Sunday, February 12, 2012

எரிபொருள் விலையை உயர்த்தி நடுத்தர மக்களின் மீது அணுகுண்டை வீசியுள்ளது அரசாங்கம்!- மனோ கணேசன்


மண்ணெண்ணெய் விலையை 50 விகிதத்தாலும், டீசல் விலையை 37 விகிதத்தாலும், பெட்ரோல் விலையை 9 விகிதத்தாலும் உயர்த்தி தோட்ட தொழிலாள மக்கள் மற்றும் விவசாயிகள், அரசு ஊழியர்கள், தனியார்துறை ஊழியர்கள், சிறு வர்த்தகர்கள், ஓய்வூதியர்கள் உள்ளிட்ட நடுத்தர மக்களின் தலைகள்  மீது அரசாங்கம் விலைவாசி அணுகுண்டை வீசியுள்ளது. 
உலக சந்தையில் விலை கூடினால், உள்நாட்டில் விலை கூட்ட முடியாது. அப்படி கூடுவதானால் அரசாங்கம் என்ற ஒன்று எதற்கு, என எதிர்கட்சியில் இருந்து கேட்ட விமல் வீரவன்ச உள்ளிட்ட வீரர்கள் இப்போது அரசாங்கத்தில் இருக்கிறார்கள்.
அந்த அட்டைக்கத்தி வீரர்கள் இன்று எங்கே? அதேபோல் தோட்ட தொழிலாளர்களுக்கு விமோசனம் வாங்கித் தருகிறேன் என்று சொல்லி இந்த அரசாங்கத்தில் அடைக்கலம் பெற்றுள்ள மலையகத்து மாவீரர்கள் இன்று எங்கே?
எரிபொருள் விலை ஏற்றம் என்பது சங்கிலி தொடர் விளைவுகளை ஏற்படுத்தும். இதன்மூலம் ஏனைய அனைத்து பொருட்களின் விலைகளும் உயர போகிறது. என எரிபொருள் விலையுயர்வு தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
வரலாற்றில் ஒருபோதும் இல்லாத அளவில் எரிபொருள் விலை இன்று உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசாங்கம் நடுத்தர மற்றும் தோட்ட மக்கள் தலைகளில் விலைவாசி அணுகுண்டை எந்தவித தயவுதாட்சண்யமும் இல்லாமல் வீசியுள்ளது.
பாண் சாப்பிட முடியாவிட்டால் கேக் சாப்பிடும்படி தோட்ட தொழிலாளர்களுக்கு இந்த அரசாங்கம் சொல்லுகிறதா? ஏற்கனவே வறுமையில் துயருறும் தோட்டத்தொழிலாளி இனிமேல் புல்லையும், கல்லையும்தான் சாப்பிட வேண்டுமா?
மண்ணெண்ணெய்க்கு பதில் தண்ணீரை ஊற்றி அடுப்பை பற்ற வைக்கும்படி தோட்டத் துறையை சார்ந்த பெண்களுக்கு இந்த அரசாங்கம் சொல்லுகிறதா? அல்லது அரசாங்கத்தில் அடைக்கலம் புகுந்துள்ள மலையகத்து மாவீரர்கள் சொல்லுகிறார்களா?
டீசல் விலை ஏற்றம் காரணமாக பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அழைத்து செல்லும் வாகன கட்டணம் உயர போகிறது. நடுத்தர மக்கள் இனி தங்கள் பிள்ளைகளை நடந்து சென்று பாடசாலைகளில் விட்டுவிட்டு வேலைத்தளங்களுக்கு போக வேண்டும்.
பஸ் கட்டணம் உயர போகிறது. இதனால் இனிமேல் தொழில்களுக்கு செல்லும் உழைக்கும் மக்கள் சைக்கிளில்தான் செல்ல வேண்டும்.
அரசாங்கத்தின் தவறான பொருளாதார கொள்கைகள் காரணமாகவும், அரசு நிர்வாகத்திற்கு உள்ளே நடைபெறும் ஊழல்- வீண் விரயம்- துஷ்பிரயோகம் ஆகியவை காரணமாகவும் இந்த பொருளாதார நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது.
இன்றைய நிலைமை ஒரு ஆரம்பம்தான். அடுத்த சில வாரங்களில் இன்னும் பல சுமைகளை இந்த அரசாங்கத்தின் தவறான ஆட்சி மக்கள் தலைகளில் சுமத்த இருக்கின்றது என்பதை அறிவிக்க விரும்புகிறேன்.
வெகு விரைவில் சமையல் எரிவாயு விலையும் உயர போகிறது. அது நடுத்தர குடும்ப தலைவிகளின் தலையில் இன்னொரு இடியாய் விழ போகிறது.
அதேபோல் விரைவில் இலங்கை நாணயம் மீண்டும் மதிப்பிறக்கம் செய்யப்பட போகிறது. அதன்போது இறக்குமதி பொருட்கள் அனைத்தும் மீண்டும் விலை ஏறும். 

No comments:

Post a Comment