Thursday, December 29, 2011

இலங்கை செல்லும் இந்திய வெளியுறவு அமைச்சர் : தீர்வுத் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை?


இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா முக்கியத்துவம் வாய்ந்த விஜயமொன்றை மேற்கொண்டு ஜனவரி நடுப்பகுதியில் இலங்கை செல்லவுள்ளார்.
இதன் போது அவர் இங்கு பலதரப்பினரையும் சந்தித்தித்துப் பேசவுள்ளதாக ராஜதந்திர தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர் கிருஷ்ணாவின் இந்த விஜயம் அரசு தமிழ்க் கூட்டமைப்பு இடையே நடைபெறும் பேச்சுக்கள் தொடர்பாக இந்திய அரசு கொண்டுள்ள நிலைப்பாட்டை இருதரப்புக்கும் வலியுறுத்துவதாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது.
காணி, காவற்துறை அதிகாரங்களைப் பகிர்வது குறித்த விவகாரத்தால் அரசுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான பேச்சுகள் இக்கட்டான ஒரு நிலையில் உள்ளன. இனப்பிரச்சினைக்கான தீர்வில் காணி, காவற்துறை அதிகாரங்களை வழங்க முடியாது என அரசு பகிரங்கமாகவே தெரிவித்து வருகிறது.
அப்படியான ஒரு தீர்வை ஏற்கவே மாட்டோம் என பதிலுக்கு கூட்டமைப்பும் தெரிவித்து விட்டது. இதனால் அரசு கூட்டமைப்பு இடையேயான பேச்சுக்கள் முறிவடையக்கூடிய நிலையை எட்டியுள்ள வேளையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் இந்த விஜயம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்குமெனத் தெரிவிக்கப்படுகின்றது. அதிகாரப் பகிர்வு குறித்துக் கிருஷ்ணா இருதரப்புகளுடனும் பேச்சு நடத்துவார் எனவும் கொழும்பிலுள்ள உயர்மட்ட இராஜதந்திர தரப்புத் தகவல்கள் நேற்றுத் தெரிவித்தன.
இரண்டு தினங்கள் கொழும்பில் தங்கியிருக்கும் இந்திய வெளியுறவுத்துறைச் செயலர், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் பேச்சு நடத்தவுள்ளார். அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உட்பட்ட தமிழ்க் கட்சிகளின் முக்கியஸ்தர்களுடனும் கிருஷ்ணா நேரடிப் பேச்சுகளை நடத்தவுள்ளார்.இந்தியாவின் உதவியுடன் நிர்மாணிக் கப்பட்டுவரும் வடக்கு வீடமைப்புத் திட்டத்தையும் இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் பார்வையிடவுள்ளாரெனத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment