Monday, February 13, 2012

மண்ணெண்ணெய் விலை உயர்வுக்கு எதிராக மலையகத்தில் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம்!- மனோ கணேசன் அழைப்பு


மண்ணெண்ணெய் விலையை 50 விகிதத்தால் உயர்த்தி அரசாங்கம் உழைக்கும் தோட்ட தொழிலாளி தலையில் ஓங்கி அடித்துள்ளது. ஏற்கனவே கூட்டு ஒப்பந்த நடைமுறையில் ஒரு நாள் ஒன்றுக்கு பறிக்கப்படும் கொழுந்து நிறை தொடர்பில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளினால் நமது தொழிலாளர்களுக்கு உழைப்புக்கு உரிய ஊதியம் கிடைப்பதில்லை.
இதன் காரணமாக தோட்ட தொழிலாளி வறுமையின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் இன்றைய வேளையிலேயே இந்த மண்ணெண்ணெய் விலை ஒரேயடியாக ஐம்பது விகிதத்தால் எந்தவித தயவு தாட்சண்யமும் இல்லாமல் உயர்த்தப்பட்டுள்ளது.
அத்துடன் எரிபொருள் விலையேற்றம் காரணமாக இன்னும் சில நாட்களில் ஏனைய அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் உயரப்போகின்றது. தோட்ட தொழிலாளர்கள் மத்தியில் இன்று நிலவுகின்ற இந்த மோசமான நிலைமையை அரசாங்கத்திற்கும், நாட்டுக்கும் எடுத்து காட்டி உரிய நிவாரணங்களை கோரும் முகமாக ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம், மலையகம் முழுக்க அரசியல், தொழிசங்க பேதங்களுக்கு அப்பாற்பட்ட ஐக்கியத்துடன் நடத்தப்படவேண்டும்.
இதற்கு அனைத்து மலையக தொழிற்சங்கங்களும் ஆதரவு வழங்க வேண்டும் என ஜமமு-ஜதொகா தலைவர் மனோ கணேசன் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியதாவது, நாட்டின் ஏனைய தனியார் பேரூந்து மற்றும் அரசு துறைகளை சார்ந்த தொழிலாளர்களும், மீனவ தொழிலாளர்களும் விலைவாசி உயர்விற்கு எதிராக இன்று தெருப்போராட்டங்களை ஆரம்பித்துள்ளார்கள்.
இந்நிலையில் நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெழும்பாக இருக்கும் மலைநாட்டு தோட்டத்தொழிலாளியும் எமது வாழ்வாதாரங்களை பாதுகாத்துகொள்ளும் நோக்கில் போராடி தமது அடையாள எதிர்ப்பை காட்ட வேண்டிய வேளை தற்போது வந்துவிட்டதாக நாம் நம்புகின்றோம்.
ஏனைய அனைத்து துறை சார்ந்த தொழிலாளர்களும் தமது எதிர்ப்புகளை காட்டும் போது, மலையக தோட்ட தொழிலாளர் தமது எதிர்ப்பை காட்டாவிட்டால், விலைவாசி உயர்வு என்பது தோட்ட தொழிலாளிக்கு ஒரு பிரச்சினையாக இல்லை என்றும், எனவே இது தொடர்பில் தொழிலாளிக்கு எந்தவித நிவாரணமும் அவசியம் இல்லை என்று அரசாங்கம் கருதுகின்ற நிலைமை ஏற்படும்.
எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் இடதுசாரி முன்னணி தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன ஆகியோர் இந்நடவடிக்கைக்கு தமது ஒத்துழைப்புகளை நல்குவதாக உறுதி அளித்துள்ளதாக மனோ கணேசன் தெரிவித்தார்.
இந்த யோசனை தொடர்பில், இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்க பொதுசெயலாளர் வேலாயுதம், ஜேவிபியின் இலங்கை தோட்ட தொழிலாளர் சங்க பொதுசெயலாளர் சந்திரசேகரன், விவசாய தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசுவாமி, இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி பொதுசெயலாளர் சதாசிவம் ஆகியோர் உடன்பாடு தெரிவித்துள்ளனர்.
தொழிலாளர் தேசிய முன்னணி தலைவர் திகாம்பரம், மலையக மக்கள் முன்னணி பொதுச்செயலாளர் லோரன்ஸ், நுவரெலியா மாவட்ட எம்பி ஸ்ரீ ரங்கா ஆகியோருடனும் இது தொடர்பில் தான் உரையாடியுள்ளதாக மனோ கணேசன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கை உரிய கலந்துரையாடல்களுக்கு பின் உடன் அறிவிக்கப்படும் என மனோ கணேசன் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment