Friday, January 6, 2012

மட்டு. வாகரை இ.போ.சபை ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்


மட்டக்களப்பு வாகரை இலங்கை இ.போ.ச. ஊழியர்கள், பழுதடைந்துள்ள பஸ் வண்டிகளை திருத்தம் செய்து தரும்படியும், சாலை நிர்வாகத்தை சீர் செய்து தரும்படியும், சாலை நிர்வாக முகாமையாளரை இடமாற்றம் செய்து தரும்படியும், வெள்ளிக்கிழமை காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன், இரண்டு மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள ஊழியர்களுக்கான சம்பளப்பணத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தெரிவித்து மேற்படி கோரிக்கைகளையும் முன்வைத்து சுலோகங்களை கையில் ஏந்தி கோசங்களை எழுப்பியவாறு வாகரை பிரதான வீதியில் போராட்டத்தை நடத்தினர்.
இதனால் அன்றைய வாகரை, வாழைச்சேனை, மட்டக்களப்பிற்க்கான போக்குவரத்து சேவையில் பாதிப்புக்கள் ஏற்பட்டன. இதேவேளை மறு அறிவித்தல் வரும் வரையில் இப்போராட்டம் தொடருமென்றும் அதுவரையில் தங்களது பஸ் சேவை இடம்பெறமாட்டாது என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
அண்மையில் மேற்படி சாலையின் வளங்கள் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் முகமாக விசேட திட்டங்கள் தயாரிக்கபட்டு பிரதேச செயலாளரின் அனுமதிக்கு அமைய யூ.எஸ். ஏயிட் நிறுவனத்தினால் 9 மில்லியன் ருபா பணம் வழங்கப்பட்டது. உள்ளுர் சேவையை விரிவுபடுத்தும் முகமாக வழங்கப்பட்ட இவ் நிதியுதவினால் மேற்கொள்ளப்ட்ட சாலை அபிவிருத்தி நிகழ்விக்காக போக்குவரத்து பிரதி அமைச்சர், மாகான சபை உறுப்பினர்கள் மற்றும் சாலை உயரதிகாரிகள் வைபவ ரீதியாக பங்கு பற்றியிருந்தனர்.
மேற்படி நிகழ்வு இடம்பெற்று இரண்டு வாரம் கடந்த நிலையில் பழுது பார்க்கப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்ட பஸ்கள் ஒழுங்காக போக்குவரத்து சேவையை மேற்கொள்ள முடியாமல் மீண்டும் முன்னைய நிலமைக்கு தள்ளப்பட்டு பஸ்கள் மீண்டும் சாலையில் தரித்து நிறுத்தப்பட்டன.
உயரதிகாரிகளுக்கும் கீழ்மட்ட ஊழியர்களுக்குமிடையில் அடிக்கடி இதனால் கருத்து முரண்பாடுகள் இடம்பெற்றன. அதனால் சில விடயங்களை மறைப்பதற்;காகவும். நிர்வாக குழப்ப நிலமையை சீர்செய்யும் முகமாக சாலையானது வாழைச்சேனை இலங்கை போக்குவரத்து சபை சாலை இயங்கும் இடத்திற்கு இடமாற்றத்தினை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்டது.
இச் செயற்பாட்டினை ஏற்றுக்கொள்ளாத பிரதேச மக்கள் மேற்கொண்ட நடவடிக்கையினால் மீண்டும் சாலையானது வாகரைக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து வழமை போன்று போக்குவரத்து சேவைகள் இடம்பெற்றாலும் சாலை முகாமையாளர் கடமைக்கு வாகரைக்கு சமூகமளிக்காததினால் நிர்வாகத்தை கொண்டு நடத்துவதில் சிக்கல் நிலமை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் சாலையில் மேற்படி நிறுவனத்தினால் வழங்கப்பட்ட பொருட்கள் சிலவும் களவு போயுள்ளதாகவும், ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்து அப்பகுதியில் துண்டுப் பிரசுரங்கள் பல சமுக அமைப்பொன்றினால் வெளியிடப்பட்டன.

No comments:

Post a Comment