Saturday, March 10, 2012

நுணாவிலில் 3 படையினர் சூடு வாங்கிச் சாவு; அதிகாலைவேளை சம்பவம்; மூன்றாம் தரப்பு காரணமல்ல என்கிறது படைத்தரப்பு

news
 சாவகச்சேரி நுணாவில் மேற்குப் பகுதியில் நேற்று அதிகாலை துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மூன்று படையினரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
 
நுணாவில் மேற்கு கண்ணகை ஆலயம் மற்றும் முருகமூர்த்தி ஆலயம் ஆகிய இடங்களில் இருந்தே இந்த மூன்று சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. சிலாபம் தலாவத்தவைச் சேர்ந்த எம்.எஸ்.சி.பெர்னாண்டோ (வயது29), உசாப்பிட்டிய, தங்காலையைச் சேர்ந்த கே.ஐ.டீ.ஹப்புக்ஹொட்டுவா (வயது20), தியகண்ணவ, ஹல்ஹெற்றிபெலவைச் சேர்ந்த ஆர்.எம்.ஆர்.ரட்ணநாயக்க (வயது24) ஆகியோரது சடலங்களே சூட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டன.
 
கைதடிப் பாலத்திலிருந்து ரோந்து சென்ற சிப்பாய்களின் சடலங்களே இவை எனத் தெரிவிக்கப்பட்டன. முருகன் கோயிலடியில் இரண்டு சடலங்களும், அதிலிருந்து 200 மீற்றருக்கு அப்பால் உள்ள கண்ணகை அம்மன் கோயிலுக்கு அருகில் மற்றொரு சடலமும் காணப்பட்டன. லான்ஸ் கோப்ரல் ஆர்.எம்.ஆர்.ரட்ணநாயக்காவின் சடலம் அம்மன் கோயிலடியிலும், எம்.ஐ.டி.ஹப்புக்ஹொட்டுவ, எம்.எஸ்.ரி.பெர்னாண்டோ ஆகியோரின் சடலங்கள் முருகன் கோயிலடியிலும் காணப்பட்டன.
 
இந்தச் சம்பவம் தொடர்பாகச் சாவகச்சேரி பொலிஸார், சாவகச்சேரி நீதிமன்ற பதில் நீதிவான் சு.கந்தசாமி முன்னிலையில் அறிக்கை தாக்கல் செய்தனர். சம்பவ இடத்துக்குச் சென்ற பதில் நீதிவான் சடலங்களைப் பார்வையிட்ட பின்னர் யாழ். போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரிமூலம் உடற்கூற்றுப் பரிசோதனை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார். முருகன் ஆலயத்துக்கு அருகில் கடமையில் ஈடுபட்டிருந்த சிப்பாய் ஒருவர் சக படைச் சிப்பாய்கள் இருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார் என இராணுவப் பேச்சாளர் நிஹால் ஹப்பு ஆராய்ச்சி தெரிவித்தார்.
 
உயிரிழந்த படையினர் ஒருவரின் சடலத்துக்கு மரண விசாரணை, உடற்கூற்றுப் பரிசோதனை என்பன நேற்று இடம்பெற்றன. ஏனைய இரு சடலங்களினதும் மரண விசாரணை, உடற்கூற்றுப் பரிசோதனை என்பன இன்று இடம்பெறும் எனக் கூறப்பட்டது.
இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளவென அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தினர் இன்று யாழ்ப்பாணம் வருவர் எனத் தெரிவிக்கப்பட்டது. மூவரின் சடலங்களும் இன்று உறவினர்களிடம் கையளிக்கப்படும்.

No comments:

Post a Comment