Thursday, February 16, 2012

சிறிலங்காவின் இராணுவ நீதிமன்றம் அர்த்தமற்றது; சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு

news
தமது இராணுவத்தின் மீது எழுந்துள்ள போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணைகளை திசை திருப்பும் முகமாகவே சிறிலங்கா அரசாங்கம், இராணுவ நீதிமன்றத்தை நியமித்துள்ளதாக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றஞ்சாட்டியுள்ளது.

அரசினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் குறித்து விசாரிக்க இராணுவ நீதிமன்றம் ஒன்றை நியமித்துள்ளதாக சிறிலங்கா இராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூரிய அறிவித்திருந்தார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படுவதற்குச் சாத்தியமுள்ள சூழலில், மற்றொரு அர்த்தமற்ற நகர்வை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. என  மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்திருக்கின்றார்.

இந்த இராணுவ நீதிமன்றத்தை நியமித்துள்ள இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய, போரின் இறுதி ஆண்டுகளில் போர் வலயமான வன்னிப் பகுதிக்குப் பொறுப்பான தளபதியாக இருந்தவர்.

ஒட்டுமொத்த போரின் திட்டமிடல் மற்றும் நடவடிக்கைகளில் அவர் முழுமையாகத் தொடர்புபட்டிருந்தவர். அவ்வாறான ஒருவரால் நியமிக்கப்பட்டுள்ள இராணுவ நீதிமன்றத்தில் அங்கம் வகிக்கும் இராணுவ அதிகாரிகளால், தமது நண்பர்களான சக அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட மோசமான மீறல்கள் குறித்து உண்மையை கண்டறியும் நடுநிலையான, சுதந்திரமான விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என எதிர்பார்க்க முடியாது எனவும் அடம்ஸ் இவ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அரசுக்கு ஆதரவான உறுப்பினர்களைக் கொண்ட விசாரணைக் குழுக்களை நியமிக்கும் நீண்ட வரலாற்றை சிறிலங்கா கொண்டிருப்பதை இவ் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

No comments:

Post a Comment