Wednesday, March 14, 2012

ஜெனிவாவில் இந்தியாவின் நிலைப்பாடு; பிரதமர் மன்மோகன் இன்று அறிவிப்பார்

news
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்துள்ள பிரேரணை தொடர்பில் இந்திய அரசின் நிலைப்பாட்டைப் பிரதமர் மன்மோகன்சிங் டில்லி நாடாளுமன்றத்தில் இன்று தெரிவிப்பார் என்று இந்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் நேற்றுத் தெரிவித்துள்ளார்.
 
அமெரிக்கா கொண்டுவந்துள்ள பிரேரணை விவகாரம் நேற்று இரண்டாவது நாளாகவும் இந்திய நாடாளுமன்றின் இரு அவைகளிலும் பெரும் புயலைக் கிளப்பியது.நேற்றுக்காலை அவை கூடியதும், கேள்வி நேரத்தை இரத்துச் செய்துவிட்டு இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பாக அமெரிக்கா கொண்டு வந்த பிரேரணை தொடர்பில் இந்திய அரசின் நிலைப்பாடு என்னவென்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், இலங்கை அரசின் போர்க்குற்றம் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் தி.மு.க., அ.தி.மு.க, பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் கட்சியைச் சேர்ந்த அனைத்து எம்.பிக்களும் ஒருமித்த குரலில் முழக்கமிட்டனர்.
 
இதனைத் தொடர்ந்து பெரும் அமளி ஏற்பட்டதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இதனால் நாடாளுமன்ற இரு அவைகளும் (ராஜ்யசபா, லோக்சபா) மதியம் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டன.
 
பிரணாப் முகர்ஜி பேச்சு
ஒரு குறிப்பிட்ட நாட்டுக்கு எதிராக, எவ்வித தீர்மானம் கொண்டுவரப்பட்டாலும், அதனை நாம்ஆதரிக்கக் கூடாது, என இந்திய மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்றுத் தெரிவித்ததையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கூச்சல்,குழப்பம் ஏற்பட்டது. சபையின் அமர்வும் நண்பகல் வரை இடைநிறுத்தப்பட்டது.இலங்கை அரசுக்கு எதிராக, ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று இந்திய நாடாளுமன்றத்தில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று வலியுறுத்தினர். இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று திமுக, அதிமுக, இடதுசாரி உறுப்பினர்கள் ஒருமித்த குரல் எழுப்பினர்.
 
மக்களவையில் கடும் அமளிக்கிடையே பேசிய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, திமுக தலைவர்கருணாநிதிக்கும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும் பிரதமர் கடிதம் எழுதியுள்ளார். எந்த ஒரு நாட்டுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டாலும், அதை நாம் ஆதரிக்கக் கூடாது.
 
எனினும், மனித உரிமைக் குழுவுடன் ஆலோசித்தப் பிறகு, இதுகுறித்து நாம் விவாதித்து முடிவு எடுக்கலாம், என்றார்.இலங்கை அரசுக்கு எதிராக ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானத்தின் மீதான இந்தியாவின் நிலைப்பாடு குறித்து பிரதமர் மன்மோகன் சிங் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இந்த விவகாரத்தில் பிரதமர் தனது மௌனத்தைக் களைய வேண்டும் என்று அவர்கள் குரல் எழுப்பினர்.
 
மாநிலங்களவை  நேற்றுக் காலை ஆரம்பமாகியவுனேயே இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானம் தொடர்பான பிரச்சினையை திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்தனர். இலங்கை அரசுக்கு எதிராக இந்தியா வாக்களிக்கும் என்று உறுதிமொழியை அரசு அளித்திட வேண்டும். தயவு செய்து உங்கள் மௌனத்தைக் களையுங்கள் என்று திமுக உறுப்பினர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை கேட்டுக்கொண்டனர்.
 
மௌனம் காப்பது சரியல்ல
அப்போது பேசிய இடதுசாரிகளின் மூத்தத் தலைவர் டி.ராஜா, இலங்கையில் நடந்த அனைத்து விட்யங்களும் இந்தியாவுக்குத் தெரியும். இந்த விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு என்ன என்பதை இப்போதே தெளிவுபடுத்த வேண்டும், என்று கேட்டார். இந்த விவகாரத்தில் இரண்டு முறை தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியும், அதற்கு பதிலளிக்காமல் மன்மோகன் மௌனம் காத்து வருவதைக் குறிப்பிட்ட அதிமுகவின் மைத்ரேயன், இனியும் மௌனம் காப்பது சரியல்ல. இந்தியா தனது நிலைப்பாட்டைச் சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
 
எனினும், தமிழக உறுப்பினர்களின் கேள்விகளையும் கருத்துகளையும் நிதானமாகக்கேட்டுக்கொண்டிருந்த பிரதமர் மன்மோகன் சிங், அதுபற்றி பதில் எதுவும் அளிக்காமல் அமரிந்திருந்தார்.இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று திமுக, அதிமுக,இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆவேசமாக தங்கள் கருத்துகளை முன்வைத்துக் கொண்டிருந்தபோது, தமிழக காங்கிரஸ் தலைவரும், நாடாளுமற்ற உறுப்பினருமான ஞானதேசிகன் எழுந்து விளக்கம் ஒன்றை தந்தார்.
 
ஞானதேசிகன் விளக்கம்
நானும் ஒரு தமிழன். உங்களுக்கு இருக்கும் அதே உணர்வு எனக்கும் உண்டு. இந்தப் பிரச்னையை உணர்வுப்பூர்மாக மட்டுமே பார்க்க முடியாது. இது இரு நாடுகளின் உறவு சம்மந்தமானது. இலங்கையில் இப்போது வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழர்களுக்கு இந்தியா தான் பொருளாதார ரீதியிலும் உதவிகள் செய்து வருகிறது. இதை எவராலும் மறுக்க முடியாது. இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்காவோ, ரஷ்யாவோ தீர்மானம் கொண்டுவரலாம். அவர்கள் ஒன்றும் தமிழர்களுக்காக உதவிகளைச் செய்வதில்லை. நாம் தான் செய்துகொண்டிருக்கிறோம். இந்தியா எடுக்கும் முடிவால், இலங்கையுடன் தூதரக உறவில் பாதிப்பு ஏற்பட்டுவிட்டால், அங்கிருக்கும் என் சகோதரர்களுக்கு உதவுவது யார்? எந்த நாடு முன்வரும். இதையெல்லாம் கருத்தில்கொள்ள வேண்டும். இந்த முடிவை பிரதமர்தான் ஆலோசித்து எடுக்க வேண்டும், என்றார் ஞானதேசிகன்.
 
கூச்சலிட்ட எம்.பிக்கள்
ஞானதேசிகன் இப்படிப் பேசிக்கொண்டிருந்தபோது, அதிமுக, திமுக, இடதுசாரி என தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கடும் கோபத்துடன் அவரைச் சாடினர். இதனால், அவையில் கடும் அமளி நிலவியது. இதைத் தொடர்ந்து, ஞானதேசிகன் தனது பேச்சை பாதியிலேயே முடித்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டார்.பின்னர் விளக்கம் அளித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பவன் குமார் பன்சால், 'அது என்ன தீர்மானம் என்பது தெரியாது. அதுபற்றி, வெளியுறவுத் துறை அமைச்சகத்துடன் பேசிவிட்டு, ஓர் அறிக்கை வெளியிடப்படும், என்றார். இதையடுத்து, தமிழக நாடாளுமற்ற உறுப்பினர்கள் தொடர்ந்து இப்பிரச்னையை எழுப்ப, கடும் அமளி காரணமாக, அவையை பிற்பகல் வரை ஒத்திவைப்பதாக, மாநிலங்களவைத் தலைவர் அன்சாரி அறிவித்தார்.
 
பின்னர் அவை ஆரம்பமானபோது தமிழகக் கட்சிகளின் கேள்விக்குப் பதிலளித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சால், இலங்கைக்கு எதிரான பிரேரணை குறித்து பிரதமர் மன்மோகன் சிங் இன்ற நாடாளுமன்றத்தில் பதில் அளிப்பார் என்று கூறினார்.
 
இதேவேளை, இலங்கைக்கு ஆதரவு அளிக்கக் கூடாது என்ற ஒருமித்த கருத்து தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் கருத்தை முற்றிலுமாகப் புறக்கணிக்க முடியாத நிலை மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன், ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான பிரேரணை தொடர்பாக முடிவு எடுக்கும் விடயத்தில் இந்திய மத்திய அரசு திக்குமுக்காடுகிறது. 
 
நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பலத்த அடி வாங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் கருத்தைப் புறக்கணிப்பதன் விளைவுகள் குறித்து மன்மோகன்சிங் அரசு தீவிரமாக ஆலோசித்தே முடிவுகளை எடுக்கும் என்று கருதப்படுகிறது.இதனால் ஜெனிவா பிரேரணை விடயத்தில் இந்தியா எடுக்கும் முடிவு இலங்கைக்கு அதிர்ச்சியானதொன்றாக அமைவதற்கு வாய்ப்புகள் உள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது. 

No comments:

Post a Comment