Tuesday, December 27, 2011

கீரிமலை இந்து மயானம்! மக்கள் போராட்டத்தின் பின் பாவனைக்காக கடற்படை அனுமதி


வலிகாமம் வடக்கு கீரிமலை பகுதியில் கடந்த 21வருடங்களாக மூடப்பட்டிருந்த செம்மண்காடு இந்து மயானம் பிரதேச மக்களின் கடுமையான போராட்டத்தையடுத்து நேற்று முதல் மக்கள் பாவனைக்காக கடற்படையினரால் திறந்து விடப்பட்டிருக்கின்றது.
கடந்த 21வருடங்களாக இந்தப் பகுதி உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வைக்குள் அடக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 6மாதகாலத்திற்கு முன்னர் இந்த பகுதி விடுவிக்கப்பட்டிருந்தது.
எனினும் பிரதேச மக்களின் பயன்பாட்டில் இருந்து வந்த குறித்த மயானம் மக்களிடம் கையளிக்கப்படாத நிலையில் தொடர்ந்தும் இந்தப் பகுதியில் கடற்படையினர் தமது நடமாட்டத்தை தொடர்ந்திருந்தனர்.
இதனால் மக்களுக்கு மயானம் இல்லாமல் இருந்து வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை  குறித்த பகுதியில் முதியவரொருவர் காலமாகியுள்ளார். இவரது இறுதிச் சடங்குகளை குறித்த மயானத்தில் நடத்த அனுமதியளிக்குமாறு மக்கள் கடற்படையை கோரியிருந்தனர்.
எனினும் இதற்கு கடற்படை உடன்பட்டிராத நிலையில் இறந்தவரின் சடலத்துடன் வீதியில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக மக்கள் அச்சுறுத்தல் விடுத்தனர். இந்த நிலையில் மாற்று நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் கடற்படை குறித்த மயானத்தை பொதுமக்களிடம் கையளிக்க முன்வந்திருக்கின்றது.
எனினும் குறித்த மயானத்திற்குச் செல்லும் வீதி தொடர்ந்தும் கடற்படையினரின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகின்றது. இதனால் தற்போது கடற்கரையை சுற்றியே பொதுமக்கள் சென்று வருகின்றனர்.
மேலும் மயானத்திற்குரிய வீதியை திறப்பதற்கு அமைச்சர் டக்ளஸிற்கு கோரிக்கை கடிதம் எழுதுமாறு கடற்படை அரசியல் செய்வதாக மக்கள் தெரிவிக்கின்றனர். எனினும் மயானம் திறக்கப்பட்டதுபோல் வீதியும் திறக்கப்படவேண்டும் என மக்கள் தெரிவித்திருக்கின்றர்.
இதேவேளை மக்களுடன் இணைந்து வலிவடக்கு கூட்டமைப்பு பிரதேச சபை உறுப்பினர்கள் எஸ்.சுகிர்தன், எஸ்.சஜீபன், எஸ்.மதி ஆகியேர் இந்த போராட்டத்தில் பங்கெடுத்திருந்தனர். இந்நிலையில் குறித்த முதியவரின் சடலம் மாலை 3மணியளவில் தகனம் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment