Saturday, May 19, 2012

யாழ்பாண மின்சாரசபையின் மின்தடை பற்றிய அறிவித்தல்..




ஏற்கனவே மின்தடை அறிவிக்கப்பட்டிருந்த இடங்களுக்கு மேலதிகமாக 20.05.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து மாலை 6.00 மணிவரையும் வீதி அகலிப்பு பணிகளுக்காக கைதடி மானிப்பாய் வீதியில் உயர்அழுத்த மற்றும் தாழ்அழுத்த.

 மின்விநியோக மார்க்கங்களை இடமாற்றம் செய்யவேண்டியிருப்பதால் உரும்பிராய், கோண்டாவில், மருத்துவபீடப்பிரதேசம், திருநெல்வேலிப்பிரதேசம், தட்டார்தெரு ஆகிய இடங்களிலும்  வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர்அழுத்த மற்றும் தாழ்அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்றம் செய்யவேண்டியிருப்பதால்.

 21.05.2012 திங்கட்கிழமை, 23.05.2012  புதன்கிழமை,
25.05.2012 வெள்ளிக்கிழமை மற்றும் 27.05.2012 ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் காலை 8.30 மணியிலிருந்து மாலை 6.00 மணிவரையும் கோண்டாவில் பிரதேசத்தின் மேற்குப் பகுதி, குளப்பிட்டிப் பிரதேசம், கொக்குவில் பிரதேசத்தின் ஒரு பகுதி, நாச்சிமார் கோவிலடி, புன்னாலைக்கட்டுவன், அச்சசெழு, புத்தூர், ஆவரங்கால், அச்சுவேலி, இடைக்காடு, வடமராட்சிப் பிரதேசம், சுன்னாகம், குப்பிளான், மயிலங்காடு, ஏழாலை, காங்கேசன்துறை உயர்பாதுகாப்பு வலப்பகுதி, மல்லாகம், தெல்லிப்பளை, அளவெட்டி, பன்னாலை, சிறுவிளான் ஆகிய இடங்களிலும்.

22.05.2012 செவ்வாய்க்;கிழமை, 24.05.2012  வியாழக்கிழமை மற்றும் 24.05.2012 சனிக்கிழமை ஆகிய தினங்களில் காலை 8.30 மணியிலிருந்து மாலை 6.00 மணிவரையும் கந்தரோடை, மாகியப்பிட்டி, பண்டத்தரிப்பு, இளவாலை, சங்கானை, மாதகல், வட்டுக்கோட்டை, சுழிபுரம், மூளாய், காரைநகர் பிரதேசம், தீவகப் பிரதேசம், அராலி, கரந்தன், நீர்வேலி, சிறுப்பிட்டி, கோப்பாய், இருபாலை, முடமாவடிப்பகுதி, பாற்பண்ணைப்பகுதி, திருநெல்வேலி நகரம், மருத்துவபீடப்பிரதேசம், ஆடியபாதம் வீதி கொக்குவில் சந்தி வரையான பிரதேசம், கல்வியங்காடு, நல்லூர், அரியாலை, தென்மராட்சிப் பிரதேசம் ஆகிய இடங்களிலும்.

21.05.2012 திங்கட்கிழமை காலை 8.30 மணியிலிருந்து மாலை 6.00 மணிவரையும்  இணுவில், மருதனார்மடம், உடுவில், சங்குவேலி, மானிப்பாய், கட்டுடை, தாவடி, கொக்குவில், நாச்சிமார் கோவிலடி, ஆனைக்கோட்டை, நவாலி, கோண்டாவில், கோம்பயன்மணல் பிரதேசம் ஆகிய இடங்களிலும் மின் விநியோகம் தடைப்பட்டிருக்கும்.

பாடசாலையில் திடீரென மயங்கி விழுந்த மாணவி வைத்தியசாலையில் மரணம்




பாடசாலையில் விழுந்த மாணவி ஒருவர் வைத்தியசாலயில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவமொன்று அக்கரப்பத்தனை பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.

இந்தச்சம்வம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது :

அக்கரப்பத்தனை டொரிங்டன் தமிழ் பாடசாலையில் தரம் மூன்றில் கல்விக்கற்று வந்த அயோனா தோட்டத்தைச் சேர்ந்த எட்டு வயதான சிவக்குமார் சியாளனி என்ற மாணவி கடந்த 15ஆம் திகதி வழமைப்போல பாடசாலைக்கு சென்றுள்ளார்.

பாடசாலையில் விளையாடிக் கொண்டிருந்த மாணவி திடீரென கீழே விழுந்ததாகவும் அதன் பின்பு இந்த மாணவியைப் பாடசாலையின் நிருவாகத்தினர் வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு அனுமதிக்கப்பட்ட மாணவி 16ஆம் திகதி சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து குறித்த மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்குப்பின்பு குறித்த சிறுமியின் சடலம் நேற்று 17ஆம் திகதி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த மரணம் தொடர்பாக அக்கரப்பத்தனைப் பொலிஸார் பல்வேறு தரப்பிடம் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். 

படைவீரர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலி - வாகன விபத்தில் 3 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பலி


இராணுவப் படைவீரர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், கண்டி களுகம்மான என்னும் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
வீடொன்றுக்குள் புகுந்த படைவீரர், தாய், தந்தை மற்றும் மகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்திய படைவீரருடன் உயிரிழந்த யுவதியின் சகோதரர் மோதிக் கொண்டதாகவும் இதனால் ஏற்பட்ட காயங்களுக்காக படைவீரர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வாகன விபத்தில் 3 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பலி
பன்னல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில், மூன்று பொலிஸ் உத்தியோகஸ்;தர்கள் உயிரிழந்துள்ளனர். பன்னல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த மூன்று பொலிஸ் உத்தியோகஸ்தர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மூவரும் பயணித்த குறித்த மோட்டார் சைக்கிள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ட்ரக் வாகனத்தில் மோதியதையடுத்தே இவ்விபத்து இன்று அதிகாலை நிகழ்ந்துள்ளது.

யாழ் மே தினக் கூட்டத்தில் பங்குபெறாத ஐ.தே.கவின் உறுப்பினர்கள் தொடர்பான அறிக்கை பூர்த்தி


ஒன்றிணைந்த எதிர்கட்சிகளினால் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட மே தினக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத மற்றும் பொறுப்புகளை பூர்த்தி செய்யாத உறுப்பினர்கள் தொடர்பாக தயாரிக்கப்பட்ட அறிக்கை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழுவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால், பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஒன்றிணைந்த எதிர்கட்சிகளின் மே தினத்தில் கலந்து கொள்ளாமல் இருப்பதற்காக கட்சியின் பிரதித்தலைவர் சஜித் பிரேமதாச, திலீப வெத ஆராய்ச்சி, ரோஷி சேனாநாயக்க, சுஜீவ சேனசிங்க ஆகியோர் அனுமதி பெற்றிருந்தனர்.
எனினும், மேதினத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என அறிவித்தித்திராத கரு ஜயசூரிய, ரஞ்சித் மத்துமபண்டார, தயாசிறி ஜயசேகர, புத்திக பத்திரண, அசோக அபேசிங்க மற்றும் தலத்தா அத்துகோரள ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரிடம் அறிக்கையின் படி விளக்கம் கோரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, யாழ்ப்பாண மேதின நிகழ்வில் இடம்பெற்ற சம்பவங்கள் மற்றும் அதன் சாதகத்தன்மை தொடர்பாக குறித்த அறிக்கையில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Thursday, April 5, 2012

அல்லைப்பிட்டி கிராமிய வைத்தியசாலை திறந்துவைப்பு


அல்லைப்பிட்டி கிராமிய வைத்தியசாலை நேற்று சனிக்கிழமை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இத்திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்திரி அலென்ரின் இவ்வைத்தியசாலையைத் திறந்து வைத்தார்.
இவ்விழாவில் யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், வேலணை பிரதேச சபை தவிசாளர் சி.சிவராசா, வேலணை பிரதேச செயலர் மஞ்சுளாதேவி, மருத்துவ உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலதரப்பட்டோர் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாணத்தில் எதிர்காலத்தில் நீருக்கு தட்டுப்பாடு ஏற்படும்- கிறிஸ்ரோபர் கோகே


யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீரைப் பாதுகாப்பதற்குரிய சிறந்த திட்டங்கள் எதுவும் இல்லாதிருப்பது எதிர்காலத்தில் நீர்வளம் அழிக்கப்பட்டு நீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலையை உருவாக்கிவிடும் என்று அமெரிக்க தூதரக அலுவலரும் சூழலியலாளருமான கிறிஸ்ரோபர் கோகே தெரிவித்துள்ளார்.
யாழ். சமூக செயற்பாட்டு மையத்திலுள்ள அமெரிக்க தகவல் கூடத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க உள்ளூர் அளவில் நடவடிக்கை எடுக்க ‘உலகத்தை அணிதிரட்டுவோம்’ என்ற தொனிப்பொருளில் கலந்தாய்வரங்கு ஒன்று நேற்று புதன்கிழமை நடைபெற்றுள்ளது
இக்கலந்தாய்வரங்கின்போது பொது விரிவுரையை கிறிஸ்ரோபர் கோகே ஆற்றிய போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
‘யாழ்ப்பாணத்தில் சிறந்த அழகான கடற்கரைகள் இருக்கின்றன. இந்த கடற்கரைகளில் கழிவுப் பொருட்களை அகற்றி பாதுகாக்க வேண்டும். யாழ்ப்பாணத்தின் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதன் மூலம் நீண்ட காலத்திற்கு எமக்கு ஏற்படக் கூடிய பொருளாதாரப் பிரச்சனைகளை தடுக்க முடியும்
இலங்கையில் காடுகள் அழித்தல் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இந்தப் பிரச்சனை கட்டுப்படுத்த முடியாது தொடர்ந்து நீடித்து வருகிறது. இலங்கையின் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதன் ஊடாக உல்லாசத் துறையை மேம்படுத்த முடியும்
எமது சூழலைப் பாதுகாப்பாக வைத்திருந்தால் எதிர்காலத்தில் எமக்கு இயற்கையால் எந்தப் பிரச்சனையும் வராது வரமுடியாது’ என்றார்.

சுன்னாகம் பஸ் நிலைய புனரமைப்பிற்காக 10 மில்லியன்


சுன்னாகம் பஸ் நிலையம் புதிய கட்டடித்தை நிர்மாணிப்பதற்கு அரசிடம் இருந்து சுமார் பத்து மில்லியன் ரூபா நிதி கிடைக்கப்பெற்றுள்ளதாக வலி தெற்கு உடுவில் பிரதேச சபைத் தலைவர் திருமதி சுலோசனா மருகநேசன் தெரிவித்தார்.
சுன்னாகம் நகரப் பகுதயில் அமைந்துள்ள பஸ் நிலையம் கடந்த பல வருடங்களாக பல குறைபாடுகளின் மத்தியில் இயங்கி வருகின்றது.
இந்நிலையில் பஸ் நிலையத்தை திருத்தி புதிய கட்டிடம் அமைப்பதற்க்கு நிதி கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் இந்நிதியின் மூலம் விரைவில் இக்கட்டிடப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் பிரதேச சபையின் செயலாளர் தெரிவித்தார்.

யாழில் எதிர்க்கட்சிகளின் மே தின நிகழ்வு கூட்டமைப்பின் தலைமையில்

news
யாழ்ப்பாணத்தில் எதிர்க்கட்சிகளின் மே தினம், தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் நடைபெறவுள்ளதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மேதினத்தையொட்டி, எதிர்க்கட்சிகளினால் யாழ்ப்பாணத்தில் பொதுக்கூட்டமும், பேரணியும் நடத்துவதென முதன்மை எதிர்க்கட்சியான ஐ.தே.க வினால் முடிவெடுக்கப்பட்டிருந்தது. அதன்படி இந்த மே தினத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் இணைந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. அத்துடன் கூட்டமைப்பை இணைத்துக் கொள்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்நிலையில் நேற்றையநாள், கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில், மேதினம் குறித்து பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இப்பேச்சுவார்த்தையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கலந்து கொண்டது. இதில், மேதினக் கூட்டமானது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் நடைபெறவும், அதற்கான ஏற்பாடுகள் யாவையும் கூட்டமைப்பே மேற்கொள்ளவும் முடிவு எட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பொதுக்கூட்டத்திற்காக போடப்படும் மேடையில் தனியொரு கட்சியை பிரதிபலிக்காது, பங்குகொள்ளும் அனைத்துக் கட்சிகளையும் பிரதிபலிக்கும் வண்ணம் கொடிகள் நாட்டப்படுவதாகவும், பேரணியிலும் அதேபோன்று நடைமுறைகளைக் கடைபிடிப்பதாகவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் எமது ஒன்லைன் உதயனுக்கு தெரிவிக்கையில்,
"யாழ்ப்பாணத்தில் மேதினக் கூட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமயில் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. இம்முடிவு கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர்களின் முடிவேயாகும். அதன்படி மேதினத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கூட்டமைப்பே மேற்கொள்ளும்" என்றார்.

அத்துடன், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்தவும், அடிப்படைச் சம்பளம் 12500 ரூபாவாக வழங்கவேண்டும் எனவும், மீள்குடியேற்றம் குறிப்பிட்ட கால எல்லைக்குள் நிறைவுறுத்த வேண்டும் எனவும் அரசிற்கு கோரிக்கை விடுத்து கோஷம் எழுப்புவதெனவும் முடிவு செய்யப்பட்டது.

அதேவேளை, யாழ்ப்பாண நகரில் அல்லாது பிறிதொரு இடத்தில் மேதின நிகழ்வை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ். மாநகராட்சி தற்போது ஆளும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளதால், அனுமதி பெறுவதில் தடங்கல்கள் ஏற்படும் என்பதால், தமிழ்த் தேசியக் கூட்டரமப்பின் வசமுள்ள இடத்தில் நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

யாழ். குருநகர் பகுதியில் புதிதாக புத்தர் சிலையொன்றை அமைக்கும் பணியில் படையினர்


யாழ்.கடற்கரை வீதி, குருநகர் பகுதியில் புதிதாக புத்தர் சிலையொன்றை அமைக்கும் பணியில் படையினர் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக பிரதேச மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
குறித்த பகுதியில் கடந்த காலங்களில் பாரியளவு கடற்படை காவலரண் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த வாரமளவில் குறித்த காவலரண் அகற்றப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த பகுதியை மக்களுக்கு விடுவிப்பதற்காகவே காவலரண் அகற்றப்பட்டுள்ளதாக மக்கள் நம்பியிருந்தனர். எனினும் அந்த இடத்தில் நேற்று முதல் புத்தர் சிலையொன்றை அமைக்கும் பணியை படையினர் ஆரம்பித்துள்ளனர்.
புதிய புத்தர் சிலையின் மூலம் யாழ்.கோட்டைக்கு சுற்றுலா வரும் தென்னிலங்கை மக்களை கவரமுடியும் என படையினர் சிலர் மக்களுக்குத் தெரியப்படுத்தியிருக்கின்றனர்.
இதேவேளை யாழ்.மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட இந்தப் பகுதியில் சிலை அமைப்பது தொடர்பில் சபையிடம் எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என மாநகர சபை வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.
மேலும்  யுத்தத்தின் பின்னர் யாழ்.பிரதான வீதியிலுள்ள அரச மரமொன்றின் கீழும் விகாரை ஒன்றினை அமைப்பதற்கு படையினர் முயற்சித்திருந்தனர். எனினும் பொதுமக்கள் மற்றும் மாநகர சபையின் தலையீட்டால் அது நிறுத்தப்பட்டது.

மண்டைத்தீவுக்கு மின்சாரம் வழங்க முடியாது! மின்சார சபை அத்தியட்சகர் தெரிவிப்பு


வேலணை பிரதேச சபையின் கீழ் உள்ள மண்டைத்தீவு பகுதிக்கு மின் இணைப்பு வழங்க முடியாதென வேலணைப் பகுதிக்கு பொறுப்பான மின்சார சபை அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் நடைபெற்ற வேலணை பிரதேச சபையின் ஒருங்கிணைப்பு கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த பேராட்டக்காலங்களில் மண்டைத்தீவு அதிகமாகப் பாதிக்கப்பட்டதாகவும் தமக்கு மின்சாரத்தை விரைவாக வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொது அமைப்பினர் நேற்றைய கூட்டத்தில் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு பதிலளித்த அத்தியட்சகர், தற்போது மின்சார சபை மிகவும் பாரிய நிதி நெருக்கடிக்குள்ளாக தள்ளப்பட்டுள்ளதாகவும் யாராவது முன்வந்து நிதி பங்களிப்பை வழங்கினால் மின்சாரம் வழங்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.
இதனால் கொதிப்படைந்த பொது அமைப்பினர் ஏற்கனவே நாட்டப்பட்ட 9 மின்கம்பங்களையும் பிடுங்கிக்கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொண்டனர்.
இதேவேளை, மண்டைத்தீவுக்கு விரைவில் மின்சாரம் வழங்கப்படும் என அரசாங்கம் தொடர்ச்சியாக பிரசாரம் செய்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

யாழ் நன்னீர் கிணறுகளில் மலசலகூட நீர் கலக்கும் அபாயம்


யாழ் மாவட்டத்திலுள்ள நன்னீர் கிணறுகளில் மலசலகூட நீர் கலந்து மக்களுக்கு தெற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளதாக வேள்ட் விஷன் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் றொசைஸ்றோ தெரிவித்துள்ளார்.
யாழ்.சாவகச்சேரி நகர சபையின், மீசாலை பொதுநூலக அபிவிருத்தி ஆலோசனைச் சபையின் உதவியுடன் முன்பள்ளி மாணவர்களுக்கு இலைக்கஞ்சி வழங்கலும், போஷாக்குணவு பற்றிய கருத்தமர்வும் இடம்பெற்றது.
நகரபிதா இ.தேவசகாயம் பிள்ளை தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
கிணற்று நீர் வற்றும் காலங்களில் மலசலகூடக் கழிவு நீரும் கிணற்று நீர் ஊற்றுக்களுடன் கலக்கும் அபாயமும் யாழ்.மாவட்டத்தில் காணப்படுகின்றது.
நீர் பரிசோதனையில் இது ஆய்வு செய்யப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மலசல கூடத்திலிருந்து வெளியேறும் கழிவு நீரை மட்டும் வேறு தொட்டிக்குள் செலுத்தி அதனை சுத்திகரிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும்.
மழை காலங்களில் நீரைச் சேமித்து வேறு தேவைகளுக்குப் பயன்படுத்துதல் வேண்டும். சிறு குளங்களை அமைத்து மழை நீரைக் கடல் நீருடன் சேர விடாது சேமிக்க வேண்டும்.
இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த நகர சபைகள், பிரதேச சபைகள், சனசமூக நிலையங்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புக்கள் என்பன முன்வர வேண்டும் என்றார்.
இதேவேளை, வடமாகாணத்தில் போஷாக்கென்பது பெரும் பிரச்சினையான விடயமாக உள்ளது. குறிப்பாக முன்பள்ளி மாணவர்கள் மற்றும் இளம் பருவத்தினர் மத்தியில் இது அவதானிக்கப்பட்டுள்ளது.
முன்பள்ளி மாணவர்களின் போஷாக்கு ஆசிரியர்களின் கல்வி மேம்பாடு மற்றும் முன்பள்ளிகளில் அதிகமாகக் காணப்படும் வளப்பற்றாக்குறை போன்ற விடயங்கள் அவதானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான மேம்பாட்டுத் திட்டங்களை பிரதேச சபைகள், நகரசபைகள், சுகாதாரத் திணைக்களங்கள் மற்றும் கல்வித் திணைக்களங்கள் போன்றவற்றுடன் இணைந்து செயற்படுத்தவுள்ளோம்.
இத் திட்டங்களை மேம்படுத்துவற்கு பெற்றோர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வேள்ட் விஷன் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் றொசைஸ்றோ தெரிவித்துள்ளார்.

Saturday, March 24, 2012

தடையைத் தளர்த்தியது அமெ; பாதுகாப்புத் தளபாடங்களை இலங்கை இறக்குமதி செய்யலாம்

       news                      இலங்கைக்குப் பாதுகாப்புத் தளபாடங்களை ஏற்றுமதி செய்வதற்கான தடையைத் தளர்த்தி, வான் வழி மற்றும் கடல் வழி கண்காணிப்புக்கான கருவிகளின் ஏற்றுமதியை அனுமதித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்தது.                 
        சிறிய ரக வானூர்திகள், கமெராக்கள் மற்றும் அவற்றுக்கான பாகங்கள் போன்றவற்றுக்கு தனித்தனியாக தடையிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்களை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் நேற்று முன்தினம் வியாழக்கிழமையிலிருந்து நடைமுறைப்படுத்துவதாக அறிவித்துள்ளது.           இந்தத் தடை தளர்த்தப்பட்டதற்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில்  அமெரிக்காவினால் இலங்கை தொடர்பாகக் கொண்டுவரப்பட்ட பிரேரணை நிறைவேற்றப்பட்டமைக்கும் இடையில் எந்தவித தொடர்பும் இல்லை என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்தது.
       இந்த ஏற்றுமதி தடை 1980ஆம் ஆண்டு உள்நாட்டு யுத்தம் தொடங்கிய காலத்திலிருந்து நடைமுறையில் இருந்து வந்துள்ளது.

Wednesday, March 14, 2012

புதிய நடைமுறைகளை கண்டித்து யாழ். பல்கலையில் வகுப்புப் புறக்கணிப்பு

news
யாழ். பல்கலைக்கழகத்தில் புகுத்தப்பட்டுள்ள புதிய நடைமுறைகளை கண்டித்து இன்று காலை கலைப்பீட மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட 2ம் வருட மாணவர்களுக்கான சிறப்புக்கலை தெரிவில், இவ்வாண்டு புதிதாக புகுத்தப்பட்டுள்ள சில நடைமுறைகளைக் கண்டித்தே இந்த வகுப்புப் புறக்கணிப்பை மேற்கொண்டனர்.

கடந்தவருடம் மட்டுப்பாடுகள் எதுவுமின்றி மாணவர்கள் சிறப்புக்கலை பயில்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இவ்வாண்டு மாணவர்கள் அடைந்திருக்கவேண்டிய GPA அளவு அதிகரிக்கப்பட்டமையும் எவ்வளவு மாணவர் தகுதி பெற்றிருப்பினும், 40 மாணவர்களே சிறப்புக்கலை பயில அனுமதிக்கப்படுவர் எனப் புதிய விதிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் உரிய கவனம் எடுக்கக் கோரி கடந்த வாரம் துணைவேந்தருக்கு கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டபோதும் இதுவரை எதுவிதமான பதிலும் வழங்கப்படவில்லை. என மாணவர்களினால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

எனவே இப் பிரச்சினையில் தலையிட்டு நிரந்தரமான முடிவை உடனடியாக பல்கலை நிர்வாகம் எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்ககப்பட்டுள்ளது.

தெல்லிப்பளை பகுதியில் பாழடைந்த கிணற்றிலிருந்து வெடி குண்டுகள் மீட்பு

news
 வலிகாமம் வடக்கு தெல்லிப்பளை பகுதியில் பாழடைந்த  கிணற்றிலிருந்து இருந்து பெருமளவிலான கைக்குண்டுகள்  மீட்கப்பட்டுள்ளது.
 
தெல்லிப்பளை யூனியன் கல்லூரிக்கு பின்னால் உள்ள,பொதுமக்களுக்கு சொந்தமான காணியொன்றின் கிணற்றினை  துப்பரவு செய்யும் பணியின் போதே இக் கைக்குண்டுகள் மீட்க்கப்பட்டிருந்தன.கடந்தகால யுத்ததத்தின் பின் தற்போதே இப்பகுதியில் மீளக்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளது.
 
பொது மக்களின் பாவனைக்காக விடப்பட்டிருக்கும் குறித்த கிணறு சந்தேகத்திற்கிடமான வகையினில் காணப்பட் டதையடுத்து பொது மக்களினால் துப்பரவு செய்யும் போதே பத்திற்கும் அதிகமான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
 
இன்னும் மேலதிகமான வெடிபொருட்கள் கிணற்றினுள் காணப்படலாமென மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள் ளது. 
 
மேலதிக அகழ்வு பணி தற்போது மிகவும் தாமதமாகவே நடந்து வருகின்றதாகவும்,இராணுவத்தினரின் மேற்பார்வையி னில் தற்போது கண்ணி வெடி அகற்றல் பணிகள் ஆரம்பமாகியுள்ளதெனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.  அண்மையில் மக்கள் மீள்குடியமர அனுமதிக்கப்பட்ட இப்பகுதி கிணறொன்றினுள் மனித எலும்பு கூட்டு தொகுதிகள் 
கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. இதையடுத்தே மூழ்கடிக்கப்பட்ட கிணறுகளை துப்புரவு செய்யும் பணியினில் மக்கள் ஈடுபாடு காட்டி வருகின்றனர்.
 
குறித்த பகுதிகளில் கண்ணி வெடி அகற்றல் பணிகள் பூரணப்படுத்தப்பட்டு விட்டதாக பாதுகாப்பு தரப்பு கூறி வந்ததுடன்  மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனின் செலவில் கொக்குவிலில் தொழிற்பயிற்சி நிலையம் திறந்து வைப்பு

news
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் அனுசரணையில் நிறுவப்பட்ட தொழிற்பயிற்சி நிலையம் கொக்குவிலில் இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

வறுமைக்கோட்டிற்குட்பட்டோருக்கான வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினரின் அனுசரணையில் நிறுவப்பட்ட இத் தொழிற்பயிற்சி நிலையத்தை இன்று காலை நாடாளுமன்ற உறுப்பினரின் பாரியார் திருமதி சரவணபவன் மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார்.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனும் சிறப்பு விருந்தினராக நல்லூர் பிரதேச சபைத் தலைவர் நந்தகுமாரும் கலந்துகொண்டனர். பயிற்சித் திட்ட இணைப்பாளர்களான செ.செல்வராசா, க.ஜோதி முருகேசு மற்றும் அர்ச்சுனா சிறுவர் இதழின் ஆசிரியர் சி.மகேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இத் தொழிற் பயிற்சி நிலையத்தில் முதற்கட்டமாக 35 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தையல் பயிற்சி, ஆடை தயாரித்தல், கணணிக் கற்கை என்பன வழங்கப்படவுள்ளது.

அத்துடன், இத் துறைகளில் டிப்ளோமா முதல் பட்டப்படிப்பு வரை செல்வதற்கான வழிகாட்டல் பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன.

இத் தொழிற்பயிற்சி நலையத்திற்கான தையல் இயந்திரங்கள், கணணி, மற்றும் தளபாடங்கள் என்பன நாடாளுமன்ற உறுப்பினரினால் வழங்கப்பட்டது. அத்துடன் இத் தொழிற்பயிற்சி நிலையத்தில் கற்பதற்கு மாணவர்களிடம் கட்டணங்கள் எதுவும் அறவிடப்பமாட்டாது. என்பது குறிப்பிடத்தக்கது

அரசுக்கு ஆசி வேண்டி மணியோசை புறக்கணித்தனர் யாழ்.மக்கள்; ஒலியெழுப்புமாறு வன்னியில் நிர்ப்பந்தம்

news
 நாட்டுக்கு ஆசிர்வாதம் வேண்டி ஆலய மணிகளை ஒலிக்கச் செய்யுமாறு அரசு விடுத்த வேண்டுகோளை யாழ். மக்கள் புறக்கணித்துள்ளனர். எனினும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் போன்ற மாவட்டங்களில் படையினரின் வற்புறுத்தலின் பேரில் விசேட பூசைகளும், மணி ஓசை எழுப்பும் நிகழ்வும் நடைபெற்றன.
 
இது குறித்து மேலும் தெரியவருவதாவது:
நாட்டுக்கு ஆசிர்வாதம் வேண்டி நேற்று சகல ஆலயங்களிலும் மணி ஒலிக்க வேண்டும் என்று பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு பணித்திருந்தது.  ஆயினும் அரசின் இந்தக் கட்டளையைப் புறக்கணிக்குமாறு கூட்டமைப்பு மக்களை கோரியிருந்தது. மக்களினதும், மாவீரர்களினதும் நினைவாக மணி ஒலி எழுப்பத் தடை போட்ட அரசுக்கு ஆசீர்வாதம் வேண்டி மணி ஒலி எழுப்புமாறு கேட்பது எந்த விதத்தில் நியாயம் என்று கூட்டமைப்பு கேட்டிருந்தது. 
 
இந்த நிலையில் தமிழ் மக்கள் அரசின் கோரிக்கையை உதாசீனம் செய்து ஆலயங்களில் மணி ஒலியை எழுப்பவில்லை.  குறிப்பாக யாழ்.மாவட்டத்தில் எந்தவொரு ஆலயத்திலும் குறித்த நேரத்தில் மணி ஓசை எழுப்பப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. எனினும் படைத்தரப்பின் நிர்ப்பந்தத்தின் பேரில் யாழ். மாவட்டம் தவிர்ந்த வடக்கின் ஏனைய பகுதிகளில் பின்னர் மணி ஓசை எழுப்பப்பட்டது. அத்துடன் விசேட பூஜைகளும் வற்புறுத்தலின் பேரில் இடம்பெற்றன. 
 
கிளிநொச்சி, துணுக்காய், நெடுங்கேணி போன்ற பகுதிகளில் இத்தகைய பலவந்தப்படுத்தப்பட்டு மணி ஒசை எழுப்பப்பட்டதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.வவுனியாவில் அரச அதிபர் திருமதி சாள்ஸ் தலைமையில் பண்டாரிக்குளம் முத்துமாரி அம்மன் ஆலயத்தில் விசேட பூசைகளும் மணி ஓசை எழுப்பும் நிகழ்வும் இடம்பெற்றது. 

ஜெனிவாவில் இந்தியாவின் நிலைப்பாடு; பிரதமர் மன்மோகன் இன்று அறிவிப்பார்

news
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்துள்ள பிரேரணை தொடர்பில் இந்திய அரசின் நிலைப்பாட்டைப் பிரதமர் மன்மோகன்சிங் டில்லி நாடாளுமன்றத்தில் இன்று தெரிவிப்பார் என்று இந்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் நேற்றுத் தெரிவித்துள்ளார்.
 
அமெரிக்கா கொண்டுவந்துள்ள பிரேரணை விவகாரம் நேற்று இரண்டாவது நாளாகவும் இந்திய நாடாளுமன்றின் இரு அவைகளிலும் பெரும் புயலைக் கிளப்பியது.நேற்றுக்காலை அவை கூடியதும், கேள்வி நேரத்தை இரத்துச் செய்துவிட்டு இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பாக அமெரிக்கா கொண்டு வந்த பிரேரணை தொடர்பில் இந்திய அரசின் நிலைப்பாடு என்னவென்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், இலங்கை அரசின் போர்க்குற்றம் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் தி.மு.க., அ.தி.மு.க, பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் கட்சியைச் சேர்ந்த அனைத்து எம்.பிக்களும் ஒருமித்த குரலில் முழக்கமிட்டனர்.
 
இதனைத் தொடர்ந்து பெரும் அமளி ஏற்பட்டதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இதனால் நாடாளுமன்ற இரு அவைகளும் (ராஜ்யசபா, லோக்சபா) மதியம் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டன.
 
பிரணாப் முகர்ஜி பேச்சு
ஒரு குறிப்பிட்ட நாட்டுக்கு எதிராக, எவ்வித தீர்மானம் கொண்டுவரப்பட்டாலும், அதனை நாம்ஆதரிக்கக் கூடாது, என இந்திய மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்றுத் தெரிவித்ததையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கூச்சல்,குழப்பம் ஏற்பட்டது. சபையின் அமர்வும் நண்பகல் வரை இடைநிறுத்தப்பட்டது.இலங்கை அரசுக்கு எதிராக, ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று இந்திய நாடாளுமன்றத்தில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று வலியுறுத்தினர். இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று திமுக, அதிமுக, இடதுசாரி உறுப்பினர்கள் ஒருமித்த குரல் எழுப்பினர்.
 
மக்களவையில் கடும் அமளிக்கிடையே பேசிய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, திமுக தலைவர்கருணாநிதிக்கும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும் பிரதமர் கடிதம் எழுதியுள்ளார். எந்த ஒரு நாட்டுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டாலும், அதை நாம் ஆதரிக்கக் கூடாது.
 
எனினும், மனித உரிமைக் குழுவுடன் ஆலோசித்தப் பிறகு, இதுகுறித்து நாம் விவாதித்து முடிவு எடுக்கலாம், என்றார்.இலங்கை அரசுக்கு எதிராக ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானத்தின் மீதான இந்தியாவின் நிலைப்பாடு குறித்து பிரதமர் மன்மோகன் சிங் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இந்த விவகாரத்தில் பிரதமர் தனது மௌனத்தைக் களைய வேண்டும் என்று அவர்கள் குரல் எழுப்பினர்.
 
மாநிலங்களவை  நேற்றுக் காலை ஆரம்பமாகியவுனேயே இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானம் தொடர்பான பிரச்சினையை திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்தனர். இலங்கை அரசுக்கு எதிராக இந்தியா வாக்களிக்கும் என்று உறுதிமொழியை அரசு அளித்திட வேண்டும். தயவு செய்து உங்கள் மௌனத்தைக் களையுங்கள் என்று திமுக உறுப்பினர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை கேட்டுக்கொண்டனர்.
 
மௌனம் காப்பது சரியல்ல
அப்போது பேசிய இடதுசாரிகளின் மூத்தத் தலைவர் டி.ராஜா, இலங்கையில் நடந்த அனைத்து விட்யங்களும் இந்தியாவுக்குத் தெரியும். இந்த விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு என்ன என்பதை இப்போதே தெளிவுபடுத்த வேண்டும், என்று கேட்டார். இந்த விவகாரத்தில் இரண்டு முறை தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியும், அதற்கு பதிலளிக்காமல் மன்மோகன் மௌனம் காத்து வருவதைக் குறிப்பிட்ட அதிமுகவின் மைத்ரேயன், இனியும் மௌனம் காப்பது சரியல்ல. இந்தியா தனது நிலைப்பாட்டைச் சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
 
எனினும், தமிழக உறுப்பினர்களின் கேள்விகளையும் கருத்துகளையும் நிதானமாகக்கேட்டுக்கொண்டிருந்த பிரதமர் மன்மோகன் சிங், அதுபற்றி பதில் எதுவும் அளிக்காமல் அமரிந்திருந்தார்.இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று திமுக, அதிமுக,இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆவேசமாக தங்கள் கருத்துகளை முன்வைத்துக் கொண்டிருந்தபோது, தமிழக காங்கிரஸ் தலைவரும், நாடாளுமற்ற உறுப்பினருமான ஞானதேசிகன் எழுந்து விளக்கம் ஒன்றை தந்தார்.
 
ஞானதேசிகன் விளக்கம்
நானும் ஒரு தமிழன். உங்களுக்கு இருக்கும் அதே உணர்வு எனக்கும் உண்டு. இந்தப் பிரச்னையை உணர்வுப்பூர்மாக மட்டுமே பார்க்க முடியாது. இது இரு நாடுகளின் உறவு சம்மந்தமானது. இலங்கையில் இப்போது வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழர்களுக்கு இந்தியா தான் பொருளாதார ரீதியிலும் உதவிகள் செய்து வருகிறது. இதை எவராலும் மறுக்க முடியாது. இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்காவோ, ரஷ்யாவோ தீர்மானம் கொண்டுவரலாம். அவர்கள் ஒன்றும் தமிழர்களுக்காக உதவிகளைச் செய்வதில்லை. நாம் தான் செய்துகொண்டிருக்கிறோம். இந்தியா எடுக்கும் முடிவால், இலங்கையுடன் தூதரக உறவில் பாதிப்பு ஏற்பட்டுவிட்டால், அங்கிருக்கும் என் சகோதரர்களுக்கு உதவுவது யார்? எந்த நாடு முன்வரும். இதையெல்லாம் கருத்தில்கொள்ள வேண்டும். இந்த முடிவை பிரதமர்தான் ஆலோசித்து எடுக்க வேண்டும், என்றார் ஞானதேசிகன்.
 
கூச்சலிட்ட எம்.பிக்கள்
ஞானதேசிகன் இப்படிப் பேசிக்கொண்டிருந்தபோது, அதிமுக, திமுக, இடதுசாரி என தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கடும் கோபத்துடன் அவரைச் சாடினர். இதனால், அவையில் கடும் அமளி நிலவியது. இதைத் தொடர்ந்து, ஞானதேசிகன் தனது பேச்சை பாதியிலேயே முடித்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டார்.பின்னர் விளக்கம் அளித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பவன் குமார் பன்சால், 'அது என்ன தீர்மானம் என்பது தெரியாது. அதுபற்றி, வெளியுறவுத் துறை அமைச்சகத்துடன் பேசிவிட்டு, ஓர் அறிக்கை வெளியிடப்படும், என்றார். இதையடுத்து, தமிழக நாடாளுமற்ற உறுப்பினர்கள் தொடர்ந்து இப்பிரச்னையை எழுப்ப, கடும் அமளி காரணமாக, அவையை பிற்பகல் வரை ஒத்திவைப்பதாக, மாநிலங்களவைத் தலைவர் அன்சாரி அறிவித்தார்.
 
பின்னர் அவை ஆரம்பமானபோது தமிழகக் கட்சிகளின் கேள்விக்குப் பதிலளித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சால், இலங்கைக்கு எதிரான பிரேரணை குறித்து பிரதமர் மன்மோகன் சிங் இன்ற நாடாளுமன்றத்தில் பதில் அளிப்பார் என்று கூறினார்.
 
இதேவேளை, இலங்கைக்கு ஆதரவு அளிக்கக் கூடாது என்ற ஒருமித்த கருத்து தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் கருத்தை முற்றிலுமாகப் புறக்கணிக்க முடியாத நிலை மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன், ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான பிரேரணை தொடர்பாக முடிவு எடுக்கும் விடயத்தில் இந்திய மத்திய அரசு திக்குமுக்காடுகிறது. 
 
நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பலத்த அடி வாங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் கருத்தைப் புறக்கணிப்பதன் விளைவுகள் குறித்து மன்மோகன்சிங் அரசு தீவிரமாக ஆலோசித்தே முடிவுகளை எடுக்கும் என்று கருதப்படுகிறது.இதனால் ஜெனிவா பிரேரணை விடயத்தில் இந்தியா எடுக்கும் முடிவு இலங்கைக்கு அதிர்ச்சியானதொன்றாக அமைவதற்கு வாய்ப்புகள் உள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது. 

தருஸ்மனும் ஜெனிவாக் களத்தில்!; பிரேரணையை நிறைவேற்ற ஆசிய நாடுகளுடன் முக்கிய பேச்சு

news
 ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு எதிரான அமெரிக் காவின் பிரேரணைக்கு ஆதரவலைகளைத் திரட்டி, அதற்கு மேலும் வலுச் சேர்ப்பதற்கு ஜெனிவா இராஜதந்திரக் களத்தில் அதிரடியாகக் குதித்து சூறாவளிப் பிரசாரத்தை முன்னெடுத்துள்ள ஐ.நா. நிபுணர்கள் குழுவின் தலை வர் தருஸ்மன் முதற்கட்டமாக ஆசிய நாடுகளுடன் முக்கிய பேச்சுகளில் ஈடுபட்டு வருகின்றார் என நம்பகரமாகத் தெரியவருகின்றது.
 
மார்சுகி தருஸ்மனின் இந்த அதிரடியான நடவடிக்கையால் இலங்கைக்கு ஏற்கனவே ஆதரவைத் தெரிவித்துள்ள ஆசிய நாடுகள், தமது முடிவை மீள்பரிசீலனை செய்யக்கூடிய நிலை ஏற்படலாம் என இராஜதந்திர மட்டத்திலான தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை விவகாரம் தொடர்பிலான பிரேரணை எதிர்வரும் 22ஆம் அல்லது 23ஆம் திகதிகளில் வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது. இந்த நிலையில், தருஸ்மன் முன்னெடுத்துள்ள இந்த இராஜதந்திர நடவடிக்கையானது ஜெனிவாவிலுள்ள இலங்கை இராஜதந்திரிகளை ஆத்திரமடையச் செய்துள்ளது என்றும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
ஜெனிவா விரைந்த கையோடு பிலிப்பைன்ஸ், மலேசியா, தாய்லாந்து ஆகிய ஆசிய நாடுகளின் முக்கியஸ்தர் களுடன் பேச்சுகளை முன்னெடுத்த தருஸ்மன், இலங்கைக்கு எதிரான பிரேரணை, இலங்கை இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற சம்பவங்கள் உட்பட முக்கியமான சில விடயங்கள் தொடர்பில் கலந்துரை யாடியுள்ளார்.
 
அத்துடன், இலங்கைக்கு எதிரான பிரேரணையை ஆதரிக்குமாறு அந்நாடுகளின் பிரதிநிதிகளிடம் கோரியுள்ள தருஸ்மன், அதற்கான காரணங்களையும் உரிய முறையில் தெளிவுபடுத்தியுள்ளார் என அறிய முடியகின்றது.
 
இந்த நாடுகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பையடுத்து மனித உரிமைகள் சபையில் அங்கம் வகிக்கும் ஏனைய நாட்டு பிரமுகர்களுடன் பேச்சுகளை ஆரம்பித்துள்ளார் என ஜெனிவாவிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்ற அனைத்துவிதமான சம்பவங்களின் உண்மைத்தன்மை, ஐ.நா. அறிக்கைக்கும், இலங்கை அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைக்குமிடையிலான வேறுபாடு, நம்பகத்தன்மை உட்பட முக்கியமான சில விடயங்களை எடுத்துக் கூறி அமெரிக்காவின் பிரேரணைக்கு அவர் ஆதரவைத் திரட்டி வருகின்றார் எனக் கூறப்படுகின்றது.
 
அதேவேளை, ஐ.நா.  மனித உரிமைகள் பேரவையில் கடந்த புதன்கிழமை அமெரிக்கா சமர்ப்பித்த அறிக்கை முழுமையானதொன்றல்ல எனச் சுட்டிக்கட்டிய தருஸ்மன் குழுவினர், இலங்கையில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணையை வலியுறுத்த வேண்டும் எனக் கோரி கடிதம் எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றவை எனக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆய்வுசெய்து தமக்கு ஆலோசனை வழங்குவதற்கு ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ  மூன், தருஸ்மன் தலைமையிலான மூவரடங்கிய நிபுணர் குழுவொன்றை நியமித்து அறிக்கை பெற்றமை தெரிந்ததே

Saturday, March 10, 2012

நுணாவிலில் 3 படையினர் சூடு வாங்கிச் சாவு; அதிகாலைவேளை சம்பவம்; மூன்றாம் தரப்பு காரணமல்ல என்கிறது படைத்தரப்பு

news
 சாவகச்சேரி நுணாவில் மேற்குப் பகுதியில் நேற்று அதிகாலை துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மூன்று படையினரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
 
நுணாவில் மேற்கு கண்ணகை ஆலயம் மற்றும் முருகமூர்த்தி ஆலயம் ஆகிய இடங்களில் இருந்தே இந்த மூன்று சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. சிலாபம் தலாவத்தவைச் சேர்ந்த எம்.எஸ்.சி.பெர்னாண்டோ (வயது29), உசாப்பிட்டிய, தங்காலையைச் சேர்ந்த கே.ஐ.டீ.ஹப்புக்ஹொட்டுவா (வயது20), தியகண்ணவ, ஹல்ஹெற்றிபெலவைச் சேர்ந்த ஆர்.எம்.ஆர்.ரட்ணநாயக்க (வயது24) ஆகியோரது சடலங்களே சூட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டன.
 
கைதடிப் பாலத்திலிருந்து ரோந்து சென்ற சிப்பாய்களின் சடலங்களே இவை எனத் தெரிவிக்கப்பட்டன. முருகன் கோயிலடியில் இரண்டு சடலங்களும், அதிலிருந்து 200 மீற்றருக்கு அப்பால் உள்ள கண்ணகை அம்மன் கோயிலுக்கு அருகில் மற்றொரு சடலமும் காணப்பட்டன. லான்ஸ் கோப்ரல் ஆர்.எம்.ஆர்.ரட்ணநாயக்காவின் சடலம் அம்மன் கோயிலடியிலும், எம்.ஐ.டி.ஹப்புக்ஹொட்டுவ, எம்.எஸ்.ரி.பெர்னாண்டோ ஆகியோரின் சடலங்கள் முருகன் கோயிலடியிலும் காணப்பட்டன.
 
இந்தச் சம்பவம் தொடர்பாகச் சாவகச்சேரி பொலிஸார், சாவகச்சேரி நீதிமன்ற பதில் நீதிவான் சு.கந்தசாமி முன்னிலையில் அறிக்கை தாக்கல் செய்தனர். சம்பவ இடத்துக்குச் சென்ற பதில் நீதிவான் சடலங்களைப் பார்வையிட்ட பின்னர் யாழ். போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரிமூலம் உடற்கூற்றுப் பரிசோதனை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார். முருகன் ஆலயத்துக்கு அருகில் கடமையில் ஈடுபட்டிருந்த சிப்பாய் ஒருவர் சக படைச் சிப்பாய்கள் இருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார் என இராணுவப் பேச்சாளர் நிஹால் ஹப்பு ஆராய்ச்சி தெரிவித்தார்.
 
உயிரிழந்த படையினர் ஒருவரின் சடலத்துக்கு மரண விசாரணை, உடற்கூற்றுப் பரிசோதனை என்பன நேற்று இடம்பெற்றன. ஏனைய இரு சடலங்களினதும் மரண விசாரணை, உடற்கூற்றுப் பரிசோதனை என்பன இன்று இடம்பெறும் எனக் கூறப்பட்டது.
இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளவென அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தினர் இன்று யாழ்ப்பாணம் வருவர் எனத் தெரிவிக்கப்பட்டது. மூவரின் சடலங்களும் இன்று உறவினர்களிடம் கையளிக்கப்படும்.

மஹிந்தவைக் காப்பாற்ற நல்லைக் கந்தனிடம் கையேந்திய இளைஞர்களுக்கான நாளைய அமைப்பு

news
ஐ.நா மனிதவுரிமைப் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா சமர்ப்பித்துள்ள நிலையில்
மஹிந்த ராஜபக்‌ஷவிற்கு நல்லாசி வேண்டி தமிழ்க் கிழவனாம் நல்லூர் முருகனிடம், இளைஞர்களுக்கான நாளைய அமைப்பினர் நேற்றையதினம் வழிபாடு செய்துள்ளனர்.

யுத்தம் என்ற பெயரில் பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்களை கொன்றொழித்த பழி பாவங்களைச் சுமந்து கொண்டிருக்கும் மஹிந்தவின் நலனுக்காக தமிழ்க் கிழவன், தமிழர்களுக்கேயுரித்தான தனிப்பெருங்கடவுள் என்றெல்லாம் புகழப்படுகின்ற நல்லூர் முருகனிடம் அடிக்கடி சிங்களம் வழிபட்டு வருகிறது.

முள்ளிவாய்க்காலில் குண்டுமாரி பொழிந்து மக்களின் உயிர்களைப் பறித்த உலங்கு வானூர்திகளைக் கொண்டு நல்லூர்த் தேர்த்திருவிழாவின் போது பூ மாரி பொழிந்தது சிறிலங்கா வான்படை. மஹிந்தவின் பிறந்தநாள் முதற்கொண்டு அனைத்துக்கும் நல்லூர்க் கந்தனையே கதி என்று சரண்புகுவது வழக்காகிவிட்டது.

இளம் குடும்பஸ்தர் வெட்டிப் படுகொலை; முல்லைத்தீவில் பயங்கரம்

news
முல்லைத்தீவு சுதந்திரபுரம் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மிகக் கோரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அதே இடத்தைச் சேர்ந்த கந்தசாமி மகேந்திரன் (வயது 32) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார் நேற்றுமுன்தினம் இரவு இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:
 
சுதந்திரபுரம் காளி கோயிலடியில் இந்தக் குடும்பஸ்தர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் ஓட்டோ ஒன்றில் வந்த உயிரிழந்தவரின் மனைவியின் சகோதரரான ஒருவரே இந்தக் குடும்பஸ்தரை வாளால் வெட்டியதாகப் பொலிஸ் வாக்கு மூலத்தில் தெரிவிக்கப்பட்டது.
 
வாளால் வெட்டியவர் ஒரு பூசாரி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாள் வெட்டில் படுகாயமடைந்த இவர் தர்மபுரம் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும்போது இடைவெளியில் உயிரிளந்துள்ளதாகக் கூறப்பட்டது. அவரது சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.
 
முல்லைத்தீவுப் பொலிஸாரின் தகவலை அடுத்து கிளிநொச்சி மாவட்டப் பதில் நீதிவான் எஸ்.விஜயராணி சடலத்தைப் பார்வையிட்டார். மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் சடலத்தை உறவினர்களிடம் கையளிக்குமாறு அவர் உத்தரவிட்டார்.
 
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவுப் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் உயிரிழந்தவரின் மைத்துனராக ஆலயப் பூசகர் ஒருவரைக் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.