Friday, January 20, 2012

கொழும்பு மாநகராட்சி தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!- மனோ கணேசன் - முஸாமில் கைச்சாத்து


கொழும்பு மாநகரசபையின் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனும், கொழும்பு மாநகரசபை மேயர் முஸாமிலும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்து இட்டுள்ளார்கள்.
நேற்று காலை புதிய ஆண்டுக்கான முதல் மாநகரசபை அமர்வு நடைபெறுவதற்கு சற்று முன்னர் மாநகரசபையில் அமைந்துள்ள மேயர் அலுவலகத்தில் இந்த கையெழுத்து இடும் நிகழ்வு நடைபெற்றது.
ஜனநாயக மக்கள் முன்னணிக்கு வாக்களித்த வாக்காளர்களின் நலன்களை முன்னிறுத்திய ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே ஜனநாயக மக்கள் முன்னணி, ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்குகின்றது.
மேயர் முசாம்மிலுடன், பிரதி மேயர் டைடஸ் பெரேரா மற்றும் கொழும்பு மாநகரசபையின் ஜமமு குழுத்தலைவர் கலாநிதி கங்கை வேணியன் தலைமையில் கட்சியின் அனைத்து மாநகரசபை உறுப்பினர்கள் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.
மாநகரசபையின் முன்பள்ளிகளில் நீண்ட காலமாக தமிழ் சிறார்களுக்கு புறக்கணிக்கப்பட்டுள்ள தமிழ் மொழி மூல கல்வி, மாநகரசபை நூலகங்களில் தமிழ் நூல்கள் மற்றும் அலுவலர்கள், மாநகரத்தில் தமிழ் மொழி பெயர் பலகைகள், கொழும்பு மாநகரசபை அலுவலகங்களில் தமிழ் பேசும் மக்கள் தமது தாய்மொழியில் சேவைகளை பெற்றுக்கொள்ளல், தமிழ் மொழி பாவனை மற்றும் நூலகங்கள் தொடர்பில் விசேட மக்கள் கண்காணிப்பு குழுக்களை அமைத்தல், மாநகரின் பின் தங்கிய பகுதிகளில் ஒவ்வொரு மாதமும் ‘கொழும்பு மக்கள் எழுச்சி இயக்கம்’ என்ற பெயரில் ஜமுமு நடத்த ஆரம்பித்துள்ள மாதாந்த சிரமதான இயக்கத்திற்கு மாநகரசபை இயந்திரத்தின் பூரண அனுசரணை, ஜமமு பிரேரிக்கும் பின் தங்கிய மற்றும் மாநகர் குடியிருப்பு பிரதேசங்களுக்கு கார்பெட் வீதிகள் அமைத்தல் ஆகிய விவகாரங்கள் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளன.
அதேவேளையில், அபிவிருத்தி நோக்கில் கொழும்பு மாநகரின் பின்தங்கிய பகுதிகளில் வாழும் மக்களின் அனுமதியை பெறாமல் வீடுகள் உடைக்கப்படாமை, கொழும்பு மாநகரில் அனைத்து இனத்தவருக்கும், மொழிகளுக்கும் சம அந்தஸ்து வழங்கப்படுவதன் மூலம் முழு நாட்டிற்கும் முன்னுதாரணமான நிர்வாகத்தை நடத்துவது என்பவை தொடர்பில் இணக்கப்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் கூறியதாவது,மாநகரசபை நிதிக்குழு தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பெரும்பான்மை பெற்றுகொண்டுள்ளது. இதற்கு காரணம் ஐக்கிய தேசிய கட்சியில் நிலவும் உட்கட்சி பூசல் மற்றும் கட்டுப்பாடு இன்மை ஆகும். அக்கட்சியை சேர்ந்த சிலர் கட்சிமாறி வாக்குகளை அளித்துள்ளனர்.
இவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுப்பது அக்கட்சி தலைமையின் வேலை. ஆனால் இது எந்த விதத்திலும் மேயரின் அதிகாரத்தை கட்டுப்படுத்தாது. நிதிக்குழு தொடர்பில் மேயர் முடிவு எடுக்கும் அதிகாரத்தை கொண்டுள்ளார்.
அதற்கான இறுதி அதிகாரம் மாநகரசபைக்கு உள்ளது. மாநகரசபையில் பெரும்பான்மையை உறுதிபடுத்த நாம் மேயர் முசாம்மிலுக்கு ஆதரவு வழங்குகிறோம். இந்நிலையில் எமது ஆதரவு கொழும்பு மாநகர சபையின் நிலையான ஆட்சிக்கு பெரும் காரணமாக அமைகிறது.
எமது இந்த ஆதரவு ஜனநாயக வழிமுறைகளுக்கு உட்பட்டுள்ள அதேவேளையில் எமக்கு வாக்களித்த தமிழ் மக்களின் நலன் சார்ந்ததாகும். எமக்கு வாக்களித்த தமிழ் மக்களின் நலன்களை நாம் கையெழுத்து இட்டுள்ள இந்த ஒப்பந்தம் உறுதி செய்கிறது.
நீண்ட காலமாக ஒதுக்கப்பட்டுள்ள கொழும்பு தமிழ் வாக்காளர்கள் மாநகரசபை இயந்திரம் மற்றும் சேவைகளுக்குள் உள்வாங்கப் பட வேண்டும். இது நடைபெறாவிட்டால் நாம் எமது ஆதரவை வாபஸ் வாங்குவோம்.

No comments:

Post a Comment