Saturday, December 31, 2011

பெறுபேறு சர்ச்சைக்கு தீர்வாக வாழ்க்கை முழுவதும் ஒரே சுட்டெண் அறிமுகம்

பரீட்சை பெறுபெறுகளில் ஏற்படும் சர்ச்சைகளை தீர்க்கும் நோக்கில் வாழ்க்கை முழுவதும் பயன்படுத்தக் கூடிய ஒரே சுட்டெண்ணை அறிமுகம் செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சார்த்திகள் தோற்றும் சகல பரீட்சைகளிலும் ஒரே சுட்டெண்ணை பயன்படுத்தக் கூடிய சாத்தியம் தொடர்பில் பரீட்சைத் திணைக்களம் ஆராய்ந்து வருவதாகவும், அநேகமாக இந்த சுட்டெண் தேசிய அடையாள அட்டையாக அமையக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுட்டெண் பிரச்சினையினால் இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் பல்வேறு குழப்ப நிலைமைகள் எழுந்திருந்ததன.
எனவே, எதிர்காலத்தில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் இலங்கை பரீட்சை திணைக்களம் ஒரே சுட்டெண் திட்டத்தை பரிந்துரை செய்துள்ளது.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம், உயர்தரம் மற்றும் பல்கலைக்கழகம் உள்ளிட்ட முக்கிய பரீட்சைகளில் ஒரே பரீட்சை சுட்டெண்ணைப் பயன்படுத்துவதனால் குழப்ப நிலைமைகளை தவிர்க்க முடியும் எனவும் பரீட்சைத் திணைக்களம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இதேவேளை, புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் போது பயன்படுத்தும் சுட்டெண்ணை வாழ்க்கை முழுவதிலுமான பரீட்சைகளுக்கு பயன்படுத்துவது குறித்தும் ஆராயப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment