Tuesday, January 3, 2012

இலங்கைக் கடலில் மூழ்கிய கப்பல்கள் தொடர்பில் ஆய்வுகளை நடத்த சீனா கோரிக்கை


இலங்கைக் கடற்பரப்புக்குள் மூழ்கியதாகக் கருதப்படும் நூற்றுக்கும் மேற்பட்ட கப்பல்கள் தொடர்பில் ஆய்வு நடத்துவதற்கு கொழும்பிடம் சீனா கோரிக்கை விடுத்திருக்கிறது என்று அறியப்படுகிறது.
முன்னதாக, இலங்கைக் கடல் எல்லைக்குள் எண்ணெய் வள ஆய்வுகளை முன்னெடுக்க சீனாவின் கம்பனி ஒன்று விடுத்த கோரிக்கைக்கு இலங்கை சம்மதம் தெரிவித்திருக்கும் நிலையில், சீனாவின் இந்தப் புதிய கோரிக்கை இந்தியாவைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது எனக் கூறப்படுகிறது.
இலங்கை சீனாவின் பக்கம் சாய்கின்றது என பரவலாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்தப் புதிய தகவலும் வெளியாகி உள்ளது.
பராக்கிரமபாகு மன்னன் இலங்கையை ஆட்சிசெய்த காலகட்டத்தில் இலங்கைக் கடற்பரப்புக்குள் மூழ்கியதாகக் கருதப்படும் நூற்றுக்கும் மேற்பட்ட கப்பல்கள் தொடர்பில் ஆய்வு நடத்துவதற்கே சீன அரசு இந்தக் கோரிக்கையை விடுத்திருக்கின்றது.
ஆய்வு நடத்துவதற்கான சந்தர்ப்பத்தைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு, இலங்கை தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் நாயகத்துடன் சீன உயர்மட்ட அதிகாரிகள் ஏற்கனவே இராஜதந்திர மட்டத்திலான பேச்சுகளை நடத்தியுள்ளனர் என நம்பகரமாகத் தெரியவருகிறது.
இந்த ஆய்வின் போது பெறுமதியான தொல்பொருள் தளபாடங்கள் கண்டெடுக்கப்படும் பட்சத்தில் அவற்றை சரிசமமாகப் பகிர்ந்துகொள்வதற்கு இருநாட்டு அதிகாரிகளும் தீர்மானித்துள்ளனர் எனத் தெரியவருகிறது.
ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இலங்கை வரும் சீன அதிகாரிகளுக்கு உரிய வசதிகளைச் செய்துகொடுப்பதற்கும் இலங்கை தீர்மானித்திருக்கிறது என்று மேலும் அறியமுடிகிறது.

No comments:

Post a Comment