Saturday, January 14, 2012

மாணவர்களுக்கு புலிகள் முத்திரை குத்தி அரசாங்கம் தீய செயலில் இறங்கியுள்ளது : ஐ.தே.க குற்றச்சாட்டு


தமிழீழ விடுதலைப் புலி முத்திரை குத்தி மாணவர் போராட்டங்களை ஒடுக்கும் முயற்சியானது கண்டிக்கப்பட வேண்டிடியது என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக மாணவர்கள் மீது புலி முத்திரை குத்துவதன் மூலம் அரசாங்கத்தின் வங்குரோத்து நிலைமையை வெளிப்பட்டுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதனை ஒரு ஒடுக்குமுறையாகவே நோக்கப்பட வேண்டும். சுதந்திரக் கல்வி, பல்கலைக்கழகக் கட்டமைப்பு மற்றும் கல்வி உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. உரிமைகளுக்காக போராடி வரும் பல்கலைக்கழக மாணவர்களை தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களாக அடையாளப்படுத்துவது கண்டிக்கப்பட வேண்டியது.
பல்கலைக்கழக மாணவ மாணவியர் நீண்ட காலமாக எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படாமையினால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். மாணவர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றாது அவர்களது போராட்டங்களை ஒடுக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
போர் மற்றும் புலி என்ற போர்வையில் அரசாங்கம் சகல தீய செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றது.
அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு வாக்களிக்குமாறு கையொப்பத்துடன் கூடிய பத்திரிகை விளம்பரம் ஒன்றை வெளியிட்ட நபர் களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக செயற்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் பல்கலைக்கழகங்களில் எவ்வளவு தூரம் அரசியல் அதிகாரம் காணப்படுகின்றது என்பதனை உணர முடியும். பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சினை மற்றும் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்று அமைக்கப்பட வேண்டுமென அகில விராஜ் காரியவசம் கோரியுள்ளார்.

No comments:

Post a Comment