Monday, January 2, 2012

குற்றச் செயல்களைத் தடுப்பதற்கு பொலிஸாரால் மட்டும் முடியாது; பொதுமக்களை உதவிக்கு அழைக்கிறார் பொலிஸ் பரிசோதகர் சமன் சிகேரா


குற்றச் செயல்களைத் தடுப்பதற்கு பொலிஸாரால் மட்டும் முடியாது; பொதுமக்களை உதவிக்கு அழைக்கிறார் பொலிஸ் பரிசோதகர் சமன் சிகேரா
news
கிராமங்களில் நடைபெறும் குற்றச் செயல்களை தடுப்பதற்கு பொலிஸாரால் மட்டும் முடியாது. அதற்குப் பொதுமக்களும் இணைந்து செயற்பட வேண்டும்.

இன்று கிராம மட்டங்களில் உள்ள இளைஞர்களைத் திரட்டி அவர்களின் பாதுகாப்பு கிராமங்களின் அபிவிருத்தி சமூக குற்றச் செயல்களுக்குத் தீர்வு என்பவற்றை எந்தவித அரசியல் கலப்புமின்றிச் செயற்படுத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்தார் யாழ்.பிரதான தலைமைப் பொலிஸ் பரிசோதகர் சமன்சிகேரா.

ஒவ்வொரு கிராம மட்டங்களிலும் சிவில் பாதுகாப்புக் குழுவில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு இலங்கையைப் பாதுகாப்போம் அடையாளம் எனும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

கிராமங்களில் ஏற்படும் சிறுசிறு பிரச்சினைகள் சமூக விரோதச் செயல்கள் ஆகியவற்றை சிவில் பாதுகாப்பு குழுவுடன் ஏனைய பொதுமக்களும் இணைந்து செயற்பட்டு அதற்கென தெரிவு செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தருடன் கலந்துரையாடி தீர்வுகாண வேண்டும்.

மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்த வேண்டும். சிறுசிறு பிரச்சினைகளை இல்லாது ஒழிக்க வேண்டும். அனைத்து கிராம மக்களும் சுமுகமான வாழ்வை வாழ வேண்டும்.

சிவில் பாதுகாப்புக்கென வழங்கப்பட்ட அடையாள அட்டை மிகவும் பெறுமதி வாய்ந்தது. இந்த அடையாள அட்டையை வைத்திருக்கும் கிராம மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இந்த அடையாள அட்டையை தங்களுடைய கிராம சேவைப் பிரிவில் உள்ள தேவைகளுக்குப் பயன்படுத்த வேண்டும். மக்களும் ஒத்துழைப்புடன் செயற்படும் போது சமூக விரோதச் செயல்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
யாழ்ப்பாணத்தில் தற்போது அதிகளவான குற்றச் செயல்கள் நடைபெற்று வருகின்றன. அவற்றை ஆராய்ந்து தீர்வு கண்டு நல்லதோர் சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும். எனத் தெரிவித்தார்.

பொலிஸ் நிலையத்தை தலைமையகமாகக் கொண்ட சிவில் குழு 56 கிராம சேவகர் பிரிவில் உள்ள 580 பேருக்கு அடையாள அட்டை வழங்கியுள்ளது.

சிவில் பாதுகாப்புக்கு அங்கம் வகிக்கும் ஒவ்வொரு கிராமங்களிலும் 25 பேர் தெரிவு செய்யப்பட்டனர். அவர்களுடன் ஒரு சார்ஜண்ட் 4 பொலிஸ் உத்தியோகத்தர்களும் உள்ளடங்குகின்றனர்.

இந்த நிகழ்வில் யாழ்.பொலிஸ் நிலையக் பிரதிப் பொலிஸ் பரிசோதகர் குணசேகர, சிவில் பாதுகாப்பு மக்கள் தொடர்பாடல் உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஜெயந்த, சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், 56 கிராம உத்தியோகத்தர்கள், மதத் தலைவர்கள், ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர்கள், சிவில் பாதுகாப்புக் குழுவின் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 

No comments:

Post a Comment