Wednesday, January 25, 2012

மட்டக்களப்பில் வர்த்தகர்களை மிரட்டி லஞ்சம் வாங்கிய வன இலாகா அதிகாரி கைது!


மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட இலுப்படிச்சேனையில் அமைக்கப்பட்டுள்ள வட்டார வன இலாகா காரியாலயத்திறப்பு விழாவுக்கென வர்த்தகர்களிடம் இலஞ்சம் வாங்கிய வன இலாகா அதிகாரி ஒருவரை இலஞ்ச தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
நேற்று கைதுசெய்யப்பட்ட அதிகாரி ஏறாவூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வட்டார வன இலாகா காரியாலயம் திறக்கப்படவுள்ளததாகவும் அதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு உதவுமாறு கோரி வலுக்கட்டாயமாகவும் மிரட்டியும் இவர் இலஞ்சம் பெற்றுள்ளார்.
களுவாஞ்சிகுடி தொடக்கம் வாழைச்சேனை வரையிலான பகுதிகளுக்கு சென்றுள்ள அவர் அங்குள்ள மர ஆலை உரிமையாளர்கள், பலகை விற்பனையாளர்கள், மரம் வெட்டுபவர்கள், விறகு விற்பனை செய்பவர்கள் ஆகியோரை மிரட்டியுள்ளார்.
தங்கள் நிகழ்வுக்கு பணம் வழங்கவில்லையென்றால் தங்களின் வியாபார உரிமங்களை இரத்துச்செய்யப்போவதாகவும் அவர் வர்த்தகர்களை மிரட்டியுள்ளார். 
அத்துடன் மர ஆலை உரிமையாளர்களிடம் 20 ஆயிரம் ரூபாவும், பலகை விற்பனையாளர்களிடம் 7500 ரூபாவும் மரம் வெட்டுபவர்களிடம் 10 ஆயிரம் ரூபாவும் விறகு விற்பவர்களிடம் 3000 ரூபாவும் இவர் கட்டாய இலஞ்சம் பெற்றுள்ளார்.
இது தொடர்பில் ஏறாவூர் பிரதேச வர்த்தகர் ஒருவர் கொழும்பு இலஞ்ச தடுப்பு பிரிவுக்கு தெரியப்படுத்தியதையடுத்து குறித்த வர்த்தகரின் வீட்டில் மறைந்திருந்த இலஞ்ச தடுப்பு பிரிவினர் குறித்த வன இலாகா அதிகாரி இலஞ்சம் பெறும்போது கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

No comments:

Post a Comment