Tuesday, January 3, 2012

பாரத லக்ஸ்மன் கொலைச் சந்தேக நபர்கள் இன்று அடையாள அணி வகுப்பில்


கொலன்னாவ துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட மூவர் தொடர்பில், பத்து சந்தேகநபர்கள் இன்று அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்டனர்.
இக்கொலைச் சம்பவம் தொடர்பாக கைதான 20 சந்தேக நபர்களில் 19 பேர் நீர்கொழும்பு மேலதிக நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன் போதே குறித்த சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சந்தேகநபர் என்ற நிலையில் இருந்து துமிந்த சில்வாவை விடுவிக்குமாறு, அவர் சந்தேக நபர் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த தீர்மானத்தை தன்னால் மாற்ற முடியாது என்றும் , அதனை ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் , மேல் நீதிமன்றத்தின் தயவை நாடுமாறும் சட்டத்தரணிகளுக்கு நீதவான் அறிவித்துள்ளார்.
விசாரணைகளின் போது சாட்சியாளர்களிடம் இருந்து பெற்றுக் கொண்ட வாக்கு மூலங்களை ஆராய்ந்த பின்னரே துமிந்த சில்வாவை சந்தேக நபராக தாம் பெயரிட்டதாகவும் நீதவான் இதன் போது தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் துமிந்த சில்வாவை கைது செய்வதற்காக , சர்வதேச பொலிஸாருக்கு அறிவிக்குமாறு சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்தனர்.
துமிந்த சில்வாவை கைதுசெய்ய முடியாதென குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் , இதுவரை நீதிமன்றத்தில் தெரிவிக்கவில்லை என்பதால் சர்வதேச பொலிஸாருக்கு அறிவிக்க முடியாதென நீதவான் தெரிவித்துள்ளார்.
இருதரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதவான் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை அனைத்து சந்தேகநபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment