Wednesday, March 14, 2012

அரசுக்கு ஆசி வேண்டி மணியோசை புறக்கணித்தனர் யாழ்.மக்கள்; ஒலியெழுப்புமாறு வன்னியில் நிர்ப்பந்தம்

news
 நாட்டுக்கு ஆசிர்வாதம் வேண்டி ஆலய மணிகளை ஒலிக்கச் செய்யுமாறு அரசு விடுத்த வேண்டுகோளை யாழ். மக்கள் புறக்கணித்துள்ளனர். எனினும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் போன்ற மாவட்டங்களில் படையினரின் வற்புறுத்தலின் பேரில் விசேட பூசைகளும், மணி ஓசை எழுப்பும் நிகழ்வும் நடைபெற்றன.
 
இது குறித்து மேலும் தெரியவருவதாவது:
நாட்டுக்கு ஆசிர்வாதம் வேண்டி நேற்று சகல ஆலயங்களிலும் மணி ஒலிக்க வேண்டும் என்று பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு பணித்திருந்தது.  ஆயினும் அரசின் இந்தக் கட்டளையைப் புறக்கணிக்குமாறு கூட்டமைப்பு மக்களை கோரியிருந்தது. மக்களினதும், மாவீரர்களினதும் நினைவாக மணி ஒலி எழுப்பத் தடை போட்ட அரசுக்கு ஆசீர்வாதம் வேண்டி மணி ஒலி எழுப்புமாறு கேட்பது எந்த விதத்தில் நியாயம் என்று கூட்டமைப்பு கேட்டிருந்தது. 
 
இந்த நிலையில் தமிழ் மக்கள் அரசின் கோரிக்கையை உதாசீனம் செய்து ஆலயங்களில் மணி ஒலியை எழுப்பவில்லை.  குறிப்பாக யாழ்.மாவட்டத்தில் எந்தவொரு ஆலயத்திலும் குறித்த நேரத்தில் மணி ஓசை எழுப்பப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. எனினும் படைத்தரப்பின் நிர்ப்பந்தத்தின் பேரில் யாழ். மாவட்டம் தவிர்ந்த வடக்கின் ஏனைய பகுதிகளில் பின்னர் மணி ஓசை எழுப்பப்பட்டது. அத்துடன் விசேட பூஜைகளும் வற்புறுத்தலின் பேரில் இடம்பெற்றன. 
 
கிளிநொச்சி, துணுக்காய், நெடுங்கேணி போன்ற பகுதிகளில் இத்தகைய பலவந்தப்படுத்தப்பட்டு மணி ஒசை எழுப்பப்பட்டதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.வவுனியாவில் அரச அதிபர் திருமதி சாள்ஸ் தலைமையில் பண்டாரிக்குளம் முத்துமாரி அம்மன் ஆலயத்தில் விசேட பூசைகளும் மணி ஓசை எழுப்பும் நிகழ்வும் இடம்பெற்றது. 

No comments:

Post a Comment