Friday, January 20, 2012

செனட் சபை அமைப்பதன் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது: சட்டத்தரணி தயாசிறி


செனட் சபை ஒன்றை அமைப்பதன் மூலம் நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என இலங்கையின் சிரேஸ்ட சட்டத்தரணி கொமின் தயாசிறி தெரிவித்துள்ளார்.
தற்காலிக அடிப்படையில் செனட் சபையை அமைக்க முடியுமே தவிர நிரந்தரமான தீர்வுத் திட்டமாக செனட் சபை அமையாது என கொமின் தயாசிறி குறிப்பிட்டுள்ளார்.
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமாயின் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும்.
காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படாது என்றும், 13ம் திருத்தச் சட்டத்திற்கு அப்பாலான தீர்வுத் திட்டம் முன்வைக்கப்படும் எனவும் அரசாங்கம் முன்னுக்கு பின் முரணான நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி வருகின்றது.
செனட் சபை அமைப்பதன் மூலம் மற்றுமொரு குழு அரசியல்வாதிகளின் அதிகாரம் வலுப்பெறுமே தவிர. ஆக்கபூர்வமான தீர்வாக அமையாது என சட்டத்தரணி கொமின் தயாசிறி சுட்டிக்காட்டியுள்ளார்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் உள்ளமையால், அரசாங்கம் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை ரத்து செய்ய எவரையும் எதிர்பார்க்க வேண்டிய அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment