Monday, January 30, 2012

50வீதமான மாணவர்கள் பரீட்சை முடிவுக்காக காத்திருக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விண்ணப்பம் கோருகிறது

news
50 வீதமான மாணவர்கள் மீள்திருத்தத்திற்கு விண்ணப்பித்துள்ள நிலையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் நேற்றைய தினத்தில் இருந்து கோரப்பட்டுள்ளன.

2011/2012 கல்வி ஆண்டுக்கு மாணவர்களை  பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் காமினி சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க முடியும்.

இவ் விண்ணப்பபடிவத்தை தெளிவாக உரிய முறையில் பூர்த்தி செய்து மூன்று வார காலப்பகுதியினுள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்குக் கிடைக்கக் கூடிய வகையில் அனுப்பி வைக்க வேண்டும். அதற்குப் பின்னர் கிடைக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இம்முறை 23 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தெரிவானவர்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதமளவில் பல்கலைக்கழகங்கங்களுக்கு அனுமதிக்கப்படுவர்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் படி மாவட்ட நிலை அடிப்படையில் பல குளறுபடிகள் காணப்பட்டன. இதனால் மாணவர்கள் மத்தியில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

இதனையடுத்து விடைத்தாள் மீள்திருத்தத்திற்கு என்று சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.  பரீட்சைக்கு தோற்றியவர்களில் 50% மாணவர்கள் மீள்திருத்தத்திற்கு விண்ணப்பித்து விட்டு பெறுபேற்றிற்காக காத்திருக்கின்றனர். ஆனால் இவர்களுக்கான முடிவுகளை பரீட்சைகள் திணைக்களம் இதுவரை அறிவிக்கவில்லை.

இந் நிலையில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுவதும், அனுப்புவதற்கான திகதியை வரையறை செய்வது என்பதும் எவ்வாறு சாத்தியமாகும், லாபம் உழைக்கும் நோக்குடன் பரீட்சைகள் திணைக்களம் செயற்படுகின்றதா என்ற ஐயப்பாடும் பலர் மத்தியிலும் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment