Monday, February 13, 2012

யாழிலும் தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு! இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகளின் மீது இன்று தாக்குதல்!


எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து யாழ்.மாவட்டத்தில் தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை நடத்தி வரும் நிலையில் பெருமளவு பயணிகள் போக்குவரத்து வசதிகள் போதாமையினால் நகரில் நீண்டநேரம் தரித்து நின்றதுடன், நகரில் வழக்கத்திற்கு மாறாக அதிக சனநெருக்கடியும் ஏற்பட்டிருந்தது. 
நேற்று முன்தினம் முதல் தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் உள்ளக மற்றும் வெளிமாவட்ட போக்குவரத்து ஆகியவற்றில் இ.போ.ச பேருந்துகளே ஈடுபட்டு வருகின்றன. அவற்றுக்கும் தேவையான அளவில் பேருந்துகள் இன்மையினால் சில வெளிமாவட்ட போக்குவரத்துக்கள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன.
இதனால் வெளிமாவட்டங்களிலிருந்து வந்த பயணிகள் பெருமளவில், நகரிலும், பேருந்து நிலையத்திலும் கூடி விட்டனர். இதேபோல் பாடசாலை மாணவர்களும் பெருமளவில் கூடி விட்டதால் உடனடியாக நகருக்குள் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். இதற்கிடையில் உள்ளூர் சேவைகளுக்காகவே அதிகளவான மக்கள் நண்பகல் தாண்டியும் தமது இடங்களுக்குத் திரும்ப முடியாத நிலையில் காத்திருந்தனர்.
இதேபோல் கிளிநொச்சி மாவட்டத்திலும், அரச பணிக்காக சென்றிருந்த பலர் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டிருந்தது, மேலும் இன்று காலை போக்குவரத்துச் சீரின்மையினால் பல அரச பணியாளர்கள் தமது கடமைக்குத் திரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்.மாவட்டத்தில் இ.போ.ச போதுமானளவில் பேருந்துகள் முற்றும் பணியாளர்கள் இல்லாத நிலையில் மாவட்டத்தின் போக்குவரத்து தேவையில் பெரும் பகுதியை தனியார் துறையே தீர்த்து வந்தது.
இந்நிலையில் தனியார் துறையினரின் பணிப்பகிஷ்கரிப்பு மாவட்டத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டிருப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளதுடன், தனியர், மற்றும் அரச துறையின் பணிகளும் நேற்று முடக்கப்பட்டிருந்தது.
இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகளின் மீது இன்று தாக்குதல்!
யாழில் தனியார் பேருந்து ஊழியர்கள் தொடர் பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டு வரும் நிலையில், பணியில் ஈடுபட்டுவரும் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகளின் மீது இன்று காலையும், நண்பகலும் கல்வீச்சுத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ள.
11ம் திகதி நள்ளிரவு தொடக்கம் எரிபொருள் விலையேற்றம் செய்யப்பட்டுள்ளது, இந்நிலையில் இதனை எதிர்த்து தனியார் பேருந்து ஊழியர்கள் நேற்று முதல் யாழ்.மாவட்டத்தில் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் பொதுமக்களின்; நலனை அடிப்படையாக கொண்டு இலங்கை போக்குவரத்துச் சபையின் சேவைகள் இடம்பெற்று வருகின்றது.
இதனையும் தடுக்கும் நோக்கில் யாழ்.மீசாலை பகுதியில் இன்று காலை 8மணியளவில் பாடசாலை சேவையில் ஈடுபட்டிருந்த பேருந்தின் மீது இனந்தெரியாத நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் பாடசாலை மாணவியொருவர் காயமடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து நண்பகல் 12மணியளவில் யாழ். மாம்பழம் சந்திப்பகுதியிலும், இ.போ.ச பேருந்தின் மீது கல்வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவத்தில் பேருந்தின் சாரதி படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை இந்த தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும், தனியார் பேருந்து நேரக்கணிப்பாளர் ஒருவர் இன்று பிற்பகல் 1மணியளவில் யாழ்.நகரில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment