Thursday, April 5, 2012

அல்லைப்பிட்டி கிராமிய வைத்தியசாலை திறந்துவைப்பு


அல்லைப்பிட்டி கிராமிய வைத்தியசாலை நேற்று சனிக்கிழமை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இத்திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்திரி அலென்ரின் இவ்வைத்தியசாலையைத் திறந்து வைத்தார்.
இவ்விழாவில் யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், வேலணை பிரதேச சபை தவிசாளர் சி.சிவராசா, வேலணை பிரதேச செயலர் மஞ்சுளாதேவி, மருத்துவ உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலதரப்பட்டோர் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாணத்தில் எதிர்காலத்தில் நீருக்கு தட்டுப்பாடு ஏற்படும்- கிறிஸ்ரோபர் கோகே


யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீரைப் பாதுகாப்பதற்குரிய சிறந்த திட்டங்கள் எதுவும் இல்லாதிருப்பது எதிர்காலத்தில் நீர்வளம் அழிக்கப்பட்டு நீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலையை உருவாக்கிவிடும் என்று அமெரிக்க தூதரக அலுவலரும் சூழலியலாளருமான கிறிஸ்ரோபர் கோகே தெரிவித்துள்ளார்.
யாழ். சமூக செயற்பாட்டு மையத்திலுள்ள அமெரிக்க தகவல் கூடத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க உள்ளூர் அளவில் நடவடிக்கை எடுக்க ‘உலகத்தை அணிதிரட்டுவோம்’ என்ற தொனிப்பொருளில் கலந்தாய்வரங்கு ஒன்று நேற்று புதன்கிழமை நடைபெற்றுள்ளது
இக்கலந்தாய்வரங்கின்போது பொது விரிவுரையை கிறிஸ்ரோபர் கோகே ஆற்றிய போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
‘யாழ்ப்பாணத்தில் சிறந்த அழகான கடற்கரைகள் இருக்கின்றன. இந்த கடற்கரைகளில் கழிவுப் பொருட்களை அகற்றி பாதுகாக்க வேண்டும். யாழ்ப்பாணத்தின் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதன் மூலம் நீண்ட காலத்திற்கு எமக்கு ஏற்படக் கூடிய பொருளாதாரப் பிரச்சனைகளை தடுக்க முடியும்
இலங்கையில் காடுகள் அழித்தல் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இந்தப் பிரச்சனை கட்டுப்படுத்த முடியாது தொடர்ந்து நீடித்து வருகிறது. இலங்கையின் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதன் ஊடாக உல்லாசத் துறையை மேம்படுத்த முடியும்
எமது சூழலைப் பாதுகாப்பாக வைத்திருந்தால் எதிர்காலத்தில் எமக்கு இயற்கையால் எந்தப் பிரச்சனையும் வராது வரமுடியாது’ என்றார்.

சுன்னாகம் பஸ் நிலைய புனரமைப்பிற்காக 10 மில்லியன்


சுன்னாகம் பஸ் நிலையம் புதிய கட்டடித்தை நிர்மாணிப்பதற்கு அரசிடம் இருந்து சுமார் பத்து மில்லியன் ரூபா நிதி கிடைக்கப்பெற்றுள்ளதாக வலி தெற்கு உடுவில் பிரதேச சபைத் தலைவர் திருமதி சுலோசனா மருகநேசன் தெரிவித்தார்.
சுன்னாகம் நகரப் பகுதயில் அமைந்துள்ள பஸ் நிலையம் கடந்த பல வருடங்களாக பல குறைபாடுகளின் மத்தியில் இயங்கி வருகின்றது.
இந்நிலையில் பஸ் நிலையத்தை திருத்தி புதிய கட்டிடம் அமைப்பதற்க்கு நிதி கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் இந்நிதியின் மூலம் விரைவில் இக்கட்டிடப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் பிரதேச சபையின் செயலாளர் தெரிவித்தார்.

யாழில் எதிர்க்கட்சிகளின் மே தின நிகழ்வு கூட்டமைப்பின் தலைமையில்

news
யாழ்ப்பாணத்தில் எதிர்க்கட்சிகளின் மே தினம், தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் நடைபெறவுள்ளதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மேதினத்தையொட்டி, எதிர்க்கட்சிகளினால் யாழ்ப்பாணத்தில் பொதுக்கூட்டமும், பேரணியும் நடத்துவதென முதன்மை எதிர்க்கட்சியான ஐ.தே.க வினால் முடிவெடுக்கப்பட்டிருந்தது. அதன்படி இந்த மே தினத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் இணைந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. அத்துடன் கூட்டமைப்பை இணைத்துக் கொள்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்நிலையில் நேற்றையநாள், கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில், மேதினம் குறித்து பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இப்பேச்சுவார்த்தையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கலந்து கொண்டது. இதில், மேதினக் கூட்டமானது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் நடைபெறவும், அதற்கான ஏற்பாடுகள் யாவையும் கூட்டமைப்பே மேற்கொள்ளவும் முடிவு எட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பொதுக்கூட்டத்திற்காக போடப்படும் மேடையில் தனியொரு கட்சியை பிரதிபலிக்காது, பங்குகொள்ளும் அனைத்துக் கட்சிகளையும் பிரதிபலிக்கும் வண்ணம் கொடிகள் நாட்டப்படுவதாகவும், பேரணியிலும் அதேபோன்று நடைமுறைகளைக் கடைபிடிப்பதாகவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் எமது ஒன்லைன் உதயனுக்கு தெரிவிக்கையில்,
"யாழ்ப்பாணத்தில் மேதினக் கூட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமயில் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. இம்முடிவு கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர்களின் முடிவேயாகும். அதன்படி மேதினத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கூட்டமைப்பே மேற்கொள்ளும்" என்றார்.

அத்துடன், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்தவும், அடிப்படைச் சம்பளம் 12500 ரூபாவாக வழங்கவேண்டும் எனவும், மீள்குடியேற்றம் குறிப்பிட்ட கால எல்லைக்குள் நிறைவுறுத்த வேண்டும் எனவும் அரசிற்கு கோரிக்கை விடுத்து கோஷம் எழுப்புவதெனவும் முடிவு செய்யப்பட்டது.

அதேவேளை, யாழ்ப்பாண நகரில் அல்லாது பிறிதொரு இடத்தில் மேதின நிகழ்வை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ். மாநகராட்சி தற்போது ஆளும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளதால், அனுமதி பெறுவதில் தடங்கல்கள் ஏற்படும் என்பதால், தமிழ்த் தேசியக் கூட்டரமப்பின் வசமுள்ள இடத்தில் நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

யாழ். குருநகர் பகுதியில் புதிதாக புத்தர் சிலையொன்றை அமைக்கும் பணியில் படையினர்


யாழ்.கடற்கரை வீதி, குருநகர் பகுதியில் புதிதாக புத்தர் சிலையொன்றை அமைக்கும் பணியில் படையினர் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக பிரதேச மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
குறித்த பகுதியில் கடந்த காலங்களில் பாரியளவு கடற்படை காவலரண் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த வாரமளவில் குறித்த காவலரண் அகற்றப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த பகுதியை மக்களுக்கு விடுவிப்பதற்காகவே காவலரண் அகற்றப்பட்டுள்ளதாக மக்கள் நம்பியிருந்தனர். எனினும் அந்த இடத்தில் நேற்று முதல் புத்தர் சிலையொன்றை அமைக்கும் பணியை படையினர் ஆரம்பித்துள்ளனர்.
புதிய புத்தர் சிலையின் மூலம் யாழ்.கோட்டைக்கு சுற்றுலா வரும் தென்னிலங்கை மக்களை கவரமுடியும் என படையினர் சிலர் மக்களுக்குத் தெரியப்படுத்தியிருக்கின்றனர்.
இதேவேளை யாழ்.மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட இந்தப் பகுதியில் சிலை அமைப்பது தொடர்பில் சபையிடம் எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என மாநகர சபை வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.
மேலும்  யுத்தத்தின் பின்னர் யாழ்.பிரதான வீதியிலுள்ள அரச மரமொன்றின் கீழும் விகாரை ஒன்றினை அமைப்பதற்கு படையினர் முயற்சித்திருந்தனர். எனினும் பொதுமக்கள் மற்றும் மாநகர சபையின் தலையீட்டால் அது நிறுத்தப்பட்டது.

மண்டைத்தீவுக்கு மின்சாரம் வழங்க முடியாது! மின்சார சபை அத்தியட்சகர் தெரிவிப்பு


வேலணை பிரதேச சபையின் கீழ் உள்ள மண்டைத்தீவு பகுதிக்கு மின் இணைப்பு வழங்க முடியாதென வேலணைப் பகுதிக்கு பொறுப்பான மின்சார சபை அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் நடைபெற்ற வேலணை பிரதேச சபையின் ஒருங்கிணைப்பு கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த பேராட்டக்காலங்களில் மண்டைத்தீவு அதிகமாகப் பாதிக்கப்பட்டதாகவும் தமக்கு மின்சாரத்தை விரைவாக வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொது அமைப்பினர் நேற்றைய கூட்டத்தில் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு பதிலளித்த அத்தியட்சகர், தற்போது மின்சார சபை மிகவும் பாரிய நிதி நெருக்கடிக்குள்ளாக தள்ளப்பட்டுள்ளதாகவும் யாராவது முன்வந்து நிதி பங்களிப்பை வழங்கினால் மின்சாரம் வழங்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.
இதனால் கொதிப்படைந்த பொது அமைப்பினர் ஏற்கனவே நாட்டப்பட்ட 9 மின்கம்பங்களையும் பிடுங்கிக்கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொண்டனர்.
இதேவேளை, மண்டைத்தீவுக்கு விரைவில் மின்சாரம் வழங்கப்படும் என அரசாங்கம் தொடர்ச்சியாக பிரசாரம் செய்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

யாழ் நன்னீர் கிணறுகளில் மலசலகூட நீர் கலக்கும் அபாயம்


யாழ் மாவட்டத்திலுள்ள நன்னீர் கிணறுகளில் மலசலகூட நீர் கலந்து மக்களுக்கு தெற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளதாக வேள்ட் விஷன் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் றொசைஸ்றோ தெரிவித்துள்ளார்.
யாழ்.சாவகச்சேரி நகர சபையின், மீசாலை பொதுநூலக அபிவிருத்தி ஆலோசனைச் சபையின் உதவியுடன் முன்பள்ளி மாணவர்களுக்கு இலைக்கஞ்சி வழங்கலும், போஷாக்குணவு பற்றிய கருத்தமர்வும் இடம்பெற்றது.
நகரபிதா இ.தேவசகாயம் பிள்ளை தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
கிணற்று நீர் வற்றும் காலங்களில் மலசலகூடக் கழிவு நீரும் கிணற்று நீர் ஊற்றுக்களுடன் கலக்கும் அபாயமும் யாழ்.மாவட்டத்தில் காணப்படுகின்றது.
நீர் பரிசோதனையில் இது ஆய்வு செய்யப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மலசல கூடத்திலிருந்து வெளியேறும் கழிவு நீரை மட்டும் வேறு தொட்டிக்குள் செலுத்தி அதனை சுத்திகரிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும்.
மழை காலங்களில் நீரைச் சேமித்து வேறு தேவைகளுக்குப் பயன்படுத்துதல் வேண்டும். சிறு குளங்களை அமைத்து மழை நீரைக் கடல் நீருடன் சேர விடாது சேமிக்க வேண்டும்.
இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த நகர சபைகள், பிரதேச சபைகள், சனசமூக நிலையங்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புக்கள் என்பன முன்வர வேண்டும் என்றார்.
இதேவேளை, வடமாகாணத்தில் போஷாக்கென்பது பெரும் பிரச்சினையான விடயமாக உள்ளது. குறிப்பாக முன்பள்ளி மாணவர்கள் மற்றும் இளம் பருவத்தினர் மத்தியில் இது அவதானிக்கப்பட்டுள்ளது.
முன்பள்ளி மாணவர்களின் போஷாக்கு ஆசிரியர்களின் கல்வி மேம்பாடு மற்றும் முன்பள்ளிகளில் அதிகமாகக் காணப்படும் வளப்பற்றாக்குறை போன்ற விடயங்கள் அவதானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான மேம்பாட்டுத் திட்டங்களை பிரதேச சபைகள், நகரசபைகள், சுகாதாரத் திணைக்களங்கள் மற்றும் கல்வித் திணைக்களங்கள் போன்றவற்றுடன் இணைந்து செயற்படுத்தவுள்ளோம்.
இத் திட்டங்களை மேம்படுத்துவற்கு பெற்றோர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வேள்ட் விஷன் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் றொசைஸ்றோ தெரிவித்துள்ளார்.