
“ஆச்சரியமான தேசத்தை கட்டியெழுப்புவோம்“ எனும் தொனிப் பொருளில் வரலாற்று சிறப்பு மிக்க அநுராதபுரம் நகரில் ஸ்ரீ சம்புத்வ ஜயந்தி மாவத்தையில் இன்று காலை 8.30மணியளவில் சுதந்திர தின நிகழ்வுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதில் வெளிநாட்டு தூதுவர்கள், பிரதமர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், இராணுவ அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் மதத் தலைவர்கள் அடங்கலாக இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதேவேளை முப்படைகளை சேர்ந்த ஆயிரத்து 400 பேரின் அணிவகுப்பு மரியாதையும் 2 ஆயிரத்து 500 கலைஞர்களின் கலை கலாசார நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.
இன்று காலை 8.30 மணியளவில் முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபரினால் பிரதான மேடைக்கு அழைத்துச் செல்லப்படும் ஜனாதிபதி அதனை தொடர்ந்து தேசிய கொடியை ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைப்பார்.
இதனையடுத்து சகல இனங்களையும் பிரதிநிதித்துவப் படுத்தும் மாணவர்களின் தேசிய கீதம், ஜயமங்கள கீதம் என்பன இசைக்கப்பட்டு சுதந்திரத்துக்காக உயிர் நீத்தவர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளதோடு மரியாதை நிமித்தம் 21 பீரங்கி வேட்டுக்களும் தீர்க்கப்படும்.
இதனை தொடர்ந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுதந்திர தின விசேட உரையை நிகழ்த்துவார். ஜனாதிபதியின் உரை முடிவடைந்த பின்னர் முப்படையினரின் அணிவகுப்பு மற்றும் கலைஞர்களின் கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
இதேவேளை இன்று மாலை அநுராதபுரம் தந்திரிமலை ஒயாமடுவ பகுதியில் நடத்தப்படவுள்ள தேசத்திற்கு மகுடம் கண்காட்சி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
இந்த கண்காட்சி இன்று மாலை 4 மணி முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை நடைபெற ஏற்பாடாகியுள்ளது. அத்துடன் சுதந்திர தின வைபவம் மற்றும் தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை முன்னிட்டு அநுராதபுர நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment