Monday, January 9, 2012

யாழில் காணி உறுதி மற்றும் சோலை வரி பிரச்சினை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் டக்ளஸ்


விசேட அமைச்சரவைப் பத்திரம் மூலம் யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவின் கீழான கிராம மக்களின் உறுதி மற்றும் சோலைவரிப் பிரச்சினைகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மக்களுக்கு உறுதிமொழி வழங்கினார்.
யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான மக்கள் இன்று அமைச்சரின் யாழ். அலுவலகத்திற்கு வருகைதந்து தமது பிரச்சினைகள் தொடர்பில் கோரிக்கைகளை முன்வைத்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்களது கோரிக்கைகள் மற்றும் தேவைகள் தொடர்பாக ஏற்கனவே துறைசார்ந்தவர்களால் தனது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் இந்த வியடம் தொடர்பில் அவற்றை நிறைவேற்றுவது குறைந்தது ஒரு மாத கால அவகாசம் தேவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த விடயங்கள் தொடர்பாக இம்மாதம் 12ம் திகதி விசேட கலந்துரையாடலொன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் அதன் போது துறைசார்ந்த அதிகாரிகள் உள்ளடங்கலாக ஒவ்வொரு கிராமங்களையும் பிரதிநித்துவப்படுத்தும் வகையில் மக்கள் பிரதிநிதிகளும் சமூகமளித்து தமது பிரச்சினைகள் தொடர்பாக எடுத்துரைக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
இதன்பிரகாரம் விசேட அமைச்சரவைப் பத்திரம் மூலம் மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பில் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமெனவும், அதற்கு மக்களது ஒத்துழைப்பும் ஒத்தாசையும் முக்கியமானது என்றும் சுட்டிக்காட்டிய அமைச்சர் அவர்கள் குறித்த கிராமங்களுக்கும் தாம் நேரடியாக விஜயம் மேற்கொண்டு நிலமைகள் குறித்து ஆராயவுள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதன் போது தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment