Friday, January 6, 2012

கருணா கனடா வரவில்லை! வெறும் கற்பனைச் செய்தி என்கிறது கனடா


கருணா கனடாவிற்கு இரகசிய விஐயம், முக்கிய சந்திப்புக்களை மேற்கொண்டார்! எனச் சமீப நாட்களாக வெளிவந்த செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை, வெறும் கற்பனைச் செய்தி என்றார் பெயர் குறிப்பிடவிரும்பாத கனடிய அதிகாரி ஒருவர். 
இச்செய்திகள் குறித்து இச்செய்தியாளர் வினவியபோது அவர் ஆச்சரியமும், வியப்பும் வெளியிட்டார். யார்? எவ்வாறு இச்செய்திகள் வெளியாகின என விபரமாக கேட்டறிந்தார். யாரும் இது குறித்து தம்மிடம் இதுவரை வினவவில்லை என்று மேலும் தெரிவித்தார். இவ்வாறு செய்தி வெளியிடுவோர் அது குறித்து ஏன் சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டறியாது செய்தி வெளியிடுகின்றனர் எனக் கவலை வெளியிட்டார்.
2007இல் கருணா பிரித்தானியா சென்றபோது தவறான இராஐதந்திர கடவைச்சீட்டுடன் சென்றதுபோல் கனடாவரும் சாத்தியக்கூறுகள் குறித்து கேட்டபோது அது குறித்து தாம் அதீத கவனத்துடன் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். அத்துடன் மக்கள் இது குறித்த தகவல்களை அரசிற்கு கனடியர்களாக வழங்கலாம் என்றார். கனடாவின் கனடியர்களின் பாதுகாப்பில் அனைவருக்கும் பங்குண்டு என்றார்.
அத்துடன் வெளியிடப்பட்ட செய்திகளில் கருணா கடந்த (டிசம்பர்) 27ம் திகதி ஐனாதிபதியின் நெருங்கிய ஆலோசகர் ஒருவருடன் இணைந்து கனடா மேற்கொண்ட பயணத்தின் போது முக்கிய அரச சந்திப்புக்களை கனடாவில் மேற்கொண்டார் எனத் தெரிவிக்கப்பட்ட செய்தி குறித்து கனடிய வெளிவிவகாரத்துறை அமைச்சு அதிகாரி ஒருவரிடம் வினவியபோது அவர் பலமாக சிரித்துக் கொண்டார்.
பண்டிகை காலத்தில் அனைத்தும் பூட்டியிருக்கும் நேரத்தில் அனைவரும் விடுப்பில் இருக்கும் காலத்தில் முக்கிய சந்திப்பா? ஏன்றார். என்னை ஒன்றும் கொமடிப் பீசாக நீங்கள் கருதவில்லை தானே என்று அவர் கேட்பது போல் இருந்தது அவர் கேள்வி.
கருணா டிசம்பர் 31ஆம் நாள் இரவு கொழும்பில் நட்சத்திர விடுதி ஒன்றில் நடைபெற்ற புத்தாண்டு களியாட்ட நிகழ்வில் கலந்து கொண்டு ஆடிக்களித்த படங்கள் பல இணையங்களில் வெளியாகியுள்ளன.
இவ்வாரம் மட்டக்களப்பில் கருணா கலந்து கொண்ட நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. இந்நிலையில் ஏன் இவ்வாறான செய்தி தமிழர்களை குழப்பும் வகையில் வெளியிடப்பட்டது எனக் கேள்வி எழுப்பினார் கனடாவில் உள்ள மூத்த தமிழ் செயற்பாட்டாளர்.
அதேவேளை கருணாவின் இரகசிய பயணம்: கனடிய அரசிடம் விளக்கம் கோரும்படி பாராளுமன்ற உறுப்பினரிடம் தமிழர்கள் வேண்டுகோள். கனடா பாராளுமன்ற கூட்டங்கள் தற்போது நடைபெறுவதால் கனடிய குடிவரவு அமைச்சரிடம் கேள்வி நேரத்தில் பாராளுமன்றத்தில் கேள்விகளைக் கேட்டு விளக்கம் கோருமாறு தமிழர்கள் வேண்டுகோள் என வெளிவந்த செய்தி குறித்து கனடிய ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினருடம் இச்செய்தியாளர் தொடர்பு கொண்டு கேட்டபோது அவரும் பெரிதாக சிரித்துக் கொண்டார்.
கனடாவின் பாராளுமன்றம் சனவரி 30வரை பண்டிகைக்கால விடுமுறையில் உள்ளது. யாரிடம் யார் தற்போது கேள்வி கேட்பது என்றார். பல பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகங்களே வரும் 9ஆம் திகதி வரை மூடப்பட்டுள்ளன என்றார் மேலும். செய்தி வெளியிட்டோர் ஒரு தெளிவான நோக்கத்திலேயே செய்தி வெளியிட்டுள்ளனர், அதாவது கனடியத் தமிழர்களை குழப்புவது ஆனால் நன்கு ஆராயாமல் செய்தி வெளியிட்டு நன்கு மாட்டிக் கொண்டுள்ளனர் என்பது மட்டும் நன்கு புலனாகிறது.
மூன்றாவது கனடிய எதிர்கட்சியான விபரல் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஐpம் கரிஐpயானிசிடமே தமிழர்கள் கேள்வி கேட்குமாறு வேண்டுகோள் விடுத்தார்கள் என செய்தி ஒன்று வெளியான நிலையில் அது குறித்து அவரிடம் அறிய முற்பட்டபோது அவரிடம் இருந்து ஒரு மின்னஞ்சல் கிடைத்தது அதில் அவர் கனடிய வெளிவிவகார அமைச்சருக்கு தாம் அனுப்பிய மின்அஞ்சல் ஒன்றை இணைத்திருந்தார்.
அதில் கரிசனையுள்ள மதிக்கத்தக்க தமிழர் ஒருவர் தனக்கு அனுப்பிவைத்த தகவலை உங்கள் பார்வைக்கு அனுப்பி வைக்கிறேன் எனக் குறிப்பிடப்பட்டு அம் மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருந்தது. தமிழர்கள் என்ற செய்தி போர்வைக்குள் ஒழிந்து கொண்டுள்ள அந்த தமிழர் யார் என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை.
ராஐபக்ச சில நாடுகளின் துணையுடன் கனடாவிற்கு நெருக்குதல்; கொடுத்து கருணாவிற்கு கனடாவில் அனுமதி பெற்றார் என்ற செய்தி குறித்து வினாவிய போது கனடிய அரசமட்டத்தில் பலரும் விசனம் வெளியிட்டனர். கனடாவின் பாதுகாப்பை யாருக்காகவும், யாருடைய நெருக்குதலுக்கு பணிந்தும் கனடா அசட்டை செய்யாது என்றனர்.
கனடா – சிறீலங்கா மோதல் வலுத்துவரும் நிலையில் இவ்வாறான செய்திகள் மேலும் வெளியிடப்படுவதை தொடர்ந்தும் எதிர்பார்க்கலாம். தமிழர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவது, கனடிய அரசு – கனடியத்தமிழர் உறவைச் சிதைப்பது என இவை தொடரலாம். தமிழர்கள் வெறும் உணர்வுகளுக்கு மட்டும் இடம் கொடாமல் ஆழமாக சிந்தித்து நகரும் காலம் இது என்றார் மூத்த இன உணர்வாளர் ஒருவர்.

No comments:

Post a Comment