
சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் ஜனாதிபதியும், இராணுவத்தினரும் குற்றவாளிகளாக நிற்கவேண்டிய நிலை வராது. இதனைத் துரும்பாகப் பயன்படுத்தி அரசு நாட்டு மக்களை அச்சுறுத்தி வருகின்றது. ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிரான சர்வதேச அழுத்தங்களை எதிர்கொள்வதற்கான அடித்தளத்தை அமைத்துக் கொள்ளாமல் அரசு களமிறங்கப்போகின்றது. நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்து வதற்கே அரசு முயற்சிக்கின்றது என ஐ.தே.க. குற்றஞ்சாட்டியுள்ளது.
நாட்டின் இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் முக்கிய பங்காளியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் புறக்கணித் துவிட்டு அரசு தன்னிச்சையாகத் தீர்மானங்களை எடுக்கமுடியாது. அவ்வாறு தீர்மானங்களை எடுக்குமாயின், அவை நாட்டில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் கூறியவை வருமாறு:
ஜனாதிபதியையும், இராணுவத்தினரையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் குற்றவாளிகளாக இனங்காண்பிப்பதற்கு எதிர்க்கட்சிகள் சதிசெய்து வருகின்றன என அரசு கூறுகின்றது. இது முற்றிலும் பொய். ஏனெனில், 2002 ஆம் ஆண்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பாகக் கொண்டுவரப்பட்ட ரோம் உடன்படிக்கையில் எமது கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கைச்சாத்திடவில்லை. அதனால் இலங்கையின் எந்தப் பிரஜையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக நிற்கவேண்டிய தேவையில்லை. அரசு இதைக் காரணங்காட்டிக்கொண்டு நாட்டு மக்களை அச்சுறுத்தும் வகையில் பொய்யானவற்றைக் கூறிவருகின்றது.
ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சர்வதேச தரப்பிலிருந்து இலங்கைக்கு எதிராக அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும் என்பதை அரசு அறிந்திருந்தும்கூட, இவற்றிற்கு முகங்கொடுப்பதற்கு சரியான அடித்தளத்தை இடாமல் கூட்டத் தொடரில் களமிறங்குகின்றது. இதனால் நாடும் நாட்டு மக்களுமே பெரும் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கவேண்டிய அவலநிலை ஏற்படும். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் வெளிக்கிளம்புகின்ற எதிர்ப்புகளுக்கு முகங்கொடுப்பதற்கு அரசு இராஜதந்திர ரீதியில் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆனால், அப்படியான எந்தவித நடவடிக்கைகளிலும் அரசு ஈடுபடவில்லை என்பது அவர்களின் செயற்பாடுகளினூடாகத் தெரிகின்றது என்றார்.
No comments:
Post a Comment