Sunday, February 12, 2012

யாழ். வலிகாமம் பிரதேசத்தில் கிணற்றிலிருந்து மனித எலும்புக்கூடு எச்சங்கள் மீட்பு


யாழ். வலிகாமம் வடக்கு கொல்லங்கலட்டி பகுதியிலுள்ள நீண்டகாலப் பாவனையற்ற கிணற்றை துப்புரவு செய்யும்போது கிணற்றிலிருந்து மனித எலும்பு எச்சங்கள் சில நேற்றும், இன்று காலையும் மீட்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
கொல்லங்கலட்டி பகுதி நீண்டகாலமாக உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த நிலையில், அண்மையில் இந்தப் பகுதிக்கு மக்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தப் பகுதியிலுள்ள பிள்ளையார் ஆலயத்தினை அண்டியுள்ள வீடொன்றின் உரிமையாளர்கள் வெளிநாட்டிலிருந்து வந்து வளவினை துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் ஒரு பாகமாக இந்த வீட்டின் கிணற்றை துப்புரவு செய்யும்போது, நேற்று மாலை 5.00 மணியளவில் அதனுள்ளிருந்து மண்டை ஓட்டு எச்சங்கள் மீட்கப்பட்டன. இதனையடுத்து சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.
இதனையடுத்து இன்று காலை குறித்த கிணற்றை மேலும் துப்புரவு செய்த பொலிஸார் அதனுள்ளிருந்து மேலும் சில எலும்பு எச்சங்களை மீட்டுள்ளனர். இது யாருடையது என்பது குறித்த எதிர்வு கூறல்கள் எதுவும் தெரியவில்லை,
எனினும் 1991ம் ஆண்டு இந்தப் பகுதியிலிருந்து இடம்பெயரும்போது சம்பவம் இடம்பெற்ற கிணற்றிற்கு அருகிலுள்ள வீட்டில் மூன்று முதியவர்கள், இடம்பெயர மறுத்து அங்கேயே இருந்ததாகவும், அவர்கள் பின்னர் காணாமல்போயிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே அவர்களுடைய எலும்பு எச்சங்களாக கூட இவை இருக்கலாம் என நம்பப்படுகின்றது. எனினும் இது தொடர்பான விசாரணைகளை காங்கேசன்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை இன்று காலை சம்பவ இடத்திற்கு வந்த மல்லாகம் நீதிபதி விசாரணைகளை மேற்கொண்டார், மேலும் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக எச்சங்களை அனுப்பி வைக்குமாறும், உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment