Sunday, February 12, 2012

யாழ் குடாநாட்டில் சட்டவிரோத மின்சாரம் பெற்ற 155 பேருக்கு அபராதம்! கொழும்பிலிருந்து சென்ற குழு அதிரடி நடவடிக்கை!


கொழும்பில் இருந்து வருகை தந்த மின்சாரசபை விசேட அதிகாரிகள் குழுவினர், யாழ்.குடாவில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் 4 நாட்கள் நடத்திய திடீர் சோதனையில் போது சட்டவிரோத மின்சார பாவனையாளர்கள் 155 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி நபர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்ட வழக்குகளின் தீர்ப்பின் படி 9.3 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இத்தொகையில் 1.5 மில்லியன் ரூபா நீதிமன்றத்துக்கு செலுத்தப்பட்டதுடன் நட்ட ஈட்டுத் தொகையாக இலங்கை மின்சார சபைக்கு 7.7 மில்லியன் ரூபா செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 7 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரையான நான்கு நாட்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைககளின் போதே சட்டவிரோத மின்சாரம் பெற்ற 155 பேர் சிக்கியுள்ளனர்.
இவர்களில் 77 பேர் மின் வாசிப்பு மானியில் மாற்றங்களைச் செய்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ஏனையோர் மின் கம்பிகளில் தற்காலிகமாக  மின்சாரத்தைப் பெற்றுள்ளனர்.
மின்சாரம் மற்றும் எரி சக்தித்துறை அமைச்சர் சம்பிக்க ரணவக்க நேரடி உத்தரவின் பேரில் கொழும்பிலிருந்து வந்துள்ள விசேட விசாரணைக் குழுவினரே இந்த திடீர் நடவடிக்கைகளில் ஈடுபட்டடனர்.
இதேவேளை, கடந்த ஆண்டு இறுதி மூன்று மாதங்களில் நாடு முழுவதும் மின்சார சபையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் மூலம் சட்டவிரோத மின்சாரம் பெற்றவர்களிடம் இருந்து 50 மில்லியன் ரூபா தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இதேவேளை சட்டவிரோத மின்சாரம் பெறும் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் தொடர்ந்தும் யாழ் குடாநாடு முழுவதும் இவ்வாறான அதிரடி நடிவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக மின்சார சபையினர் அறிவித்துள்ளனர்.
மேலும், சட்டவிரோத மின்சாரம் பெறுவோர் கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் எதிர்காலத்தில் அவர்களுக்கான மின் இணைப்புக்கள் வழங்கப்பட மாட்டாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment