Saturday, February 18, 2012

யாழ். பாலைதீவு அந்தோனியார் தேவாலயத்திற்கு அருகில் கடற்படையினரால் விகாரை அமைப்பு


யாழ்.மண்டைதீவை அண்மித்ததாகவுள்ள பாலைதீவில் இலங்கை கடற்படையினரால் அமைக்கப்பட்டுவரும் பௌத்த விகாரை தொடர்பில் கத்தோலிக்க மக்களும், மதத் தலைவர்களும் தமது கடுமையான அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
குறித்த தீவு, மண்டைதீவை அண்மித்ததாகவுள்ள பகுதி, எனவே யுத்தம் காரணமாக இந்தத் தீவில் கடற்படையினர் முகாமிட்டிருந்ததுடன், பொதுமக்கள் எவரும் அங்கு செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை.
ஆனால் கச்சைதீவைப் போன்று இந்த தீவிலும் கிறிஸ்தவர்களின் பாரம்பரியமான கத்தோலிக்க தேவாலயமொன்று அமைந்துள்ளது. பாரம்பரியமும், அதிகளவான மக்களால் வருடாவருடம் வழிபாட்டிற்குரியதாகவும் இந்த தேவாலயம் யுத்தத்திற்கு முன்னர் இருந்தது.
மேலும் கடற்றொழிலாளர்கள் இந்த தீவில் ஓய்வெடுக்கும் இடமாகவும், வலைகளை உலர்த்திக் கொள்ளும் இடமாகவும் இந்தப் பகுதி பயன்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் யுத்தத்தின் பின்னர் மக்கள் இந்த தீவிற்கு அண்மைக்காலமாகச் சென்று வருகின்றனர்.
மேலும் தேவாலயத்தை புனரமைப்பதற்கான ஏற்பாடுகளையும் மக்கள் மேற்கொண்டுள்ளனர். எனினும் இந்த தேவாலயத்திற்கு அருகிலேயே தற்போது கடற்படையினரால் பௌத்த விகாரையொன்றும் அமைக்கப்பட்டு வருகின்றது.
பெருமெடுப்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த விகாரையமைப்பின் பணிகளில் முக்கியமாக பழமையான விகாரை போன்ற தோற்றத்தை ஏற்படுத்த பழைய செங்கற்களைக் கொண்டு இந்த விகாரை அமைக்கப்பட்டு வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே இந்த நடவடிக்கை கிறிஸ்தவர்களின் தனித்துத்தை பாதிக்கும் என்பதுடன், வரலாற்றில் இடைச்செருகல்களை ஏற்படுத்தும் ஆக்கிரமிப்பு நடவடிக்கையுமாகும் என கத்தோலிக்க மக்களும் மதத்தலைவர்களும் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment