Friday, February 3, 2012

சிறிலங்கா சுதந்திர தினத்தை முன்னிட்டு பாரிய செலவினங்களினாலான ஏற்பாடு

news
வடக்கில் அடிப்படை வசதிகள் ஏதுமின்றி மீள்குடியேறிய மக்கள் இருட்டில் வாழ்ந்து வருகின்ற நிலையில் சிறிலஙங்கா அரசு சுதந்திர தினத்திற்காக ஆயிரம் மில்லியன் ருபாவுக்கும் அதிகமான செலவுகளை செய்துள்ளது.

சிறிலங்காவின் 64வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்படவுள்ள தேசத்துக்கு மகுடம் கண்காட்சிக்கு  பாரிய செலவினங்களுடனான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிகழ்வை அலங்கரிக்க மின்சாரப் பணிகளுக்காகப் பல மில்லியன் ரூபா செலவு செய்யப்படுவதுடன் பாதுகாப்புப் பணிகளுக்காகக சுமார் ஐயாயிரம் காவற்றுறையினரும் அவர்களுடன் முப்படையினரும் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

அநுராதபுரத்திலுள்ள ஸ்ரீ சம்புத்தவ ஜயந்தி மாவத்தையில் நாளை மறுதினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் சுதந்திர தினக் கொண்டாட்டம் இடம்பெறவுள்ளது. இதனை முன்னிட்டு கோலாகல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் அதற்கென சிறிலங்கா காவற்றுறையினர் சுமார் ஐயாயிரம் பேரும் அவர்களுக்கு உதவியாக முப்படையினரும் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இந் நிகழ்வை நேரில் கண்டுகளிக்க ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் வருகை தரலாமென எதிர்பார்க்கப்படுவதால் பொது மக்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு பொலிஸாருடன் முப்படையினரும் விசேட கடமையில் ஈடுப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு அநுராதபுர நகர் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளதுடன் விசேட போக்குவரத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் பௌத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க மத வழிபாடுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சுதந்திரதினத்தை முன்னிட்டு முப்படையினர் மற்றும் பொலிஸாரின் விசேட அணிவகுப்பு இடம் பெறவுள்ளது. இதற்கான ஒத்திகை நடவடிக்கைகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறன.

இதேவேளை சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்துள்ள தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்திக் கண்காட்சியும் நாளை மறு தினம் தந்திரிமலை ஓயாமடுவ பிரதேசத்தில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்தி கண்காட்சியை முன்னிட்டு அநுராதபுரம் மாவட்டத்தில் பாரிய மின் விநியோகத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அநுராதபுர மாவட்டத்தின் மின் விநியோகத் திட்டத்திற்கு மாத்திரம் 1020 மில்லியன் ரூபா நிதியை அரசாங்கம் செலவிடவுள்ளதாக தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்தி கண்காட்சியின் ஏற்பாட்டுக் குழுச் செயலாளரும் விளையாட்டுத் துறை அமைச்சின் செயலா ளருமான உதய ரஞ்சித் செனவிரத்ன தெரிவித்தார்.

இந்த திட்டத்திற்கமைய அநுராதபுரத்திலிருந்து ஒயாமடு வரையிலான 26 கிலோ மீற்றர் பரப்பைக் கொண்ட கண்காட்சி பூமிக்கு 33 கிலோ வாட் அதிசக்தி வாய்ந்த மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கென 78 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

இது தவிர அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள வீதிகளுக்கு 500 வீதி விளக்குகள் மற்றும் பாதுகாப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதற்கென 213.73 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment