Saturday, February 25, 2012

பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் சாரதி, நடத்துனர் மீது சட்ட நடவடிக்கை

news




பிரயாணத்தின் போது பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் நடந்து கொள்ளும் சாரதி மற்றும் நடத்துனருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

பயணிகளுக்கு அளெகரியங்களை ஏற்படுத்தும் போக்குவரத்து சபை ஊழியர்கள் குறைத்தளவில் காணப்பட்டாலும்
இவ்வாறு நடந்து கொள்ளும் ஒரு சிலரால் போக்குவரத்துச் சபைக்கு அவப்பெயர் ஏற்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள போக்குவரத்துச்சபை,

இனிவரும் காலங்களில் இவ்வாறான நிலை ஏற்படாது. பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்படும் சாரதிகள், நடத்துநர்கள் மேல் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் பாடசாலை மாணவர் ஒருவர் பணம் செலுத்தாமையினால் பஸ்ஸில் இருந்து கீழ் இறக்கி விடப்பட்ட சம்பவம் பற்றி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த பஸ்ஸில் கடமையில் ஈடுபட்ட ஊழியர்கள் உடனடியாக சேவையிலிருந்து நிறுத்தப்பட்டதாகவும தெரிவிக்கப்படுகிறது. 

இலங்கை அரசை கை விட்டது டில்லி; கொழும்புக்கு ஆதரவு திரட்டித்தர மறுப்பு

news
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் தனக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையைத் தோற்கடிக்க உதவுமாறு இலங்கை அரசு இராஜ தந்திர மட்டத்தில் இந்தியாவிடம் விடுத்த வேண்டுகோளை புதுடில்லி நிராகரித்துள்ளது என நம்பகரமாகத் தெரியவருகிறது.

ஜெனிவா மாநாடு நெருங்கிவரும் நிலையில், அவசரமாகக் கொழும்பிலிருந்து புதுடில்லிக்குச் சென்ற உயர்மட்ட இராஜ தந்திரிகள் குழுவொன்று, அந்நாட்டின் உயர்மட்டத் தூதுக்குழுவிடம் விடுத்த வேண்டுகோளை சாதகமான முறையில் பரிசீலிப்பதற்கு இந்தியா மறுத்துவிட்டது என்று அறியமுடிகின்றது.
 
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை ஆதரிப்பதற்கு பலம்பொருந்திய நாடுகள் சில தீர்மானத் துள்ளமையை அடுத்து தனக்கான ஆதரவைத் திரட்டிக்கொள்வதில் கொழும்பு தீவிரமாக உள்ளது. 
 
இலங்கையிலிருந்து டில்லிக்கு விரைந்த உயர்மட்டக் குழு, ஜெனிவாவில் தமக்கு எதிரான பிரேரணையை தோற்கடிக்க உதவுமாறும், இது விடயம் தொடர்பில் ஏனைய அங்கத்துவ நாடுகளுடன் பேசி, சாதகமான பதிலொன்றைத் தருமாறும்  கோரியுள்ளது. இதற்கு புதுடில்லி தரப்பிலிருந்து உறுதியான சாதகமான பதிலொன்று கொழும்புக் குழுவினருக்கு கிடைக்கப்பெறவில்லை. இலங்கை மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் ஜெனிவாவில் எவ்வாறான நிலைப்பாட்டை  எடுப்பது என்று தாம் தீவிரமாகப் பரீசிலித்து வருகின்றனர் என்றும் இலங்கை விவகாரம் தொடர்பில் ஏனைய நாடுகளுடன் சமரசம் பேசமுடியாது என்றும் புதுடில்லி ஆணித்தரமாக இடித்துரைத்துள்ளது.
 
இராஜதந்திர வழிமுறைகள் தோல்வியை நோக்கிப் பயணிக்கும் தற்போதைய சூழ்நிலையில், தாம் விடுத்த வேண்டு கோளை புதுடில்லியும் நிராகரித்துள்ளமையால் கொழும்பு அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளது என அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பாகப் பேசப்படுகின்றது.
 
இலங்கைக்கு எதிரான பிரேரணையைத் தாம் ஆதரிக்கப்போவதாக வாஷிங்டன் பகிரங்கமாக அறிவித்துள்ளமையால் ஜெனிவா மனித உரிமைகள் சபையில் அங்கம்வகிக்கும் ஏனைய நாடுகளும் தத்தமது நிலைப்பாடுகளை ஆழமாக  மதிநுட்பத்துடன் பரிசீலித்து வருகின்றன.
 
அதுமட்டுமின்றி,எதிர்வரும் 27 ஆம் திகதி ஜெனிவா மாநாடு ஆரம்பமானாலும் இலங்கை விவகாரம் தொடர்பில் மார்ச் முதலாம் அல்லது இரண்டாம் வாரத்திலேயே வாதப் பிரதிவாதங்கள் இடம்பெறும் எனவும் அறியக்கூடியதாகவுள்ளது

கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது!- கடற்படைக் கட்டளைத் தளபதி


கச்சதீவு இலங்கைக்கு சொத்தமானது என்பதனை நிரூபிக்க எழுத்து மூல ஆவணங்கள் காணப்படுவதாக வடக்கு கடற்படைக் கட்டளைத் தளபதி ரவி விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
கச்சதீவை மீளவும் இந்தியா பெற்றுக் கொள்ள வேண்டும் என தமிழக அரசியல்வாதிகள் விடுத்து வரும் கோரிக்கைக்கை அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குறுகிய அரசியல் இலாபங்களுக்காக தமிழக அரசியல்வாதிகள் இவ்வாறான கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர். ஆனால் கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதனை நிரூபிப்பதற்கு தேவையான எழுத்து மூலமான ஆதாரங்கள் காணப்படுகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கச்சதீவு தேவாலயம் யாழ்ப்பாண பேராயரினால் நிர்வாகம் செய்யப்பட்டு வருகின்றமை மூலம் இது மேலும் உறுதியாகின்றது. கச்சதீவு இலங்கை கடற்பரப்பில் அமைந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மட்டு.வின்சன்ற் பாடசாலையில் சிலை அகற்றப்பட்டதை அரசியலாக்க முற்படுகின்றனர்!- பாடசாலை அபிவிருத்திச் சங்கம்


மட்டு.வின்சன்ற் மகளிர் பாடசாலையின் சரஸ்வதி சிலையினை அகற்றுவதற்கு காராணமாகவிருந்த பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா, விளையாட்டுப் போட்டியின் பிரதம விருந்தினராக அழைக்கப்படுவதை நிறுத்த வேண்டும், இதனால் விளையாட்டுப் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது என வெளியான செய்திக்கும் தங்களுக்கும் எதுவித தொடர்பும் இல்லையென குறித்த பாடசாலையின் அபிவிருத்திச் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் அவர்கள் தெரிவித்ததாவது,
சரஸ்வதி சிலை அகற்றப்பட்ட சம்பவத்தை பயன்படுத்தி சிலர் அரசியல் இலாபம் தேட முற்படுவதாகவும் இதற்காக பாடசாலை நிருவாகம் கூறுவதைப் போன்று செய்தியை வெளியிட்டு இதனூடாக இந்துக்கள் கிறிஸ்தவர்களிடையே மத முரண்பாடுகளை தோற்றுவிப்பதன் மூலம் தமிழ் மக்களிடையே பிளவை ஏற்படுத்தி எம்மை பலவீனப்படுத்துவதற்கும் முற்படுவதாக பாடசாலை அபிவிருத்திச் சங்கம் தெரிவித்துள்ளது.
சரஸ்வதி சிலை அகற்றல் அல்லது மீள நிறுவுதல் தொடர்பாக எந்தவிதமான அரசியல் தலையீடுகளையும் ஏற்றுக்கொள்ள பாடசாலை நிருவாகம் தயாராக இல்லை என வலியுறுத்திக் கூறுவதுடன் இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழ் மக்களின் அரசியல் பலத்தை பலவீனப்படுத்துவதையும் மத முரண்பாடுகளை தோற்றுவிப்பதனையும் வன்மையாகக் கண்டிப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இரண்டாம் இணைப்பு:
பாடசாலையில் இடம்பெற்ற சில குழப்ப நிலை காரணமாக விளையாட்டுப் போட்டியை மேற்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் செய்யாத நிலையிலேயே அவை பிற்போடப்பட்டுள்ளதாகவும் அதனைவிட எதுவித காரணமும் இல்லையென மட்டக்களப்பு வின்சன்ற் மகளிர் தேசிய பாடசாலையின் அதிபர் சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்தார்.
தமது பாடசாலையில் சரஸ்வதி சிலை அமைக்கப்பட்டதற்கும் அவை அகற்றப்பட்டதற்கும் எதுவித அரசியல் பின்னணியும் இல்லையென தெரிவித்த அவர், கிழக்கு மாகாண கல்வியமைச்சரின் வேண்டுகோளின் பேரிலேயே அவை அகற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டியை நடத்துவது தொடர்பிலான கூட்டம் பிரதி அதிபர் தலைமையில் இடம்பெற்றதாகவும் தனக்கு வேறு ஒரு நிகழ்வில் கலந்துகொள்ள தான் சென்றதால் அந்த கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லையெனவும் தெரிவித்தார்.
குறித்த கூட்டத்தில் சரஸ்வதி சிலையினை மீண்டும் அதே இடத்தில் வைக்கும் வரை பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டியை ஒத்திவைப்பதாகவும், சரஸ்வதி சிலையினை அகற்றுவதற்கு காரணமாகவிருந்த கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா அவர்களை விளையாட்டுப் போட்டியின் பிரதம விருந்தினராக அழைக்கப்படுவதை நிறுத்தவேண்டும் என்று கூறியுயே விளையாட்டுப்போட்டியை பிற்போட்டதாக வெளியான செய்தியை முற்றாக மறுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பிரதம அதிதியை மாற்றுவது தொடர்பில் எதுவித கருத்துக்களும் அங்கு பரிமாறப்படவில்லையென தெரிவித்த,அவர் இதனை முற்றாக மறுப்பதாகவும் தெரிவித்தார்.
சரஸ்வதி சிலையினை அமைப்பது தொடர்பில் பாடசாலை அபிவிருத்திக்குழுவும் பாடசாலை சமூகமும் இணைந்து எடுத்த முடிவு என தெரிவித்த அவர்,அதனை நிறுவுமாறு கூறுவதற்கு எந்த அரசியல்வாதியும் தேவையில்லையெனவும் தெரிவித்தார்.
இவ்வாறான நிகழ்வுகளில் எந்தவித அரசியல் சக்திகளும் தலையிடுவதை பாடசாலை சமுகம் விரும்பவில்லையென தெரிவித்த அதிபர் கல்வியமைச்சர் அனுமதி வழங்கினால் சிலை மீண்டும் நிறுவப்படும் என தெரிவித்தார்.
இதற்கு எமக்கு எந்த அரசியல் செல்வாக்கும் தேவையில்லை.இதனை யாரும் அரசியலுக்கு பயன்படுத்துவதையும் வன்மையாக கண்டிப்பதாகவும் சிலர் இதனை தமது அரசியலுக்கு பயன்படுத்திவருவதை அனுமதிக்கமுடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Thursday, February 23, 2012

மீண்டும் பணிப் பகிஷ்கரிப்பில்; அனைத்து பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள்!

news
சம்பள முரண்பாட்டுக் கோரிக்கை தீர்க்கப்படாததால் அனைத்து பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் மீண்டும் இன்று பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சுற்று நிருபத்தில் குறிக்கப்பட்டுள்ள சம்பள நிலுவைகள் வழங்கப்படவில்லை எனவும், 25 வீதமான சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் எனவும் கோரி கடந்த மாதத்தில் அனைத்து பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் அடையாள பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
14 நாட்களுக்குள் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு எட்டப்படும் என சம்பள ஆணைக்குழுவால் உறுதிமொழி வழங்கப்பட்டதை அடுத்து அடையாள பணிப் பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டிருந்தாக யாழ். பல்கலைக்கழக கல்விசார ஊழியர் சங்கத்தின் தலைவர் சி.தங்கராஜா தெரிவித்தார்.
 
இருந்த போதிலும் அதற்கான நடவடிக்கையை எடுக்காமல் சம்பள ஆணைக்குழு பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் ஏமாற்றிவிட்டது. இதனையடுத்தே இன்று முதல் தொடர்ச்சியான பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும்  யாழ். பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டார்.  

சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றில் இலங்கையர் நிற்கவேண்டி வராது; இது அரசின் போலி நாடகம் என்கிறது ஐ.தே.க.

news
 சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் ஜனாதிபதியும், இராணுவத்தினரும் குற்றவாளிகளாக நிற்கவேண்டிய நிலை வராது. இதனைத் துரும்பாகப் பயன்படுத்தி அரசு நாட்டு மக்களை அச்சுறுத்தி வருகின்றது. ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிரான சர்வதேச அழுத்தங்களை எதிர்கொள்வதற்கான அடித்தளத்தை அமைத்துக் கொள்ளாமல் அரசு களமிறங்கப்போகின்றது. நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்து வதற்கே அரசு முயற்சிக்கின்றது என ஐ.தே.க. குற்றஞ்சாட்டியுள்ளது.
 
நாட்டின் இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் முக்கிய பங்காளியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் புறக்கணித் துவிட்டு அரசு தன்னிச்சையாகத் தீர்மானங்களை எடுக்கமுடியாது. அவ்வாறு தீர்மானங்களை எடுக்குமாயின், அவை நாட்டில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
 
இதன்போது அவர் மேலும் கூறியவை வருமாறு:
ஜனாதிபதியையும், இராணுவத்தினரையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் குற்றவாளிகளாக இனங்காண்பிப்பதற்கு எதிர்க்கட்சிகள் சதிசெய்து வருகின்றன என அரசு கூறுகின்றது. இது முற்றிலும் பொய். ஏனெனில், 2002 ஆம் ஆண்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பாகக் கொண்டுவரப்பட்ட ரோம் உடன்படிக்கையில் எமது கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கைச்சாத்திடவில்லை. அதனால் இலங்கையின் எந்தப் பிரஜையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக நிற்கவேண்டிய தேவையில்லை. அரசு இதைக் காரணங்காட்டிக்கொண்டு நாட்டு மக்களை அச்சுறுத்தும் வகையில் பொய்யானவற்றைக் கூறிவருகின்றது.
 
ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சர்வதேச தரப்பிலிருந்து இலங்கைக்கு எதிராக அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும் என்பதை அரசு அறிந்திருந்தும்கூட, இவற்றிற்கு முகங்கொடுப்பதற்கு சரியான அடித்தளத்தை இடாமல் கூட்டத் தொடரில் களமிறங்குகின்றது. இதனால் நாடும் நாட்டு மக்களுமே பெரும் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கவேண்டிய அவலநிலை ஏற்படும். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் வெளிக்கிளம்புகின்ற எதிர்ப்புகளுக்கு முகங்கொடுப்பதற்கு அரசு இராஜதந்திர ரீதியில் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆனால், அப்படியான எந்தவித நடவடிக்கைகளிலும் அரசு ஈடுபடவில்லை என்பது அவர்களின் செயற்பாடுகளினூடாகத் தெரிகின்றது  என்றார். 

Saturday, February 18, 2012

அதிகரிக்கும் வீதி விபத்துக்கள்; இன்றும் மூவர் உயிரிழப்பு

news
இன்று காலை ஹபரனை - கந்தளாய் பிரதான வீதியின் கிதுல்உதுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒன்பது பேர் படுகாயமடைந்துள்ளனர்.

பிறிதொரு விபத்துச் சம்பவம் ஒன்று புத்தளம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த இரு லொறிகளே  மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

சிலாபம் - புத்தளம் பிரதான வீதியின் ஆராச்சிக்கட்டு பிரதேசத்திலேயே இவ் விபத்து இடம் பெற்றுள்ளது இவ் விபத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இவ் விபத்துச் சம்பவங்கள் தொடர்பாக விசாரனைகள் இடம் பெற்று வருவதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அண்மைக் காலமாக வீதி விபத்துக்கள் அதிகரித்துச் செல்லுகின்றமை குறிப்பிடத்தக்கது. இதற்கு அதிகரித்த வேகமும் சாரதிகளின் கவனயீனமுமே காரணம் என குறிப்பிடப்படுகிறது.

அதிகரிக்கும் விலையேற்றம்; பால்மாவையும் அதிகரிக்க கோரிக்கை

news
எரிபொருள் விலை ஏற்றத்தினைத் தொடர்ந்து  பால்மாவின் விலைகளை அதிகரிப்பதற்கு அரசாங்கத்திடம் பால்மா விநியோக நிறுவனங்கள் அனுமதி கோரியுள்ளன.

பால்மாவினை வினையோகிக்கும் நிறுவனங்கள் இறக்குமதி மற்றும் போக்குவரத்துச் செலவுகள் என்பவற்றினை காரணம் காட்டி இவ் பால்மாவின் விலை உயர்வினைக் கோரிவுள்ளதாக நுகர்வேர் அதிகார சபை தெரிவித்துள்ளது

அங்கர், நெஸ்பிறே, மெலிபன், டயமன்ட் முதலான வர்த்தக பெயர்களைக் கொண்ட பால்மாவை நிறுவனங்களே இணைந்து இவ் விலை அதிகரிப்பினை கோரியுள்ளது. அதிகரிப்பினை வர்த்தகக் துறை அமைச்சரிடம் கோரியுள்ளது.

பால்மாக்களின் விலையானது அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டால் 400 கிராம் பால்மாவின் விலை 15 ரூபாவினால் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மைக் காலமாக இலங்கையின் எரிபொருள் விலை ஏற்றத்தினால் மக்களுடைய அத்தியவசியப் பொருட்கள் மற்றும் மின்சார கட்டணங்களுடன் கூடிய எரிபொருள் கட்டணம், போக்குவரத்துக் கட்டணங்கள், நீர்க்கட்டணங்கள் போன்றன அதிகரிக்கப்பட்டுள்ளன.

எரிபொருள் கட்டண உயர்சியினால் நாட்டில் மக்கள் தொடர்ச்சியாக அரசியற் கட்சிகளும் மக்களுன் இணைந்து அரசிற்கு எதிராக பல்வேறு  போராட்டங்கள் ஈடுபட்டு வருகின்றமை பாரிய பிரச்சனையாக உள்ளது

அரசியற் கட்சிகள் வரிசையில் ஜனநாயக மக்கள் முன்னனி, ஜக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் இடது சாரி முன்னனி போன்ற கட்சிகள் நேற்றைய தினம் கொழும்பு புறக்கோட்டையில் மாபெரும் ஆர்பாட்டத்தினை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஜே.வி.பியினரும் பல்வேறு போராட்டங்களையும் துண்டுப் பிரசுர நடவடிக்கையிலும்  ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

மக்களும் தொடர்ந்து எரிபொருள் விலை ஏற்றத்தினை கண்டித்து ஆர்பாட்டங்களில் தொழில் பகிஸ்கரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் சிலாபம் பகுதியில் மீனவர்கள் மேற்கொண்ட ஆர்பட்டத்தின் போது ஒருவர் கொல்லப்பட்டமையும் பலர் காயமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. மலையக தோட்டப் பகுதிகளிலும் மக்கள் வேலை பகிஸ்கரிப்பிலும் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

கிளி. பூநகரியில் பேருந்து மிதிபலகையில் நின்று பயணித்த இளைஞர் வீழ்ந்து சக்கரத்தில் சிக்கி மரணம்


பூநகரியிலிருந்து, வவுனியா நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த தனியார் பேருந்தின் மிதிபலகையில் நின்று கொண்டு பயணித்த இளைஞர் ஒருவர் தடுக்கி வீழ்ந்து சில்லில் நசியுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
நேற்று அதிகாலை 5.00 மணியளவில் இடம்பெற்றுள்ள இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
செ.நியூட்வாசன்(வயது24) என்ற இளைஞர் பூநகரி-வவுனியா தனியார் பேருந்தில் வவுனியா நோக்கிப் பயணித்துள்ளார்.
இந்நிலையில் வீதி சீரின்மையினால் பேருந்தின் மிதிபலகையில் நின்று பயணித்த இவர் நிலை தடுமாறி கீழே வீழ்ந்து பேருந்தின் பின்பக்க சக்கரத்தினுள் அகப்பட்டுக் கொண்டுள்ளார். இதனால் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பூநகரி நாலாம் கட்டை 6ம் குறுக்குத் தெரு பகுதயில் இடம்பெற்ற இந்த சம்பவத்தினையடுத்து குறித்த பகுதியில் பதற்றமான நிலை நீடித்தது.
எனினும் சம்பவ இடத்திற்கு வந்த பூநகரி பொலிஸார் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்ததுடன் விசாரணைகளையும் மேற்கொண்டனர்.

யாழ். பாலைதீவு அந்தோனியார் தேவாலயத்திற்கு அருகில் கடற்படையினரால் விகாரை அமைப்பு


யாழ்.மண்டைதீவை அண்மித்ததாகவுள்ள பாலைதீவில் இலங்கை கடற்படையினரால் அமைக்கப்பட்டுவரும் பௌத்த விகாரை தொடர்பில் கத்தோலிக்க மக்களும், மதத் தலைவர்களும் தமது கடுமையான அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
குறித்த தீவு, மண்டைதீவை அண்மித்ததாகவுள்ள பகுதி, எனவே யுத்தம் காரணமாக இந்தத் தீவில் கடற்படையினர் முகாமிட்டிருந்ததுடன், பொதுமக்கள் எவரும் அங்கு செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை.
ஆனால் கச்சைதீவைப் போன்று இந்த தீவிலும் கிறிஸ்தவர்களின் பாரம்பரியமான கத்தோலிக்க தேவாலயமொன்று அமைந்துள்ளது. பாரம்பரியமும், அதிகளவான மக்களால் வருடாவருடம் வழிபாட்டிற்குரியதாகவும் இந்த தேவாலயம் யுத்தத்திற்கு முன்னர் இருந்தது.
மேலும் கடற்றொழிலாளர்கள் இந்த தீவில் ஓய்வெடுக்கும் இடமாகவும், வலைகளை உலர்த்திக் கொள்ளும் இடமாகவும் இந்தப் பகுதி பயன்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் யுத்தத்தின் பின்னர் மக்கள் இந்த தீவிற்கு அண்மைக்காலமாகச் சென்று வருகின்றனர்.
மேலும் தேவாலயத்தை புனரமைப்பதற்கான ஏற்பாடுகளையும் மக்கள் மேற்கொண்டுள்ளனர். எனினும் இந்த தேவாலயத்திற்கு அருகிலேயே தற்போது கடற்படையினரால் பௌத்த விகாரையொன்றும் அமைக்கப்பட்டு வருகின்றது.
பெருமெடுப்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த விகாரையமைப்பின் பணிகளில் முக்கியமாக பழமையான விகாரை போன்ற தோற்றத்தை ஏற்படுத்த பழைய செங்கற்களைக் கொண்டு இந்த விகாரை அமைக்கப்பட்டு வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே இந்த நடவடிக்கை கிறிஸ்தவர்களின் தனித்துத்தை பாதிக்கும் என்பதுடன், வரலாற்றில் இடைச்செருகல்களை ஏற்படுத்தும் ஆக்கிரமிப்பு நடவடிக்கையுமாகும் என கத்தோலிக்க மக்களும் மதத்தலைவர்களும் தெரிவித்துள்ளனர்.

தங்க பிஸ்கட் வியாபாரிகள் இருவரை யாழ்.நகரில் கைது செய்த இரகசிய பொலிஸார்


தங்க பிஸ்கட்டுக்கள் விற்பனை செய்த வியாபாரிகள் இருவரை நேற்று யாழ்.நகரில் வைத்து இரகசியப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதனையடுத்து நகரிலிருந்த சில நகை வியாபார நிலையங்கள் மூடப்பட்டிருந்தது.
யாழ்.குடநாட்டில் பவுண் பிஸ்கட்டுக்களை கொள்வனவு செய்து கொள்வதற்கு உரிய வசதிகளைச் செய்து கொடுக்காத அரசாங்கம், வெளிநாட்டிலிருந்து வருவோரிடம் பவுண் பிஸ்கட்டுக்களை வாங்கும் நகை வியாபரிகளை குறிவைத்துச் செயற்படுகின்றது. என யாழ். நகை வியாபாரிகள் சிலர் தெரிவிக்கின்றனர்.
பவுண் பிஸ்கட்டுக்களை விற்பனை செய்த வியாபாரிகள் இருவர் நேற்று யாழ்.நகரில் வைத்து இரகசியப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதனையடுத்து நகரிலிருந்த சில நகை வியாபார நிலையங்கள் மூடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் விடயம் குறித்து வர்த்தகர்கள் சிலருடன் தொடர்பு கொண்டுகேட்டபோதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் குறிப்பிடுகையில், பவுண் பிஸ்கட்டுக்களை விற்பனை செய்த குற்றத்திற்காக இரு வியாபாரிகள் யாழ்.நகரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பவுண் பிஸ்க்கட்டுக்களை விற்பனை செய்யக் கூடாது என்ற சட்டமொன்று உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் மத்திய வங்கிக் கூடாக பவுண் பிஸ்கட்டுக்கள் ஏனைய வங்கிகளுக்கு வழங்கப்பட்டு அவற்றிலிருந்து வியாபாரிகள் வாங்கிக் கொள்ளவேண்டும்.
ஆனால் இந்த நடைமுறை யாழ்ப்பாணத்தில் இல்லை, இதனை இதுவரை ஏற்படுத்திக் கொடுக்க யாரும் முயற்சிக்கவும் இல்லை. இந்த நிலையில் நகை செய்வதற்கான பவுணை வெளிநாடுகளிலிருந்து வருபவர்களிடமும், வெளிமாவட்ட வியாபாரிகளிடமுமே கொள்வனவு செய்து நகை செய்யப்படுகின்றது.
இந்த நிலையில் திடீரென வந்த இரகசியப் பொலிஸார் வர்த்தகர்கள் இருவரை கைது செய்து விசாரணைகளுக்காக கொண்டு சென்றிருக்கின்றனர். எனவே இது முறையற்றதொரு செயற்பாடாகும்,
அரசாங்கம் எமக்கான வசதியை இங்கு செய்து தரப்படாமையினாலேயே இந்த தவறு நடந்ததாகவும் நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Thursday, February 16, 2012

மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! நீர் கட்டணம் உயரும்! அரசாங்கம் அறிவிப்பு


எரிபொருள்,  மின்சாரம்,  போக்குவரத்து,  உணவுப் பொருட்கள்,  உள்ளிட்டவற்றின் விலையுயர்வுகளை அடுத்து இன்னுமொரு அதிர்ச்சி  காத்திருக்கிறது.
நீர் விநியோக கட்டணமும் அதிகரிக்கப்படப் போவதாக நீர்வடிகால் அமைப்பு சபைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை உயர்வால் நீர் விநியோக செலவு அதிகரிகத்துள்ளதாக காரணம் காட்டி இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
இதுதவிர, நாட்டின் பல விதமான பொருட்களின் விலை பட்டியல் தற்சமயம் இமயமலை போல வானைத் தொட்டுள்ளன.

எரிபொருள் விலை உயர்வு - நிவாரணம் ஏதுமில்லை; முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள்

news
எரிபொருள் விலை உயர்வினால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு நிவாரணம் பெற்றக்கொடுக்க எந்தத் தரப்பினாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என ஆதங்கப்படுகின்றனர் யாழ். மாவட்ட முச்சக்கரவண்டி ஓட்டுநர்கள்.

எரிபொருள் விலை உயர்வை எதிர்த்து போராட்டங்களை நடத்திய கடற்றொழிலாளர்கள் மற்றும் தனியார் போக்குவரத்துச் சேவைகளுக்கு நிவாரணங்கள் பெற்றக்கொடுக்கப்பட்டுள்ள நிலையில் தங்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்கப்படவில்லை என முச்சக்கர வண்டி ஓட்டநர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் தனியார் பஸ் ஓட்டுநர்களும் எரிபொருள் விலையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விலை குறைக்கப்படுமானால் கட்டணத்தை குறைக்க முடியுமெனவும் தெரிவித்துள்ளனர்.

அவர்களின் ஆதங்கங்களுள் சில இங்கே ஒளி வடிவில்....

நிரந்தர பாதுகாப்பு வேலி வலி.வடக்கில் இராணுவம் அமைக்கிறது; 26 ஆயிரம் மக்களின் மீள்குடியமர்வு கேள்விக்குறி

news
 வலிகாமம் வடக்கு முன்னரங்கப் பகுதியில் பலாலி படைத் தளத்தின் முன்னரங்க நிலைகளாக விளங்கும் ஒட்டகப்புலத்திலிருந்து வயாவிளான் ஊடாகத் தெல்லிப்பழைச் சந்தி வரைக்கும் அங்கிருந்து காங்கேசன்துறை வரை  நிரந்தரத் தடுப்பு வேலிகளை இராணுவத்தினர் அமைத்து வருகின்றனர். 
 
இதனால் வலி.வடக்கில் பலாலி இராணுவத் தலைமையகத்தை அண்மித்த இடங்களில் உள்ள 23 கிராம அலுவலர் பிரிவுகளில் மக்கள் மீளக்குடியமர்வதற்கான சாத்தியங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன என்று சுட்டிக்காட்டப்படுகின்றது. 
 
நிரந்த தடுப்பு வேலிகளை அமைப்பதற்கான தூண்கள் இப்போது "கொங்கிறீட்" போட்டு நடப்பட்டு வருகின்றன. இந்த பாதுகாப்பு வேலிக்குள் 23 கிராம அலுவலர் பிரிவுகள் அடங்கி உள்ளன. 7,273 குடும்பங்களைச் சேர்ந்த 26,281 பேர் இப்பகுதிகளில் மீள்குடியமர்வுக்காகக் காத்திருக்கின்றனர். 
 
பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுவரும் பகுதிக்கு அப்பால் குறைந்தது ஒன்றரை வருடங்களுக்கு யாரையும் அனுமதிக்கப் போவதில்லை என்று படையினர் தமக்குத் தெரிவித்திருக்கின்றனர் என மக்கள் சிலர் கூறுகின்றனர். இது உறுதிப்படுத்தப்படாத போதும், முன்னரங்குகளில் நிரந்தர வேலிகள் அமைக்கப்படுவதானது மக்களின் மீள்குடியமர்வு குறித்த பெரும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது. 
 
வலி. வடக்கில் இருந்து 1990 ஆம் ஆண்டு மக்கள் இடம்பெயர்ந்தனர். போர் முடிந்ததன் பின்னர் இந்தப் பிரதேச செயலர் பிரிவில் உள்ள 12 கிராம அலுவலர் பிரிவுகளில் மட்டுமே மக்கள் மீளக்குடியமர் அனுமதிக்கப்பட்டனர். கடந்த வருட இறுதிக்குள் எஞ்சியவர்களும் மீளக்குடியமர்த்தப்படுவர் என்று அமைச்சர்களும் அதிகாரிகளும் தெரிவித்து வந்தனர். ஆனால் 2011 மே மாதத்தின் பின்னர் எந்தவிதமான மீள்குடியமர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. 
 
இதேவேளை, ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியில் புனரமைக்கப்பட்டு வரும் ஒட்டகப்புலம் கட்டுவன் வீதியின் இடையே உள்ள 4 கிலோ மீற்றர் தூரமும் இந்த பாதுகாப்பு எல்லை வேலிக்குள் அடங்குவதால் அதன் புனரமைப்பு வேலைகள் கைவிடப்பட்டுள்ளன. 
 
அந்த 4 கிலோ மீற்றர் வீதியையும் தனியாரின் காணிகளுக்கு ஊடாகப் புதிதாக அமைக்குமாறு படைத்தரப்பினரால் தெரிவிக்கப்பட்ட யோசனை நிராகரிக்கப்பட்டதை அடுத்து குறிப்பிட்ட துண்டு வீதியைப் புனரமைப்பதைத் தாம் நிறுத்திக் கொண்டு விட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். கடந்த உள்ளூராட்சித் தேர்தலின் போது பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவினால் வல்வை அராலி வீதிக்குக் "கார்ப்பெற்" போடும் இந்தத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

எரிபொருள் விலையேற்றத்தால் வாடகை வாகனங்களிற்குரிய கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது ; பொதுமக்கள் பாடு இனி திண்டாட்டம் தான்

news
 எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து முச்சக்கர வண்டிகள், வாடகை வாகனங்கள் மற்றும் ஏனைய போக்குவரத்து வாகனங்களின் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.முக்கியமாகநாட்டிலுள்ள பெருநகரப் பகுதிகளிலேயே இந்த நிலை தீவிர தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரும்பாலும், பேருந்துகளை பயன்படுத்தாமல், வாடகை வாகனங்களில் அலுவலகம் உள்ளிட்ட தேவைகளுக்கு செல்பவர்களின் நிலை தற்போது கவலைகிடமாக உள்ளது.
அத்தோடு மீட்டர் டக்ஸி வாகனங்களும் தமது கட்டணங்களை அதிகரித்துள்ளன.இதுவரை, முதல் ஒரு கிலோமீற்றருக்கு 50 ரூபாவும், பின்னர் ஒவ்வொரு கிலோமீற்றருக்கும் 30 ரூபா என்ற அளவில் கட்டணம் அறவிடப்பட்டு வந்தது.தற்போது 30 ரூபா கட்டணம் 32 ரூபாமுதல், 35 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கன்டர், லொறிகள், இழுவை வாகனங்கள் போன்றவற்றின் கட்டணங்களும் வெகுவாக அதிகரித்துள்ளன.  

மாலே செல்லவுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர்

news
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மாலைதீவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

எதிர்வரும் வாரத்தில் எதிர்க் கட்சித் தலைவரின் இவ் விஜயம் இடம்பெறவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாலைதீவின் இடைக்கால அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று அங்கு விஜயம் செய்யவுள்ள ரணிலுடன் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் சிலரும் செல்லவுள்ளனர்.

மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி  மொஹமட் நஷீட் ராஜினாமா செய்ததையடுத்து புதிய ஜனாதிபதியாக முஹமத் வஹீட் ஹஸன் கடந்த வாரத்தில் பதவியேற்றிருந்தார்.

இந்நிலையில், முன்னாள் மாலைதீவு ஜனாதிபதி பதவி விலகக் காரணமாக இருந்த வர்த்தகப் பிரமுகர்களும் மாலைதீவுக்கு வருகை தருமாறு ரணில் விக்ரமசிங்கவிற்கு அழைப்பு விடுத்துள்ளனர். 

கச்சதீவை மீட்க வேண்டும்; தமிழக அரசு மனுத்தாக்கல்

news
தமிழகக் கடற்றொழிலாளர்கள் மீதான சிறிலங்கா கடற்படையினரின் தாக்குதலைத் தடுப்பதற்கு க‌ச்ச‌த்‌தீவை ‌மீ‌ட்பதே சிறந்த வழி ‌என த‌‌மிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக கடற்றொழிலாளர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் மதுரை உய‌ர்‌ ‌நீ‌திம‌ன்ற ‌கிளை‌யி‌ல் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கிற்கு ப‌‌தி‌ல் மனு ஒன்றை தமிழக அரசு தா‌க்க‌ல் செ‌ய்து‌ள்ளது. அம் மனுவிலேயே கச்சதீவை மீட்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அம் மனுவில், அரசு ஆவண‌ங்க‌ளி‌ன்படி க‌ச்ச‌த்‌தீவு த‌மிழக அரசு‌க்கே சொ‌ந்தமானது எ‌‌னவும் கடற்றொழிலாளர்கள் ‌மீதான தா‌க்குதலை தடுப்பதற்கு க‌ச்ச‌த்‌தீவை ‌மீ‌ட்பதே ஒரே வ‌ழி எ‌னவும் த‌‌மிழக அரசு  கூ‌றியு‌ள்ளது.

சிறிலங்காவிடம் க‌ச்ச‌த்‌தீவைக் கொடு‌த்தத‌ற்கு நாடாளும‌ன்ற ஒ‌ப்புத‌ல் பெற‌ப்பட‌வி‌ல்லை. சிறிலங்காவிடமிருந்து க‌ச்ச‌த்‌தீவை ‌மீ‌ட்பது கு‌றி‌த்து பே‌ச்சு நட‌த்த வே‌‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் த‌மிழக அரசு மனு‌வி‌ல் குறிப்பிட்டு‌ள்ளது.

இ‌ந்த பொதுநல மனு எதிர்வரு‌ம் 23‌ம் திகதி உய‌ர் ‌நீ‌திம‌ன்ற மதுரை ‌கிளை‌யி‌ல் ‌விசாரணை‌க்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

மானிய முறையில் எரிபொருளைப் பெற மீனவ சங்கங்கள் சில இணக்கம்!

news
எரிபொருளின் விலை அதிகரிப்புச் சுமையைக் குறைக்க அரசாங்கத்தால் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ள எரிபொருள் மானியத்திற்கு நீர்கொழும்பு மீனவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, இன்றைய தினம் முதல் நீர்கொழும்பு எரிபொருள் விற்பனை நிலையங்களில் நீர்கொழும்பு மீனவர்கள் ஒரு லீற்றர் மண்ணெண்ணெயை 81 ரூபாவுக்கு பெற்றுக்கொள்ள முடியும் என  நீர்கொழும்பு கடற்கரைத்தெரு ஐக்கிய மீனவர் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், சிலாபத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மீனவருக்காக நீர்கொழும்பு மீனவர்கள் இரண்டு நாட்கள் துக்க தினம் அனுஷ்டிக்கவுள்ளனர்.

நீர்கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் நேற்று மாலையில் மீனவர்களுக்கிடையில் இடம்பெற்ற விசேட கூட்டத்திலேயே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தீர்மானிக்கப்படும் இரு நாட்களில் கடற்றொழிலுக்குச் செல்லாமல் துக்க தினம் அனுஷ்டிப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ்.குருநகர் மீனவர்களும் மானிய முறையில் எரிபொருளை பெற்றுக்கொள்ள இணங்கியுள்ளதாக குருநகர் மீனவர் சங்கம் தெரிவித்துள்ளது. 

யாழ். கே.கே.எஸ் வீதிக்கு காப்பெற் போடும் பணிகள் ஆரம்பம்

news
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதி அகலிப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடையவுள்ள நிலையில் வீதிக்கு காப்பெற் போடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஓராண்டு காலமாக காங்கேசன்துறை யாழ்ப்பாணம் வீதி அகலிப்பு பணிகளின் காரணமாக இந்த வீதியால் பயணம் செய்யும் வாகனங்களும் பொது மக்களும் பாடசாலை மாணவாகளும் பெரும் சிரமங்களை அனுபவித்து வந்துள்ளனர். இன்றும் தொடர்ந்து அந் நிலையே காண்படுகிறது.

வீதியின் இருமருங்கும் கிளறப்பட்டு கிறவல் போடப்பட்டமையாலும் வீதியின் மையப் பகுதயில் உள்ள வீதி குன்றும் குழியுமாக காணப்படுவதினாலும் போக்குவரத்து செய்வதில் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகிய நிலைமை தொடர் கதையாகவே இருந்துவந்துள்ளது.

ஓராண்டு நிறைவடையும் நிலையிலேனும் பொது மக்களுக்கு நம்பிக்கையேற்படும் வகையில் சுமார் இருநூறு மீற்றர் தூரம் வரையேனும் ஒரு பகுதிக்கு காப்பெற் போட முனைந்துள்ளமை பொது மக்கள் மத்தியில் சற்று நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பாடசாலை மாணவி தற்கொலை

news
 மதவாச்சி - தம்மென்னாவ பகுதியில் பாடசாலை செல்லும் சிறுமி ஒருவர் தனது பாடசாலை கழுத்துப் பட்டியை பயன்படுத்தி தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று பிற்பகல் 2 மணிக்கும் 3 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இடம்பெற்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
பாடசாலை சென்று வீடு திரும்பிய மாணவியே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். செவ்வந்தி சசனிக்கா எனப்படும் 15 வயதுடைய சிறுமியே தற்கொலை செய்து கொண்டவராவார். தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.மதவாச்சி காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
 
இதேவேளை அனுராதபுரம் நாத்தண்டிய பிரதேசத்தில் ரயில் மோதி 35 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவரும் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து புத்தளம் நோக்கி சென்ற ரயிலிலேயே மோதி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு  வருகின்றனர்.

சிறிலங்காவின் இராணுவ நீதிமன்றம் அர்த்தமற்றது; சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு

news
தமது இராணுவத்தின் மீது எழுந்துள்ள போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணைகளை திசை திருப்பும் முகமாகவே சிறிலங்கா அரசாங்கம், இராணுவ நீதிமன்றத்தை நியமித்துள்ளதாக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றஞ்சாட்டியுள்ளது.

அரசினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் குறித்து விசாரிக்க இராணுவ நீதிமன்றம் ஒன்றை நியமித்துள்ளதாக சிறிலங்கா இராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூரிய அறிவித்திருந்தார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படுவதற்குச் சாத்தியமுள்ள சூழலில், மற்றொரு அர்த்தமற்ற நகர்வை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. என  மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்திருக்கின்றார்.

இந்த இராணுவ நீதிமன்றத்தை நியமித்துள்ள இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய, போரின் இறுதி ஆண்டுகளில் போர் வலயமான வன்னிப் பகுதிக்குப் பொறுப்பான தளபதியாக இருந்தவர்.

ஒட்டுமொத்த போரின் திட்டமிடல் மற்றும் நடவடிக்கைகளில் அவர் முழுமையாகத் தொடர்புபட்டிருந்தவர். அவ்வாறான ஒருவரால் நியமிக்கப்பட்டுள்ள இராணுவ நீதிமன்றத்தில் அங்கம் வகிக்கும் இராணுவ அதிகாரிகளால், தமது நண்பர்களான சக அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட மோசமான மீறல்கள் குறித்து உண்மையை கண்டறியும் நடுநிலையான, சுதந்திரமான விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என எதிர்பார்க்க முடியாது எனவும் அடம்ஸ் இவ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அரசுக்கு ஆதரவான உறுப்பினர்களைக் கொண்ட விசாரணைக் குழுக்களை நியமிக்கும் நீண்ட வரலாற்றை சிறிலங்கா கொண்டிருப்பதை இவ் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

Monday, February 13, 2012

நாடு முழுவதிலும் போக்குவரத்து ஸ்தம்பிதம்


எரிபொருள் விலையேற்றத்தினை ஆட்சேபித்து இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள போரட்டம் தற்போதைய நிலைவரையில் வெற்றியளித்துள்ளது.
பெரும்பாலும் நாட்டின் சகல பாகங்களுக்குமான போக்குவரத்துக்கள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.
யாழ்ப்பாணம் மாம்பழம் சந்தியில் மக்கள் மயப்படுத்தப்பட்ட அரச பேரூந்து மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை விட மன்னார், கண்டி யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கொழும்பு ஆகிய இடங்களில் இந்த போராட்டம் காரணமாக போக்குவரத்துக்கள் முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.
வடபகுதியான யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய மாவட்ட மீனவர்கள் தாங்கள் தென்னிலங்கை மீனவர்களுடன் இணைந்து செயற்படத் தயார் என்று அறிவித்துள்ளனர்.
இதனிடையே, எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு எதிராக இலங்கை பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் ஆரம்பித்துள்ள பணி பகிஸ்கரிப்பு வெற்றியளித்துள்ளதாக தனியார் பேரூந்து உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ண தெரிவித்துள்ளார்.
தமது கோரிக்கை தொடர்பில் இதுவரையில் உரிய அதிகாரிகள் தீர்வு இதுவரையிலும் முன்வைக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இந்த தனியார் பேரூந்துகளின் பணிப் புறக்கணிப்பு காரமாக நாட்டின் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் தென்னிலங்கை மீனவர்கள் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு தாமும் ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
இந்த விலையேற்றம் காரணமாக தமது தொழிலுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தனியார் பஸ் உரிமையாளர்கள் நடத்திய பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது


இலங்கையில் தனியார் பஸ் உரிமையாளர்களினால் நடத்தப்பட்ட பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலையேற்றத்தைத் தொடர்ந்து தனியார் பஸ் உரிமையாளர்கள் நாடு தழுவிய ரீதியில் போராட்டமொன்றை நடத்தியிருந்தனர்.
எரிபொருளுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் அல்லது கட்டணங்களை அதிகரிக்க வேண்டுமென தனியார் பஸ் உரிமையாளர்கள் கோரியிருந்தனர்.
அரசாங்கத்திற்கும் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர், போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
இதன்படி, பஸ் கட்டணங்கள் 20 வீதத்தினால் உயர்த்தப்பட உள்ளது. குறைந்தபட்ச கட்டணம் 7 ரூபாவிலிருந்து 9 ரூபாவாக உயர்த்தப்படவுள்ளது.
தனியார் பஸ் உரிமையாளர்கள் நடத்திய பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம் காரணமாக இன்று நாடு முழுவதிலும் பெரும் நெருக்கடி நிலைமை ஏற்பட்டது.
குறிப்பாக பாடசாலை மாணவர்கள் மற்றும் தொழிலுக்கு செல்வோர் கடும் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.
இதேவேளை, தனியார் பஸ் உரிமையாளர்கள் 17 வீத கட்டண அதிகரிப்பை கோரியதாகவும் அரசாங்கம் 20 வீத கட்டண அதிகரிப்பிற்கு அனுமதி அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மண்ணெண்ணெய் விலை உயர்வுக்கு எதிராக மலையகத்தில் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம்!- மனோ கணேசன் அழைப்பு


மண்ணெண்ணெய் விலையை 50 விகிதத்தால் உயர்த்தி அரசாங்கம் உழைக்கும் தோட்ட தொழிலாளி தலையில் ஓங்கி அடித்துள்ளது. ஏற்கனவே கூட்டு ஒப்பந்த நடைமுறையில் ஒரு நாள் ஒன்றுக்கு பறிக்கப்படும் கொழுந்து நிறை தொடர்பில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளினால் நமது தொழிலாளர்களுக்கு உழைப்புக்கு உரிய ஊதியம் கிடைப்பதில்லை.
இதன் காரணமாக தோட்ட தொழிலாளி வறுமையின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் இன்றைய வேளையிலேயே இந்த மண்ணெண்ணெய் விலை ஒரேயடியாக ஐம்பது விகிதத்தால் எந்தவித தயவு தாட்சண்யமும் இல்லாமல் உயர்த்தப்பட்டுள்ளது.
அத்துடன் எரிபொருள் விலையேற்றம் காரணமாக இன்னும் சில நாட்களில் ஏனைய அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் உயரப்போகின்றது. தோட்ட தொழிலாளர்கள் மத்தியில் இன்று நிலவுகின்ற இந்த மோசமான நிலைமையை அரசாங்கத்திற்கும், நாட்டுக்கும் எடுத்து காட்டி உரிய நிவாரணங்களை கோரும் முகமாக ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம், மலையகம் முழுக்க அரசியல், தொழிசங்க பேதங்களுக்கு அப்பாற்பட்ட ஐக்கியத்துடன் நடத்தப்படவேண்டும்.
இதற்கு அனைத்து மலையக தொழிற்சங்கங்களும் ஆதரவு வழங்க வேண்டும் என ஜமமு-ஜதொகா தலைவர் மனோ கணேசன் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியதாவது, நாட்டின் ஏனைய தனியார் பேரூந்து மற்றும் அரசு துறைகளை சார்ந்த தொழிலாளர்களும், மீனவ தொழிலாளர்களும் விலைவாசி உயர்விற்கு எதிராக இன்று தெருப்போராட்டங்களை ஆரம்பித்துள்ளார்கள்.
இந்நிலையில் நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெழும்பாக இருக்கும் மலைநாட்டு தோட்டத்தொழிலாளியும் எமது வாழ்வாதாரங்களை பாதுகாத்துகொள்ளும் நோக்கில் போராடி தமது அடையாள எதிர்ப்பை காட்ட வேண்டிய வேளை தற்போது வந்துவிட்டதாக நாம் நம்புகின்றோம்.
ஏனைய அனைத்து துறை சார்ந்த தொழிலாளர்களும் தமது எதிர்ப்புகளை காட்டும் போது, மலையக தோட்ட தொழிலாளர் தமது எதிர்ப்பை காட்டாவிட்டால், விலைவாசி உயர்வு என்பது தோட்ட தொழிலாளிக்கு ஒரு பிரச்சினையாக இல்லை என்றும், எனவே இது தொடர்பில் தொழிலாளிக்கு எந்தவித நிவாரணமும் அவசியம் இல்லை என்று அரசாங்கம் கருதுகின்ற நிலைமை ஏற்படும்.
எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் இடதுசாரி முன்னணி தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன ஆகியோர் இந்நடவடிக்கைக்கு தமது ஒத்துழைப்புகளை நல்குவதாக உறுதி அளித்துள்ளதாக மனோ கணேசன் தெரிவித்தார்.
இந்த யோசனை தொடர்பில், இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்க பொதுசெயலாளர் வேலாயுதம், ஜேவிபியின் இலங்கை தோட்ட தொழிலாளர் சங்க பொதுசெயலாளர் சந்திரசேகரன், விவசாய தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசுவாமி, இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி பொதுசெயலாளர் சதாசிவம் ஆகியோர் உடன்பாடு தெரிவித்துள்ளனர்.
தொழிலாளர் தேசிய முன்னணி தலைவர் திகாம்பரம், மலையக மக்கள் முன்னணி பொதுச்செயலாளர் லோரன்ஸ், நுவரெலியா மாவட்ட எம்பி ஸ்ரீ ரங்கா ஆகியோருடனும் இது தொடர்பில் தான் உரையாடியுள்ளதாக மனோ கணேசன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கை உரிய கலந்துரையாடல்களுக்கு பின் உடன் அறிவிக்கப்படும் என மனோ கணேசன் மேலும் தெரிவித்தார்.

யாழிலும் தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு! இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகளின் மீது இன்று தாக்குதல்!


எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து யாழ்.மாவட்டத்தில் தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை நடத்தி வரும் நிலையில் பெருமளவு பயணிகள் போக்குவரத்து வசதிகள் போதாமையினால் நகரில் நீண்டநேரம் தரித்து நின்றதுடன், நகரில் வழக்கத்திற்கு மாறாக அதிக சனநெருக்கடியும் ஏற்பட்டிருந்தது. 
நேற்று முன்தினம் முதல் தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் உள்ளக மற்றும் வெளிமாவட்ட போக்குவரத்து ஆகியவற்றில் இ.போ.ச பேருந்துகளே ஈடுபட்டு வருகின்றன. அவற்றுக்கும் தேவையான அளவில் பேருந்துகள் இன்மையினால் சில வெளிமாவட்ட போக்குவரத்துக்கள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன.
இதனால் வெளிமாவட்டங்களிலிருந்து வந்த பயணிகள் பெருமளவில், நகரிலும், பேருந்து நிலையத்திலும் கூடி விட்டனர். இதேபோல் பாடசாலை மாணவர்களும் பெருமளவில் கூடி விட்டதால் உடனடியாக நகருக்குள் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். இதற்கிடையில் உள்ளூர் சேவைகளுக்காகவே அதிகளவான மக்கள் நண்பகல் தாண்டியும் தமது இடங்களுக்குத் திரும்ப முடியாத நிலையில் காத்திருந்தனர்.
இதேபோல் கிளிநொச்சி மாவட்டத்திலும், அரச பணிக்காக சென்றிருந்த பலர் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டிருந்தது, மேலும் இன்று காலை போக்குவரத்துச் சீரின்மையினால் பல அரச பணியாளர்கள் தமது கடமைக்குத் திரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்.மாவட்டத்தில் இ.போ.ச போதுமானளவில் பேருந்துகள் முற்றும் பணியாளர்கள் இல்லாத நிலையில் மாவட்டத்தின் போக்குவரத்து தேவையில் பெரும் பகுதியை தனியார் துறையே தீர்த்து வந்தது.
இந்நிலையில் தனியார் துறையினரின் பணிப்பகிஷ்கரிப்பு மாவட்டத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டிருப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளதுடன், தனியர், மற்றும் அரச துறையின் பணிகளும் நேற்று முடக்கப்பட்டிருந்தது.
இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகளின் மீது இன்று தாக்குதல்!
யாழில் தனியார் பேருந்து ஊழியர்கள் தொடர் பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டு வரும் நிலையில், பணியில் ஈடுபட்டுவரும் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகளின் மீது இன்று காலையும், நண்பகலும் கல்வீச்சுத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ள.
11ம் திகதி நள்ளிரவு தொடக்கம் எரிபொருள் விலையேற்றம் செய்யப்பட்டுள்ளது, இந்நிலையில் இதனை எதிர்த்து தனியார் பேருந்து ஊழியர்கள் நேற்று முதல் யாழ்.மாவட்டத்தில் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் பொதுமக்களின்; நலனை அடிப்படையாக கொண்டு இலங்கை போக்குவரத்துச் சபையின் சேவைகள் இடம்பெற்று வருகின்றது.
இதனையும் தடுக்கும் நோக்கில் யாழ்.மீசாலை பகுதியில் இன்று காலை 8மணியளவில் பாடசாலை சேவையில் ஈடுபட்டிருந்த பேருந்தின் மீது இனந்தெரியாத நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் பாடசாலை மாணவியொருவர் காயமடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து நண்பகல் 12மணியளவில் யாழ். மாம்பழம் சந்திப்பகுதியிலும், இ.போ.ச பேருந்தின் மீது கல்வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவத்தில் பேருந்தின் சாரதி படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை இந்த தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும், தனியார் பேருந்து நேரக்கணிப்பாளர் ஒருவர் இன்று பிற்பகல் 1மணியளவில் யாழ்.நகரில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.