Thursday, April 5, 2012

யாழ். குருநகர் பகுதியில் புதிதாக புத்தர் சிலையொன்றை அமைக்கும் பணியில் படையினர்


யாழ்.கடற்கரை வீதி, குருநகர் பகுதியில் புதிதாக புத்தர் சிலையொன்றை அமைக்கும் பணியில் படையினர் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக பிரதேச மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
குறித்த பகுதியில் கடந்த காலங்களில் பாரியளவு கடற்படை காவலரண் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த வாரமளவில் குறித்த காவலரண் அகற்றப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த பகுதியை மக்களுக்கு விடுவிப்பதற்காகவே காவலரண் அகற்றப்பட்டுள்ளதாக மக்கள் நம்பியிருந்தனர். எனினும் அந்த இடத்தில் நேற்று முதல் புத்தர் சிலையொன்றை அமைக்கும் பணியை படையினர் ஆரம்பித்துள்ளனர்.
புதிய புத்தர் சிலையின் மூலம் யாழ்.கோட்டைக்கு சுற்றுலா வரும் தென்னிலங்கை மக்களை கவரமுடியும் என படையினர் சிலர் மக்களுக்குத் தெரியப்படுத்தியிருக்கின்றனர்.
இதேவேளை யாழ்.மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட இந்தப் பகுதியில் சிலை அமைப்பது தொடர்பில் சபையிடம் எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என மாநகர சபை வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.
மேலும்  யுத்தத்தின் பின்னர் யாழ்.பிரதான வீதியிலுள்ள அரச மரமொன்றின் கீழும் விகாரை ஒன்றினை அமைப்பதற்கு படையினர் முயற்சித்திருந்தனர். எனினும் பொதுமக்கள் மற்றும் மாநகர சபையின் தலையீட்டால் அது நிறுத்தப்பட்டது.

No comments:

Post a Comment