Wednesday, January 25, 2012

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 43 பேர் கைது


திருகோணமலைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட இந்தியக் கடற்றொழிலாளர் 43 பேர் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை புல்மோட்டைக் கடற்பரப்பில் வைத்து இன்று காலை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் பயன்படுத்திய ஆறு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இந்தியக் கடற்றொழிலாளர்கள் அவர்களிடம் கைப்பற்றப்பட்ட படகுகள் மற்றும் மீன்களுடன் திருகோணமலை துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டு முதற்கட்ட விசாரணைகளின் பின்னர் திருகோணமலை காவற்றுறையினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
அதேவேளை, இருநாடுகளுக்கும் இடையே மீனவர்கள் பிரச்சினையினால் ஏற்படும் உரசல்கள் மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

இந்திய இலங்கை கடற்பரப்பில் இருநாட்டு மீனவர்களும் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வாக, இருவரும் வாரத்தில் மூன்று நாள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லலாம் என இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர் அப்துல் கலாம் கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்தக் கருத்துக்கு இந்திய மீனவர்கள் ஆதரவு தெரிவித்தாலும், இலங்கை தரப்பினர் அது ஏற்றுக்கொள்ளக்கூடிய யோசனை அல்ல என்று கூறியுள்ளனர்.
திருகோணமலையில் கைது செய்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் யாரையும் சந்திக்க செய்தியாளர்கள் அனுமதிக்கப்படவில்லை என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டாம் இணைப்பு
இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அந்த செய்தி வருமாறு:
நாகை மாவட்டம் அக்கரைப்பபேட்டையை சேர்ந்த 42 மீனவர்கள் 6 படகுகளில் கடந்த 22ம் திகதி மீன்பிடிக்க சென்றனர். கோடியக்கரை பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த போது இலங்கை கடற்படைகைது செய்து திருகோணமலை முகாமிற்கு அழைத்து சென்றனர்.
இதனையறிந்த மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக எச்சரித்திருந்தனர். இந்நிலையில் தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்த தகவலை இலங்கையிலிருந்து கைது செய்யப்பட்ட மீனவர்களின் உறவினர்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இன்று இரவோ அல்லது நாளையோ நாகை வந்து சேர்வார்கள் என தெரிகிறது.
என இந்திய ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இது குறித்து இலங்கையின் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவிக்கையில், மீனவர்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை எனவும் பொலிஸ் நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment