற்றொழிலே பாரம்பரியமான வாழ்வாதார தொழலாகும் இந்நிலையில் எமது மக்களை கடலிலிருந்து பல மைல் தூரத்தில் கொண்டு வந்து அடர்ந்த காட்டிற்குள் குடியேற்றியிருப்பது எந்த வகையில் நியாயம் என கேள்வி எழுப்பினார்.
மேலும் சொந்த மண்ணில் குடியேற்ற முடியாவிட்டால் எம்மை முகாம்களிலேயே இருக்க விட்டிருக்கவேண்டும் அவ்வாறும் செய்யாமல் இங்கு கொண்டு வந்து விட்டிருக்கின்றார்கள். இங்கே தொழில் கிடையாது நிவாரணம் கிடையாது ஓரு அவசரம் என்றால் அம்புலன் கூட வராது காரணம் இந்தப் பகுதிக்கு வர அனுமதி இல்லை என தெரிவிக்கின்றனர். எனவே பாம்புகளுடனும் விஷ பூச்சிகளுடனும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
எங்களை எங்களது சொந்த மண்ணில் மீள்குடியேற்றுவதற்கான அனுமதியை வழங்கவேண்டும் தற்காலிகமாக இருக்கச் சொன்ன இடத்திற்கு உறுதிகள் வழங்குவது எதற்காக? நாம் சொந்த மண்ணில் யாரிடமும் கையேந்தாமல் வாழ்ந்தவர்கள். எம்மை கொண்டு வந்து காடுகளிற்குள் விட்டு எளனப்படுத்துகிறார்கள் என்றார்.”
இதேவேளை முள்ளிவாய்க்காலில் சுமார் 2ஆயிரத்து 200 ஏக்கர் நிலப்பரப்பு படையினரால் அவர்களது தேவைகளுக்காக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் மக்களை அவர்களது இடத்தில் குடியேற்றுவது சாத்தியமில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் குறித்த பகுதிக்கு நேற்று முன்தினம் மாலை விஜயம் செய்து பார்வையிட்டிருந்தார்.

No comments:

Post a Comment