Saturday, February 25, 2012

மட்டு.வின்சன்ற் பாடசாலையில் சிலை அகற்றப்பட்டதை அரசியலாக்க முற்படுகின்றனர்!- பாடசாலை அபிவிருத்திச் சங்கம்


மட்டு.வின்சன்ற் மகளிர் பாடசாலையின் சரஸ்வதி சிலையினை அகற்றுவதற்கு காராணமாகவிருந்த பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா, விளையாட்டுப் போட்டியின் பிரதம விருந்தினராக அழைக்கப்படுவதை நிறுத்த வேண்டும், இதனால் விளையாட்டுப் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது என வெளியான செய்திக்கும் தங்களுக்கும் எதுவித தொடர்பும் இல்லையென குறித்த பாடசாலையின் அபிவிருத்திச் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் அவர்கள் தெரிவித்ததாவது,
சரஸ்வதி சிலை அகற்றப்பட்ட சம்பவத்தை பயன்படுத்தி சிலர் அரசியல் இலாபம் தேட முற்படுவதாகவும் இதற்காக பாடசாலை நிருவாகம் கூறுவதைப் போன்று செய்தியை வெளியிட்டு இதனூடாக இந்துக்கள் கிறிஸ்தவர்களிடையே மத முரண்பாடுகளை தோற்றுவிப்பதன் மூலம் தமிழ் மக்களிடையே பிளவை ஏற்படுத்தி எம்மை பலவீனப்படுத்துவதற்கும் முற்படுவதாக பாடசாலை அபிவிருத்திச் சங்கம் தெரிவித்துள்ளது.
சரஸ்வதி சிலை அகற்றல் அல்லது மீள நிறுவுதல் தொடர்பாக எந்தவிதமான அரசியல் தலையீடுகளையும் ஏற்றுக்கொள்ள பாடசாலை நிருவாகம் தயாராக இல்லை என வலியுறுத்திக் கூறுவதுடன் இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழ் மக்களின் அரசியல் பலத்தை பலவீனப்படுத்துவதையும் மத முரண்பாடுகளை தோற்றுவிப்பதனையும் வன்மையாகக் கண்டிப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இரண்டாம் இணைப்பு:
பாடசாலையில் இடம்பெற்ற சில குழப்ப நிலை காரணமாக விளையாட்டுப் போட்டியை மேற்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் செய்யாத நிலையிலேயே அவை பிற்போடப்பட்டுள்ளதாகவும் அதனைவிட எதுவித காரணமும் இல்லையென மட்டக்களப்பு வின்சன்ற் மகளிர் தேசிய பாடசாலையின் அதிபர் சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்தார்.
தமது பாடசாலையில் சரஸ்வதி சிலை அமைக்கப்பட்டதற்கும் அவை அகற்றப்பட்டதற்கும் எதுவித அரசியல் பின்னணியும் இல்லையென தெரிவித்த அவர், கிழக்கு மாகாண கல்வியமைச்சரின் வேண்டுகோளின் பேரிலேயே அவை அகற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டியை நடத்துவது தொடர்பிலான கூட்டம் பிரதி அதிபர் தலைமையில் இடம்பெற்றதாகவும் தனக்கு வேறு ஒரு நிகழ்வில் கலந்துகொள்ள தான் சென்றதால் அந்த கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லையெனவும் தெரிவித்தார்.
குறித்த கூட்டத்தில் சரஸ்வதி சிலையினை மீண்டும் அதே இடத்தில் வைக்கும் வரை பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டியை ஒத்திவைப்பதாகவும், சரஸ்வதி சிலையினை அகற்றுவதற்கு காரணமாகவிருந்த கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா அவர்களை விளையாட்டுப் போட்டியின் பிரதம விருந்தினராக அழைக்கப்படுவதை நிறுத்தவேண்டும் என்று கூறியுயே விளையாட்டுப்போட்டியை பிற்போட்டதாக வெளியான செய்தியை முற்றாக மறுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பிரதம அதிதியை மாற்றுவது தொடர்பில் எதுவித கருத்துக்களும் அங்கு பரிமாறப்படவில்லையென தெரிவித்த,அவர் இதனை முற்றாக மறுப்பதாகவும் தெரிவித்தார்.
சரஸ்வதி சிலையினை அமைப்பது தொடர்பில் பாடசாலை அபிவிருத்திக்குழுவும் பாடசாலை சமூகமும் இணைந்து எடுத்த முடிவு என தெரிவித்த அவர்,அதனை நிறுவுமாறு கூறுவதற்கு எந்த அரசியல்வாதியும் தேவையில்லையெனவும் தெரிவித்தார்.
இவ்வாறான நிகழ்வுகளில் எந்தவித அரசியல் சக்திகளும் தலையிடுவதை பாடசாலை சமுகம் விரும்பவில்லையென தெரிவித்த அதிபர் கல்வியமைச்சர் அனுமதி வழங்கினால் சிலை மீண்டும் நிறுவப்படும் என தெரிவித்தார்.
இதற்கு எமக்கு எந்த அரசியல் செல்வாக்கும் தேவையில்லை.இதனை யாரும் அரசியலுக்கு பயன்படுத்துவதையும் வன்மையாக கண்டிப்பதாகவும் சிலர் இதனை தமது அரசியலுக்கு பயன்படுத்திவருவதை அனுமதிக்கமுடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment