
யாழ்.குடநாட்டில் பவுண் பிஸ்கட்டுக்களை கொள்வனவு செய்து கொள்வதற்கு உரிய வசதிகளைச் செய்து கொடுக்காத அரசாங்கம், வெளிநாட்டிலிருந்து வருவோரிடம் பவுண் பிஸ்கட்டுக்களை வாங்கும் நகை வியாபரிகளை குறிவைத்துச் செயற்படுகின்றது. என யாழ். நகை வியாபாரிகள் சிலர் தெரிவிக்கின்றனர்.
பவுண் பிஸ்கட்டுக்களை விற்பனை செய்த வியாபாரிகள் இருவர் நேற்று யாழ்.நகரில் வைத்து இரகசியப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதனையடுத்து நகரிலிருந்த சில நகை வியாபார நிலையங்கள் மூடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் விடயம் குறித்து வர்த்தகர்கள் சிலருடன் தொடர்பு கொண்டுகேட்டபோதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் குறிப்பிடுகையில், பவுண் பிஸ்கட்டுக்களை விற்பனை செய்த குற்றத்திற்காக இரு வியாபாரிகள் யாழ்.நகரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பவுண் பிஸ்க்கட்டுக்களை விற்பனை செய்யக் கூடாது என்ற சட்டமொன்று உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் மத்திய வங்கிக் கூடாக பவுண் பிஸ்கட்டுக்கள் ஏனைய வங்கிகளுக்கு வழங்கப்பட்டு அவற்றிலிருந்து வியாபாரிகள் வாங்கிக் கொள்ளவேண்டும்.
ஆனால் இந்த நடைமுறை யாழ்ப்பாணத்தில் இல்லை, இதனை இதுவரை ஏற்படுத்திக் கொடுக்க யாரும் முயற்சிக்கவும் இல்லை. இந்த நிலையில் நகை செய்வதற்கான பவுணை வெளிநாடுகளிலிருந்து வருபவர்களிடமும், வெளிமாவட்ட வியாபாரிகளிடமுமே கொள்வனவு செய்து நகை செய்யப்படுகின்றது.
இந்த நிலையில் திடீரென வந்த இரகசியப் பொலிஸார் வர்த்தகர்கள் இருவரை கைது செய்து விசாரணைகளுக்காக கொண்டு சென்றிருக்கின்றனர். எனவே இது முறையற்றதொரு செயற்பாடாகும்,
அரசாங்கம் எமக்கான வசதியை இங்கு செய்து தரப்படாமையினாலேயே இந்த தவறு நடந்ததாகவும் நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment