Monday, January 2, 2012

ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை புறக்கணிக்க ஜனாதிபதி மகிந்த தயார்!- ஆங்கில இணையத்தளம்


  நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளைப் புறக்கணிக்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முடிவு செய்துள்ளதாக ஆங்கில இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
 பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர்கள் பலரும் தொடர்ச்சியாக கொடுத்த அழுத்தத்தை அடுத்தே அவர் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நல்லிணக்க ஆணைக்குழுவிடம் இருந்து  அரசாங்கத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கும், யுத்தக் குற்ற விவகாரங்களில் இருந்து தப்பிக் கொள்வதற்குமான யோசனைகள் சிலவற்றையும் இந்தக் குழுவினர் ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளதாகவும் அவ்விணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியை சந்தித்த இந்தக் குழுவினர், அனைத்துலக சமூகத்தைத் திருப்திப்படுத்துவதற்காக ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதானது, விடுதலைப் புலிகளால் பாதிக்கப்பட்ட தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுக்கும், உயிர்த் தியாகம் செய்து நாட்டில் அமைதியை ஏற்படுத்திய படையினருக்கும் இழைக்கப்படும் அநீதியாகவே அமையும் என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு எதிராக அமைச்சர்கள் சம்பிக்க ரணவக்கவையும், விமல் வீரவன்சவையும் களமிறக்கி உள்நாட்டில் பரப்புரைகளை மேற்கொள்ளுமாறும், முன்னாள் வெளிவிவகார அமைச்சர்களான ரோகித போகொல்லாகம மற்றும் மிலிந்த மொறகொட போன்றோரை அனைத்துலக பரப்புரைகளில் ஈடுபடுத்துமாறும் இவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்  எனவும் அத்தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் முக்கியமான எதிர்க்கட்சி அரசியல்வாதிகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் ஆலோசனை கூறப்பட்டுள்ளதுடன், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைக்கு எதிராக மட்டுமன்றி, அதில் இடம்பெற்றிருந்த உறுப்பினர்களைக் குறிவைத்தும் பரப்புரைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment