Monday, January 30, 2012

கடனட்டை மோசடியில் ஈடுபட்ட இலங்கை அகதி உள்ளிட்ட இருவர் திருச்சியில் கைது


இந்திய - திருச்சிராப்பள்ளி பகுதியில் கடனட்டை மோசடியில் ஈடுபட்ட இலங்கை அகதி ஒருவர் உட்பட இருவர் திருச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சிராப்பள்ளி மத்திய பஸ் நிலையம் அருகே ஒரு வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று அதிகாலை 3.30 மணிக்கு இந்த மையத்துக்குள் மர்ம மனிதர்கள் 2 பேர் புகுந்தனர்.
அவர்கள் நீண்டநேரமாக வெளியே வராமல் பணம் எடுத்தனர். அதன்பிறகு சிறிது நேரத்தில் மீண்டும், மீண்டும் பணம் எடுத்துக் கொண்டே இருந்தனர்.
இதனால் சந்தேகம் அடைந்த ஏ.டி.எம். காவலாளி இது பற்றி பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார். உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பொலிஸார், அந்த மர்ம மனிதர்களை மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள், கருமண்டபம் ஐ.ஓ.பி.நகரை சேர்ந்த கணேசன் (வயது 18), கருமண்டபம் வசந்தநகரை சேர்ந்த ராகவன் (வயது 30) என்பது தெரியவந்தது.
அவர்களிடம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் ரொக்கப்பணம், 1 தங்க சங்கிலி, 1 பிரேஸ்லெட், 4 மோதிரங்கள் மற்றும் 14 வெளிநாட்டு போலி ஏ.டி.எம்.கார்டுகளும் இருந்தன, அவற்றை பொலிஸார் கைப்பற்றினார்கள்.
அவர்களிடம் இருந்த ரொக்க பணம் அந்த ஏ.டி.எம்.மையத்தில் இருந்து எடுத்த பணம் ஆகும். இதுபோன்று வேறு ஏ.டி.எம்.களிலும் போலி ஏ.டி.எம் கார்டுகள் மூலம் லட்சக்கணக்கில் இவர்கள் பணம் எடுத்து இருப்பார்கள் என்று தெரிகிறது.
இது தவிர அவர்கள் பயன்படுத்திய ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்ட 2 பேரில் ராகவன் இலங்கை அகதி ஆவார். இவருடைய உறவினர்கள் லண்டன், அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் வசிப்பதாகவும் தெரிகிறது.
பிடிபட்டவர்கள் கூறுகையில், எங்களுடைய உறவினர்கள் வெளிநாட்டில் இருக்கிறார்கள், அவர்களுடைய வங்கி கணக்கில் இருந்து எங்கள் வீட்டு செலவுக்கு பணம் எடுத்தோம் என்றனர்.
இருப்பினும் அவர்களிடம் 14 ஏ.டி.எம். கார்டுகள் எப்படி வந்தன என்று பொலிஸார் துருவி, துருவி விசாரித்தனர். அப்போது கே.கே.நகரில் உறவினர் ஒருவர் தங்கி இருப்பதாக கூறினர்.
இதையடுத்து பொலிஸார் அந்த நபரை தேடி கே.கே.நகர் சென்றனர். ஆனால் அந்த நபர் அதற்குள் வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது.
இதனை தொடர்ந்து இந்த கொள்ளையில் யார்? யாருக்கு தொடர்பு உள்ளது. 14 போலி வெளிநாட்டு ஏ.டி.எம். கார்டுகள் கிடைத்தது எப்படி? என்று பிடிபட்ட 2 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த கொள்ளையில் தொடர்புடைய மேலும் 4 பேரை பொலிஸார் தேடி வருகிறார்கள்.

No comments:

Post a Comment