Friday, March 9, 2012

யாழ். - கொழும்பு பழைய இரும்பு வியாபாரம் படையினரால் தடுத்து நிறுத்தம்


யாழ்.மாவட்டத்திலிருந்து பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் தென்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்த பழைய இரும்பு வியாபாரம் எந்தவிதமான முன்னறிவித்தலுமின்றி படையினரால் நிறுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில் இரும்பு வியாபாரிகள் இன்று பலாலியில் இராணுவத்தினருடன் சந்திப்பொன்றை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாவட்டத்திலிருந்து இராணுவத்தினரின் கண்காணிப்புடன், பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்று முன்னர் தென்பகுதிக்கு பழைய இரும்பு கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்தது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் முக்கிய இரும்பு விற்பனை நிலையங்களுக்குச் சென்ற படையினர் இனிமேல் இரும்பு கொண்டு செல்ல முடியாதென கூறியிருக்கின்றனர்.
இதையும் மீறி லொறிகளில் கொண்டு செல்லப்பட்ட இரும்புகள் ஆனையிறவு சோதனைச் சாவடியில் வைத்து நிறுத்தப்பட்டு பாதுகாப்பு அமைச்சின் புதிய அனுமதிக் கடிதத்தை தருமாறு படையினர் கேட்டுள்ளனர். ஆனால் அது இல்லாமையினால் லொறிகள் திருப்பி அனுப்பப்பட்டிருக்கின்றது.
இந்த நிலையில், முன்னர் வழங்கப்பட்ட பாதுகாப்பு அமைச்சின் அனுமதிக் கடிதத்திற்கு மேலாக புதிய அனுமதிக் கடிதம் பெறப்படவேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது,
இது குறித்து இராணுவத்தினரிடம் சந்தித்தபோதும் எந்தவித நிவாரணமும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் பழைய இரும்பு சேகரிக்கும் இடங்கள் மற்றும், விற்பனை செய்யும் இடங்களில் இரும்புகள் தேங்கிக் கிடப்பதை காணமுடிகின்றது.

No comments:

Post a Comment