Saturday, February 11, 2012

பூநகரியில் ஐந்து கிராமங்களை சுவீகரித்து சீனாவின் உதவியுடன் சர்வதேச விமான நிலையம் அமைக்கத் திட்டம்!- சி.சிறீதரன் பா.உ


பூநகரியில் பொது மக்களது ஐந்து கிராமங்களைச் சுவீகரித்து சீன அரசின் உதவியுடன் சர்வதேச விமான நிலையம் ஒன்றை அமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
பூநகரி- கல்முனை, கவுதாரிமுனை, வெட்டுக்காடு, வெற்றிலைக்கேணி, பரமன்கிராய் ஆகிய ஜந்து கிராமங்களை சுவீகரித்தே இவ்வாறு அரசாங்கம் விமான நிலையத்தை அமைக்கவுள்ளது.
15 கிலோ மீற்றர் நீளமும் 1 ½ கிலோ மீற்றர் அகலத்துடன் இவ்விமான நிலையம் அமையப்பெறவுள்ளது. இது தொடர்பில் சீனக் குழுவினர்கள் அப்பகுதிக்கு சென்று மண் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
குறிப்பாக இப்பகுதியானது சர்வதேச விமான நிலையம் அமையப்பெறுவதற்கு உகந்த ஆழம் குறைந்த கடற் பகுதி மூன்று பக்கமும் கடல் சார் சாதகமான அமைப்பு விமான நிலையத்திற்கான சாதகமான காற்று உள்ளிட்ட பல காரணிகள் இப்பகுதியை அரசாங்கம் சுவீகரிப்பதற்கு காரணமாக அமைகின்றன.
இதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கையாக இப்பகுதிக்கான பி69 வீதியானது “ஏ” தர வீதியாக மாற்றப்பட்டு ஏ32 வீதியுடன் இணைக்கப்பட்டதோடு கேரதீவுப் பாலமும் அவசர அவசரமாக புனரமைக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியிலுள்ள அரச காணிகளையும் பொது மக்களின் காணிகளையும் இதற்காக சுவீகரிக்க அரசாங்கம் திட்டமிட்டு வருகின்றது.
ஏற்கனவே இரணைதீவு என்ற கிராமத்தின் ஆயிரக்கணக்கான மக்கள் இன்று வரை குடியேற்றப்படாமல் உள்ள நிலையில் இப்பகுதியிலும் மக்களது காணிகளை அரசாங்கம் திட்டமிட்ட வகையில் அபகரிக்க முயன்று வருகின்றது.
குறிப்பாக இவ்விமான நிலையத்திற்காக கல்முனையில் பாரிய கடற்படை தளமென்று அமைக்கப்பட்டுள்ளதோடு அப்பகுதியில் கடலை ஆழமாக்கி இரகசிய முகாம்களையும் கடற்படை அமைத்து வருகின்றது.
இது தவிர முல்லைத்தீவிலும் 55 டிவிசன் உள்ள பிரதேசகத்தில் இரணைமடுவிலும் பொதுமக்களது காணிகள் விமான நிலையங்களுக்காக அபகரிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் மக்களது வாழ் நிலங்களை பறித்து அவர்களை தெருவில் நிறுத்தும் செயற்பாட்டை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது என்றார்.

No comments:

Post a Comment