Monday, January 9, 2012

முருங்கனிலும் சிங்கள மக்கள் குடியேற்றம்! கைவிடுமாறு சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை


முருங்கன் 17ஆம் கட்டை நரிக்காட்டில் 45 சிங்களக் குடும்பத்தினர் குடியேற்றப்பட்டுள்ளனர். இவர்களுக்கான காணி அளவீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனைக் கைவிடுமாறு சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட நரிக்காடு கிராமம் முன்பு காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலைக்கான மூலப்பொருள் வெட்டியெடுக்கப்படும் பிரதேசமாகத் திகழ்ந்தது. இப்பொழுது இந்த இடத்தில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டுள்ளனர். இதனைக் கைவிடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
காங்கேசன்துறையில் முன்பு இந்நாட்டில் மட்டுமன்றி சர்வதேச மட்டத்திலும் பிரசித்தி பெற்ற சீமெந்துத் தொழிற்சாலை இயங்கிவந்தது. யுத்த காலத்தில் சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட ஏனைய பிரதேசங்களில் பல கட்டடங்கள் இடியாமல் இருந்ததற்கு இத்தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட சீமெந்தே காரணம் என்று வல்லுனர்கள் சொல்கின்றனர்.
மீண்டும் இத்தொழிற்சாலை இயங்க உள்ள நிலையில், அத்தொழிற்சாலைக்கான மூலப்பொருட்களில் ஒன்றான களிமண் வளமிக்க மன்னார் மாவட்டம் முருங்கன் பிரதேசத்தில் அமைந்துள்ள நரிக்காடு கிராமத்தில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கென்று 45 சிங்களக் குடும்பத்தினர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான தற்காலிக வீடுகளும் வழங்கப்பட்டுள்ளன. இம்மக்களுக்கு அதியுயர்மட்ட உத்தரவின்படி நிரந்தரவீடு, காணி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட ஏனைய வசதிகளும் செய்துகொடுக்கப்படுகின்றன.
இன்று காணி அளவீடும் நடைபெறுகின்றது. இந்தப் பகுதியில் எந்தக்காலத்திலும் சிங்கள மக்கள் குடியிருக்கவில்லை என்று இப்பகுதியில் காலகாலமாகக் குடியிருந்துவரும் மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே இவ்வித முயற்சிகள் எந்தவிதத்திலும் இந்நாட்டில் நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்தாது என்பதை அரசு புரிந்துகொண்டு, உடனடியாக இம்முயற்சியைக் கைவிட வேண்டும்.
அவசர அவசரமாகத் தமிழ்ப் பிரதேசங்களில் சிங்கள மக்களைக் குடியேற்றுவதற்கு முயற்சிக்கும் அரசு, யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த இடத்தில் மீள்குடியேற்றம் செய்வதில் மெத்தனப்போக்கையே கடைப்பிடிக்கின்றது.
இடம் பெயர்ந்து மீள்குடியேறிய மக்களுக்கான வீட்டுத்திட்டங்கள் ஒருவீதம்கூட பூர்த்தியாகாத நிலையில், மன்னார் மடுவீதியிலும் முருங்கன் நரிக்காட்டிலும் புதிதாகக் குடியேறிய சிங்கள மக்களுக்கு நிரந்தர வீடுகளும், தற்காலிக வீடுகளும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், மன்னாரில் முள்ளிக்குளம் மக்கள் நான்கு வருடங்களுக்கும் மேலாக தமது இருப்பிடத்ததைவிட்டு விரட்டியக்கப்பட்டு இன்றுவரை மீள்குடியேற அனுமதிக்கப்படவில்லை. இதேபோல் முல்லைத்தீவில் திருமுறிகண்டி, புதுக்குடியிருப்பு, முள்ளிவாயக்கால் மற்றும் கேப்பாபுலவு போன்ற பிரதேசங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களும் இன்னமும் மீள்குடியேற அனுமதிக்காத நிலையில், எமது பகுதியுடன் சிறிதும் தொடர்பற்ற சிங்கள மக்களைக் குடியமர்த்த முயற்சிப்பதை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
மன்னார் மாவட்டத்தில் கஜூபாம், முருங்கன், மடுவீதி, வவுனியாவில் கொக்கச்சான்குளம் போன்ற இடங்களில் சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெற்றுவரும் நிலையில் முல்லைத்தீவில் புதிதாக ஒரு பிரதேச செயலகமும் உருவாக்கப்பட்டுள்ளமையும் இதனைப் போன்றே கிழக்கு மாகாணத்தில் பல்வேறு இடங்களில் சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளமையும் இங்கு கவனிக்கத்தக்கது.
உண்மைகளைச் சுட்டிக்காட்டுவது சிலருக்குத் தாங்க முடியாமல் உள்ளது. திரும்பத்திரும்ப மறுப்பு அறிக்கை விடுவதாலும் சவால் விடுவதாலும் பிரச்சினை தீர்ந்துவிடாது. பிரச்சினையைப் புரிந்துகொண்டு தீர்வு காண்பதிலேயே ஆட்சியாளர்களின் நேர்மைத்தன்மை வெளிப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment