Thursday, April 5, 2012

யாழ் நன்னீர் கிணறுகளில் மலசலகூட நீர் கலக்கும் அபாயம்


யாழ் மாவட்டத்திலுள்ள நன்னீர் கிணறுகளில் மலசலகூட நீர் கலந்து மக்களுக்கு தெற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளதாக வேள்ட் விஷன் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் றொசைஸ்றோ தெரிவித்துள்ளார்.
யாழ்.சாவகச்சேரி நகர சபையின், மீசாலை பொதுநூலக அபிவிருத்தி ஆலோசனைச் சபையின் உதவியுடன் முன்பள்ளி மாணவர்களுக்கு இலைக்கஞ்சி வழங்கலும், போஷாக்குணவு பற்றிய கருத்தமர்வும் இடம்பெற்றது.
நகரபிதா இ.தேவசகாயம் பிள்ளை தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
கிணற்று நீர் வற்றும் காலங்களில் மலசலகூடக் கழிவு நீரும் கிணற்று நீர் ஊற்றுக்களுடன் கலக்கும் அபாயமும் யாழ்.மாவட்டத்தில் காணப்படுகின்றது.
நீர் பரிசோதனையில் இது ஆய்வு செய்யப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மலசல கூடத்திலிருந்து வெளியேறும் கழிவு நீரை மட்டும் வேறு தொட்டிக்குள் செலுத்தி அதனை சுத்திகரிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும்.
மழை காலங்களில் நீரைச் சேமித்து வேறு தேவைகளுக்குப் பயன்படுத்துதல் வேண்டும். சிறு குளங்களை அமைத்து மழை நீரைக் கடல் நீருடன் சேர விடாது சேமிக்க வேண்டும்.
இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த நகர சபைகள், பிரதேச சபைகள், சனசமூக நிலையங்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புக்கள் என்பன முன்வர வேண்டும் என்றார்.
இதேவேளை, வடமாகாணத்தில் போஷாக்கென்பது பெரும் பிரச்சினையான விடயமாக உள்ளது. குறிப்பாக முன்பள்ளி மாணவர்கள் மற்றும் இளம் பருவத்தினர் மத்தியில் இது அவதானிக்கப்பட்டுள்ளது.
முன்பள்ளி மாணவர்களின் போஷாக்கு ஆசிரியர்களின் கல்வி மேம்பாடு மற்றும் முன்பள்ளிகளில் அதிகமாகக் காணப்படும் வளப்பற்றாக்குறை போன்ற விடயங்கள் அவதானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான மேம்பாட்டுத் திட்டங்களை பிரதேச சபைகள், நகரசபைகள், சுகாதாரத் திணைக்களங்கள் மற்றும் கல்வித் திணைக்களங்கள் போன்றவற்றுடன் இணைந்து செயற்படுத்தவுள்ளோம்.
இத் திட்டங்களை மேம்படுத்துவற்கு பெற்றோர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வேள்ட் விஷன் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் றொசைஸ்றோ தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment