Thursday, December 15, 2011

இலங்கையின் கடற்பரப்பு கொந்தளிப்பாக அமையும்! வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை


இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்பு இன்று சற்று கொந்தளிப்பாக அமையலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று வடகிழக்கு திசையில் இருந்து மணித்தியாலத்திற்கு 20 தொடக்கம் 30 கிலோமீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசக்கூடும் என திணைக்களத்தின் வானிலை நிபுணர் மெரில் மென்டிஸ் தெரிவித்துள்ளார்.
காற்றின் வேகம் சில சந்தர்ப்பங்களில் மணித்தியாலத்திற்கு 50 தொடக்கம் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாம் என்பதால் நாட்டை சூழவுள்ள கடற்பரப்பு சில சந்தர்ப்பங்களில் கொந்தளிப்பாக காணப்படும் என அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
ஊவா மற்றும் தென் மாகாணங்களில் சில பிரதேசங்களில் கடும் மழை பெய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் அல்லது மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதால் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் வானிலை நிபுணர் மெரில் மென்டிஸ் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment