Tuesday, January 3, 2012

வன்னிக்குள் நுழைவோர் மீது இராணுவத்தினரின் கெடுபிடிகள்!


ஈழத்தமிழரின் தாயகமான வன்னிப் பிரதேசம் அவர்களுக்கு அந்நியமாகிவிட்டது. வன்னி என்று அழைக்கப்படும் பளை கிளிநொச்சி தொட்டு முல்லைத்தீவு வரையான பரந்த நிலப்பரப்புக்குள் நுளைவது மிகவும் கடினம். இராணுவத்தின் அனுமதி இல்லாமல் ஒருவராலும் அங்கு செல்ல முடியாது.
உறவினர்களைப் பார்ப்பதற்கு யாழ்குடா நாட்டில் இருந்து போவோர் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். இளைஞர்களானால் கடும் விசாரணைக்கு உட்படுத்தப் படுகின்றனர். பிறிதோர் நாட்டிற்குள் வீசா அனுமதி பெற்றுச் செல்லவதைப் போல் வன்னிக்குள் தடை தாண்டிச் செல்லும் நிலவரம் காணப்படுகிறது.
பிறநாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள் தமது உறவுகளைப் பார்ப்பதற்கு மட்டு- அம்பாறை, திருகோணமலை, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளுக்குச் சென்றால் அவர்கள் மீது இராணுவப் புலனாய்வாளர்கள் விசேட கவனம் செலுத்துகிறார்கள். வன்னிக்கு சென்றாலும் அப்படித் தான்.
தங்குமிடம், வந்த காரணம், உறவினர்கள் யார், குடியுரிமை பெற்ற நாடு போன்ற விசாரணைகள் நடத்தப்படுகிறது.
குடியுரிமை பெற்றவர்களின் குடும்பத்தில் மாவீரர்கள் போராளிகள் இருக்கிறார்களா என்ற கோணத்திலும் விசாரணைகள் நடத்தப்படுகின்றன. இந்தத் தொல்லை போதாதென்று உறவினர்களும் விசாரணை செய்யப்படுகிறார்கள். இதனால் வெளி நாட்டு உறவுகள் வருகை அருகிவிட்டது.
வன்னியை ஒரு மூடப்பட்ட பிரதேசமாக இராணுவ ஆட்சியாளர்கள் அமைத்துள்ளனர். இராணுவத்தின் அனுமதி இல்லாமல் ஒருவரும் வன்னிக்கு செல்ல முடியாத நிலை இடம் பெறுகிறது. வன்னியில் மீள் குடியேற்றம் செய்யப்பட்டவர்கள் மிகவும் இக்கட்டான சூழலில் வாழ்கின்றனர்.
அவர்கள் சொந்த அலுவல்களுக்கு யாழ்ப்பாணம், மன்னார், போன்ற பகுதிகளுக்குச் செல்ல முடியாது. அப்படிச் செல்ல அனுமதிக்கப்பட்டால் திரும்பும் போது மீண்டுமொரு விசாரணைக்கு முகங் கொடுக்க வேண்டும்.
அண்மையில் வன்னியில் கொட்டிய கடும் மழையும் புயலும்; வன்னி மக்களை வாட்டி எடுத்துள்ளது. சிவில் நிர்வாகம் பொய்த்து விட்டதால் மக்கள் துயரம் நிவாரணம் இல்லாத படியால் மோசம் அடைந்து விட்டது.
தொண்டர் அமைப்புக்கள் வன்னி மக்களுக்கு உதவிகளைக் கொண்டு செல்ல முடியவில்லை. இராணுவத்தின் அனுமதி கிடைக்கவில்லை. தொற்று நோய்கள் பரவுகின்றன, தடுப்பூசி, சுத்தமான குடிநீர், ஆரோக்கியமான உணவு போன்றவற்றை வழங்கும் வசதி செய்யப்படவில்லை.
வன்னி ஒரு திறந்த வெளிச் சிறைச்சாலை என்று சொன்னால் மிகையல்ல வன்னியில் நடக்கும் அத்து மீறல்களையும் இராணுவக் கெடுபிடிகளையும் வெளியுலகிற்குக் கொண்டு செல்லும் பணி அவசியம் தேவைப்படுகிறது.

No comments:

Post a Comment