Monday, January 2, 2012

இரகசியம் பேணாவிட்டால் கடும் நடவடிக்கை

news
கட்சியின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு தீர்க்கதரிசனமான விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்துப் பேசவேண்டும் என அவசரக் கோரிக்கையொன்றை விடுத்துள்ளனர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்  சிரேஷ்ட அமைச்சர்கள் சிலர்.

இரகசியத்தன்மை பேணப்பட வேண்டும் எனக் கருதப்படும் முக்கிய தீர்மானங்களை அம்பலப் படுத்தும் வகையில் அமைச்சர்கள் கருத்து வெளியிடுவதை உடன் தடுத்து நிறுத்தவேண்டும் என்றும்  அவ்வாறு செய்பவர்களுக்கு எதிராகக் கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதியிடம் சிரேஷ்ட அமைச்சர்கள் நேரடியாக கோரிக்கை விடுக்கவுள்ளனர் என நம்பகரமாகத் தெரியவருகிறது.

அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்குப் பாரபட்சமின்றி அவை அனைத்துக்கும் முறையான சமனான ஒழுக்கு நடவடிக்கை அவசியம். இல்லையேல், அரசின் எதிர்காலத்திற்கு இந்த விவகாரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது மூத்த அமைச்சர்கள் சுட்டிக்காட்டவுள்ளனர் என அறியமுடிகிறது.

அரசின் நடவடிக்கைகளை அண்மைக்காலமாக அமைச்சர்களான விமல் வீரவன்ஸ, சம்பிக்க ரணவக்க ஆகியோர் கடுமையாக விமர்சித்துவரும் நிலையிலேயே சிரேஷ்ட அமைச்சர்கள் ஜனாதிபதியை சந்தித்து மந்திராலோசனை நடத்துவதற்குத் தீர்மானித் துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விரைவில் சந்திப்பதற்கான திகதியை சிரேஷ்ட அமைச்சர்களுக்கு தெரியப்படுத்துவார் என ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் நேற்றுத் தெரிவித்தன. 

No comments:

Post a Comment