Tuesday, January 3, 2012

இந்த ஆண்டின் இறுதிக்குள் கிளிநொச்சிக்கு ரயில் சேவை! 2013ல் யாழ். வரை!- ரயில்வே திணைக்களம்


இந்த ஆண்டின் இறுதிக்குள் கிளிநொச்சி வரை ரயில் சேவையை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் ரயில்வே திணைக்களம் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும், அதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளதாகவும் அத் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
கொழும்பில் இருந்து ஓமந்தை வரை ரயில் சேவை தற்போது சீராக இடம்பெற்று வருகின்றது.
ஒழுங்கான நேர அட்டவணையின் கீழ் பயணிகள் ரயில்கள், பொருள்களை ஏற்றி இறக்கும் ரயில்கள் என்பன சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்தச் சேவைகளுக்கு மேலும் புதிய ரயில் எஞ்சின்கள், பெட்டிகள் என்பனவற்றை இணைத்து சேவையை மேலும் விரிவு படுத்துவதற்கான ஆலோசனைகளிலும் ரயில்வே திணைக்களம் ஈடுபட்டுவருகிறது.
தற்போது ஓமந்தை வரை நடைபெறும் ரயில்சேவையை இந்த ஆண்டின் இறுதிக்குள் கிளிநொச்சி வரை நீடிப்பதற்கான முயற்சிகளில் ரயில்வே திணைக்களம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
வடக்குக்கும் தெற்குக்கும் இடையிலான ரயில் போக்குவரத்து சேவைகளை மேலும் மேம்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அண்மையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் தெரிவித்திருந்தார். இதற்கமையவே ரயில்வே திணைக்களத்தின் அதிகாரிகள் அந்தப் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளனர்.

ஆண்டின் இறுதிக்குள் கிளிநொச்சி வரை ரயில் சேவையை நீடிக்கப்படும் என்ற இலக்குடன் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அது சில சமயம் முடியாமல் போனால் மாங்குளம் வரையாவது அந்தசேவையை நீடிப்பது என ரயில்வே திணைக்களம் தீர்மானத்திருக்கிறது.
எவ்வாறாயினும் 2013 ஆம் ஆண்டு நடுப்பகுதிக்குள் யாழ்ப்பாணம் வரை ரயில் சேவைரைய நடத்துவதற்கும் அதன் பின்னார் காங்கேசன்துறை வரை அதனை நீடிப்பதற்கும் ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
இதற்காக ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. பரந்தன் ரயில் நிலையத்தில் இருந்து மாங்குளம் வரையான ரயில் பாதை அளவீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment