Monday, December 26, 2011

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் மாவட்ட மற்றும் தேசிய ரீதியிலான நிலைகளில் குழப்பம்: பரீட்சைத் திணைக்களம்


கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதில் பல சிக்கல்கள் காணப்படுவதாகவும் தற்போது அதனை சீர்செய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் பரீட்சைத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாவட்ட மற்றும் தேசிய ரீதியிலான நிலைகளில் குழப்பங்கள் காணப்படுவதால் மாவட்ட, தேசிய ரீதியிலான நிலைகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் வெட்டுப்புள்ளி மற்றும் பாடப் பெறுபேறுகளில் எவ்வித குழப்பங்களும் இல்லை எனவும் உயர் கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் கடந்த 9ம் திகதி தொடக்கம் இழுபறி நிலையே ஏற்பட்டு வந்தது. எனினும் நேற்று இரவு 11 மணிக்குப் பின்னரே பரீட்சைப் பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளிடப்பட்டன.
வெளியிடப்பட்ட பெறுபேறுகளின் அடிப்படையில், யாழ்ப்பாணம் உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரியைச் சேர்ந்த மாணவன் கணிதப்பிரிவில் தேசிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையிலேயே, மாவட்ட மற்றும் தேசிய ரீதியிலான நிலையில் குழப்பநிலை காணப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment